திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் எனக் கடந்த 20 வருடங்களாக தமிழ்த் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மைலாஞ்சி'. ஸ்ரீராம் கார்த்திக், க்ருஷா குரூப், முனீஷ்காந்த், சிங்கம் புலி, தங்கதுரை உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைப்பில் செழியன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 'நாம் ஒருவரை சந்தித்தால் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று தான் கேட்கிறோம். மனநிலை எப்படி இருக்கிறது என்று யாரும் கேட்பதில்லை. எவ்வளவு பணம் இருந்தாலும் மனம் சரியில்லை என்றால் அது பயனற்றுப் போகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும்.
அதனால் மருத்துவத்திலேயே மகத்தான மருத்துவம் மனநல மருத்துவம்தான். மனநலத்தை சரி செய்யும் மருத்துவர் அர்ஜுன் இந்தப் படத்தை தயாரித்திருப்பது மகிழ்ச்சி. கேரளா போன்ற மாநிலங்களில் முதலில் எழுத்தாளர்களுக்கு தான் மரியாதை. அங்கு முதலில் கதையை வாங்கிய பிறகு தான் இயக்குநர், நடிகர் போன்ற விஷயங்களைத் தீர்மானிப்பார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை. அஜயன் பாலா ஒரு சிறந்த எழுத்தாளர்.
நான் அவருடைய எழுத்தின் ரசிகன். பல தருணங்களில் நான் வாசிப்பதற்கு நேரம் இல்லாத போது தலைவர்களைப் பற்றிய சுருக்கமான எழுத்துகளை எழுதித் தருவார். எழுத்தாளரான அஜயன் பாலா திரைப் படைப்பாளியாக வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இலக்கியம் பொய் பேசலாம். புராணம் பொய் பேசலாம். வரலாறு உண்மையை மட்டும் தான் பேசும். அப்படி ஒரு வரலாற்று உண்மையை பதிவு செய்யக் கூடியவர் தான் அஜயன் பாலா' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.