வடகிழக்கு இந்தியாவின் இளைய சகோதரி!

விண்ணை முட்ட வளர்ந்த மலைகள்... அதிகாலை 4 மணிக்கெல்லாம் விடியல்...
வடகிழக்கு இந்தியாவின் இளைய சகோதரி!
Artist-freed
Published on
Updated on
2 min read

விண்ணை முட்ட வளர்ந்த மலைகள்... அதிகாலை 4 மணிக்கெல்லாம் விடியல்... மனிதர்கள் விழிக்கும் முன்பே சாலைகளில் தவழும் மேகக் கூட்டங்கள்... அத்தனை அழகின் எழிலையும் ஒருங்கே கொண்டிருக்கிறது மலைமகளான ஐசால் - மிசோரம் மாநிலத் தலைநகர்.

பாரதத்தின் வடகிழக்கு மாநிலங்களில் இளைய சகோதரியாகப் போற்றப்படும் மிசோரம் மாநிலத்தின் மொத்தப் பரப்பு சுமார் 21,081 சதுர கிலோ மீட்டர். மலைகளையே தரைகளாக்கி அமைந்த மாநிலத்தில் முக்கியத் தொழில் விவசாயம்.

மலைச்சரிவுகளில் சீட்டுக் கட்டுகள் அடுக்கப்பட்டது போல அழகுற அமைந்துள்ளன அடுக்குமாடி வீடுகளும், தங்கும் விடுதிகளும். அங்குள்ள சாலைகள் வளைந்தும், நெளிந்தும், உயர்ந்தும், தாழ்ந்தும் தன் அடிப்படை அமைப்பை இழக்காமல் நவீனமயமாக்கப்பட்டிருப்பது ஆச்சரியம்!

அதிர்ந்து பேசாத மக்கள், அவசரத்துக்குக் கூட ஒலி எழுப்பாத வாகனங்கள், அரசியல் கொடிக் கம்பங்கள் இல்லாத அகலமில்லாத சாலைகள், அரசியல், சினிமா, விளம்பர போஸ்டர்கள் இல்லாத சுவர்கள், மதுக்கடை இல்லாத தெருக்கள்...

ராஜ்பவன், சட்டப்பேரவைக் கூட்ட அரங்கம், போர் நினைவிடம் ஆகியவற்றுடன் ஐசாலின் அடையாளமான இரும்புப் பாலமும் குறிப்பிடத்தக்கது. போக்குவரத்துக்கான போலீஸாரைவிட சட்டம், ஒழுங்கு போலீஸார் குறைவாகவே நடமாடுகின்றனர்.

கார்களும், இருசக்கர வாகனங்களும் போக்குவரத்தின் முக்கிய அம்சங்களாகியிருப்பதால், அதைப் பழுதுநீக்கும் தொழிலில் ஆண்களுக்குச் சமமாக பெண்களும் உள்ளனர்.

விவசாயத்தில் நெல் விளைச்சல், வாழை, மூங்கில் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இஞ்சி, மஞ்சள், ஆர்க்கிட் பூக்கள் இடம்பிடிக்கிறது.

Artist-freed

மலை வாழ் கிராமத்துக் குடிசைகள் அதிகமாக உள்ளன. மூங்கில் குருத்துகள், சிறு மிளகாய் விற்பனையும் மக்களிடையே அதிகம் உள்ளது. அதற்கடுத்தபடியாக ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழி வளர்த்தலையும் அவர்கள் முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

தலைநகரிலிருந்து 35 கிலோ மீட்டர் தள்ளியே விமானநிலையம் உள்ளது. பேருந்து போக்குவரத்து என்பது நினைத்த நேரத்தில் செல்லக்கூடியதாக இல்லை. மலைகளும், பள்ளத்தாக்குகளும், சிறு ஓடைகளும், ஆறுகளும் மிசோரமில் மிகுதியாகவே உள்ளன.

இந்த நிலையில்தான் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, மிசோரமின் தலைநகர் அருகே சாய்ரங்கில் முதன்முறையாக ரயில் நிலையம் அமைத்து, அதனுடன் அசாம் மாநில எல்லை அருகேயுள்ள பைரவி ரயில் நிலையம் வரை 52 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மிசோரம் பூகோள ரீதியில் நிலநடுக்கப் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், அங்கு மழைக்காலங்களில் நிலச்சரிவும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அதனால்தான் சாலைப் போக்குவரத்தே பல இடங்களில் சாத்தியமில்லாத நிலையில், ரயில் போக்குவரத்து எனும் கனவு தற்போது அம்மாநில மக்களிடையே நனவாக்கப்பட்டுள்ளது.

மிசோரமில் உள்ள பைரவி எனும் இடத்தில்தான் ஆங்கிலேயர் காலத்தில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கிருந்து அசாம் எல்லை 5 கிலோ மீட்டர் தூரம்தான். ஆகவே, மிசோரமில் மொத்த ரயில் சேவை பாதையே 5 கிலோ மீட்டர் என்பதுதான் கடந்த 75 ஆண்டுகால நிலையாகும். அதை தற்போதைய மத்திய அரசு முறியடித்து மிசோரம் மக்களை ரயில் பாதை வழியாக தேசிய நீரோட்டத்தில் இணைத்துள்ளது.

சாதாரணமாக தரையில் ரயில் பாதை அமைக்கவே பல ஆண்டுகளாகும் நிலையில், மலைகளுக்கு நடுவே அமைப்பது என்பது சவாலே சமாளி எனும் கதையாகவே இருந்ததாகக் குறிப்பிடுகிறார்கள் தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர்கள்.

பைரவியிலிருந்து சாய்ரங் வரையில் மொத்தம் 142 நீரோட்ட ஆறுகள், பள்ளத்தாக்குக் கால்வாய்கள் உள்ளன. அதனால் ரயில் பாதையில் 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் 144 மீட்டர் உயரமுள்ள சாய்ரங் பாலமே பெரியதாகும்.

ரயில் பயணத்தின்போது 48 இடங்களில் மலையைக் குடைந்து சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 12 கிலோ மீட்டர் தூரம் சுரங்கத்திலே பயணிக்கலாம்.

மலைகள், பசுமை குறுமரங்கள் என ரயில் பயணத்தோடு இடையிடையே குடிசைகள், அதில் வாழும் மக்கள் எனப் புதிய உலகத்தைக் கண்டுகளிக்கும் அனுபவத்தை ரயில் பயணம் தரும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார், தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி செந்தமிழ்ச்செல்வன் மற்றும் முதுநிலை மக்கள் தொடர்பு அதிகாரி ஓம்பிரகாஷ்.

இந்த ரயில் பாதை அமைப்பு இத்துடன் முடியவில்லை. மணிப்பூர், நாகலாந்து, சிக்கிம் ஆகிய மாநில இணைப்பாகவும் தொடரவுள்ளது. அத்துடன் மியான்மர் நாட்டுடன் ரயில் பாதை தொடர்புத் திட்டத்துக்கான பூர்வாங்கப் பணிகளும் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆக... அகண்ட பாரதம் என்ற சரித்திரக்கால கனவு ரயில் பாதை இணைப்பின் மூலம் நனவாகும் என்றால் மிகையல்ல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com