
ஹுருன் பணக்காரர்கள் பட்டியல் சென்ற வாரம் வெளியானது. அதில் இந்தியாவின் முதல் நான்கு பணக்காரப் பெண் தொழில் முனைவோர் பட்டியலில் ரூ.50,170 கோடி சொத்துகளுடன் ஜெயஸ்ரீ உல்லால் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
ராதா வேம்பு ரூ.46,580 கோடி சொத்துடன் இரண்டாம் இடத்தையும், நைக்கா நிறுவனத்தின் தலைவியான ஃபல்குனி நய்யார் ரூ.39,810 கோடி சொத்துடன் மூன்றாவது இடத்தையும், பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா ரூ.29,330 கோடி சொத்துகளுடன் நான்காவது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். இந்த நான்கு பெண்மணிகளும் ஆண் தொழில் அதிபர்கள் பலருக்குச் சமமான சொத்துடன் தனித்து நிற்கிறார்கள்.
ஜெயஸ்ரீ உல்லால்
2008 முதல் கணினி நெட்வொர்க்கிங் நிறுவனமான 'அரிஸ்டா' நெட்வொர்க்கின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்து வருகிறார், ஜெயஸ்ரீ உல்லால். அரிஸ்டா நெட்வொர்க்ஸ் கடந்த ஆண்டு 7 பில்லியன் டாலர் வருவாயைப் பதிவு செய்தது.
இது முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனமான ஸ்னோஃப்ளேக்கின் இயக்குநர்கள் குழுவில் உல்லால் இருந்தார். அரிஸ்டாவின் பங்குகளில் சுமார் 3 சதவீதத்தை அவர் சொந்தமாக வைத்திருக்கிறார். அதில் ஒரு பகுதி அவரது இரண்டு குழந்தைகள், மருமகள் மற்றும் மருமகனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கணினித் துறையில் பழுத்த அனுபவம் உல்லாலுக்கு உண்டு. வயது 64.
ராதா வேம்பு:
'ஜோஹோ' கார்ப் நிறுவனத்தில் ராதா வேம்பு பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கிறார். இது வணிக மென்பொருளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. 'ஜோஹோ' நிறுவனத்தை அவரது மூத்த சகோதரர் ஸ்ரீதர் வேம்பு (அரட்டை செயலியை உருவாக்கியவர்) இணைந்து நிறுவினார். ராதா 1996-இல் தொழில் முனைவோராக வாழ்க்கையைத் தொடங்கினார். ராதா வேம்பு ஐ.ஐ.டி. சென்னையில் தொழில்துறை மேலாண்மையில் பட்டதாரி ஆவார். ராதாவின் வயது 52.
ஃபல்குனி நய்யார்
ஃபல்குனி நாயர் முதலீட்டு வங்கியாளராக தனது வேலையை விட்டு வெளியேறிய பிறகு, 2022 -இல் அழகு சாதனப் பொருள்களின் சில்லறை விற்பனையாளரான 'நைகா' நிறுவனத்தைத் தொடங்கினார்.
'கவனத்தில் இருப்பவர்' என்று பொருள்படும் 'நைகா' அழகு சாதனப் பொருள்கள், உடைகள் ஆன்லைனிலும், இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 200 கடைகள் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. நைகாவின் முன்னணி முதலீட்டாளர்களில் அமெரிக்காவின் தனியார் பங்கு நிறுவனமான டிபிஜி குரோத் மற்றும் பில்லியனர்கள் ஹர்ஷ் மரிவாலா மற்றும் ஹாரி பங்கா ஆகியோர் அடங்குவர். ஃபல்குனி நய்யாரின் வயது 62.
கிரண் மஜும்தார்-ஷா
முதல் தலைமுறை தொழில்முனைவோர் மற்றும் உயிரித் தொழில்நுட்பத்தில் 4 தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமுள்ள கிரண் மஜும்தார்-ஷா, தனது உயிரித் தொழில்நுட்பப் பயணத்தை 1978-இல் இந்தியாவில் தனது கேரேஜில் தொடங்கினார்.
ஷா, பயோகான் லிமிடெட் மற்றும் பயோகான் பயோலாஜிக்ஸ் லிமிடெட்டின் நிர்வாகத் தலைவராக உள்ளார். 72 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்குகிறார். இன்சுலினை மாத்திரை வடிவத்தில் விற்பனைக்கு விடவேண்டும் என்றுதான் பயோகான் நிறுவனத்தைத் தொடங்கினார். ஷா பல வெற்றிகள் கண்டாலும், இன்சுலினை மாத்திரை வடிவில் கொண்டு அறிவதில் இதுவரை வெற்றி பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.