வாழ்க்கை வாழ்வதற்கே..!

காடு, மேடு, பள்ளம், முள்கள் சூழ்ந்த வாழ்க்கையை பூங்காவனமாக மாற்றி, இயற்கைக்கும் மனிதர் குலத்துக்கும் பயனுள்ளதாக அமைத்துக்கொண்டவர், இந்திய வன அலுவலர் முனைவர் எஸ்.வெங்கடேசன்.
வாழ்க்கை வாழ்வதற்கே..!
Published on
Updated on
2 min read

காடு, மேடு, பள்ளம், முள்கள் சூழ்ந்த வாழ்க்கையை பூங்காவனமாக மாற்றி, இயற்கைக்கும் மனிதர் குலத்துக்கும் பயனுள்ளதாக அமைத்துக்கொண்டவர், இந்திய வன அலுவலர் முனைவர் எஸ்.வெங்கடேசன். கர்நாடக மாநில வனத் தொழில் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும், கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராகவும் பணியாற்றி வரும் இவர், இயற்கை எனும் பெருவளத்தைக் காப்பாற்றுவதில் 25 ஆண்டுகளாக தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கூறியது:

'மயிலாடுதுறை மாவட்டம், பஞ்சாக்கை கிராமம்தான் எனது சொந்த ஊர். தந்தை சுந்தரமூர்த்தி வட்டாட்சியராகப் பணியாற்றியவர். என்னோடு சேர்த்து 4 பேர். முதலில் அக்கா, அதன்பிறகு நான், தம்பி, தங்கை. எனது குறும்புத்தனத்தைச் சகித்துக் கொள்ள முடியாத அப்பா, காரைக்கால் செயின்ட் மேரீஸ் பள்ளியில் சேர்த்தார். விடுதியில் தங்கிப் படித்தேன். 4-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்த எனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதால் 3ஆம் வகுப்பில் தான் சேர்த்துக்கொண்டனர். ஆங்கிலத்தை ஆர்வத்தோடு படித்தேன்.

1990-இல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலத்தில் மாநிலத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று, அன்றைய முதல்வர் வைத்திலிங்கத்திடம் பரிசு பெற்றேன். இந்த நிகழ்வானது "முயன்றால் எதையும் சாதிக்க முடியும்' என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்தது. கடலூரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் +2 முடித்தேன்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள வன கல்லூரி, ஆராய்ச்சி மையத்தில் பி.எஸ்.சி. வனம் படித்தேன். யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பித்தேன். முதன்மைத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றதில் மகிழ்ச்சி.

1997-இல் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. வேளாண்மை படிப்பில் சேர்ந்திருந்தேன். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு வரலாறு படித்துக் கொண்டே எம்.எஸ்.சி. படித்தேன். அந்த ஆண்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ். இரு தேர்வுகளிலும் தோல்வி அடைந்துவிட்டேன். வேளாண்மை பாடங்களைப் படித்திருப்பதால் ஐ.எஃப்.எஸ். தான் சரி என்று முடிவுக்கு வந்தேன். 1998-இல் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.

1999-இல் நேர்காணலில் அகில இந்திய அளவில் 12-ஆவது இடம்பிடித்து ஐ.எஃப்.எஸ். பணிக்குத் தேர்வு செய்யப்பட்டேன். அப்போது 3 லட்சம் பேர் தேர்வு எழுதியதில், 30 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றோம்.

உத்தரகண்ட் மாநிலத்துக்கு உள்பட்ட டெஹ்ராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாதெமியில் பயிற்சியை முடித்த பிறகு, 2001-இல் கர்நாடகத்தில் பணி நியமனம் பெற்றேன். சென்னகிரியில் கூடுதல் வனப் பாதுகாவலராகப் பணியில் சேர்ந்தேன். 10,000 ஏக்கரில் பரந்துவிரிந்த வனப்பகுதியில் ஈட்டிமரம் கடத்தலைத் தடுத்து நிறுத்தினேன்.

2003-இல் அங்கிருந்து கார்வாரில் பணியில் சேர்ந்தேன். அங்கு தென்மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பணியாற்றியபோது, 2005-இல் எதிர்பாராத சம்பவம் நடந்தது.

எனது நண்பர் மணிகண்டனின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாததால், கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வருவதாகக் கூறியிருந்தார். என் மனைவி வைரலட்சுமி, மகன் ராகுலுடன் காரில் சென்றுவிட்டு, கார்வாருக்கு திரும்பினேன். அப்போது பெரிய விபத்தில் சிக்கினேன். சம்பவ இடத்திலேயே எனது நினைவு தப்பிவிட்டது. மனைவி, ஒரு வயது குழந்தைக்குச் சரியான காயம். கோவாவில் உள்ள மருத்துவமனையில் எனது நிலையைப் பார்த்த மருத்துவர், நான் இறந்துவிட்டதாகக் கருதினார். மனைவி வைரலட்சுமி மனம் உடைந்துவிட்டு, மகனுடன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்துவிட்டார்.

டூட்டிக்கு வந்த மருத்துவர், எனது உடலை ஸ்கேன் எடுக்கக் கூறியுள்ளார். அப்போது இதயத் துடிப்பு இருப்பது தெரிய வந்ததால், உடனடியாக அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினர். நினைவு தவறியதோடு, வலது பக்கம் பக்கவாதமும் ஏற்பட்டுவிட்டது. 3 மாதங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுவந்தேன். மருத்துவர்கள் கொடுத்த சிகிச்சை, நம்பிக்கையின் விளைவாக உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. 3 மாதங்களுக்குப் பிறகு நினைவு வந்தது. 6 மாத பயிற்சிக்குப் பிறகு கைகள், கால்கள் இயல்புநிலைக்கு வந்தன. இந்தக் காலகட்டத்தில் நண்பர்கள், குடும்பத்தினர் துணையாக இருந்தனர்.

இதனிடையே, மாற்றுத்திறனாளியான எனது மகனுக்கு 12 முறை அறுவைச் சிகிச்சை செய்தும் அவரது கால்களை சீராக்க முடியவில்லை. என் மகன் +2 படித்தபோது, புற்றுநோய் வந்துவிட்டது. அதில் இருந்து மகனை விடுவிக்க நானும், மனைவியும் போராடினோம். குணமான ராகுல், மருத்துவராகியுள்ளார். இதுபோன்ற போராட்டங்கள் என் மன உறுதியை அசைத்துப் பார்க்கவில்லை. இலக்கியம் தான் என்னை தொய்வில்லாமல் இயக்கி வருகிறது.

கார்வாரை தொடர்ந்து கொப்பள், சிவமொக்கா, சிக்கமகளூரு, மைசூரு போன்ற மாவட்டங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்தேன். தற்போது கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக பெங்களூரில் பணியாற்றி வருகிறேன்.

இளம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து "டீக்கரை' என்ற டெலிகிராம் குழுவை நடத்தி வந்தோம். அந்தக் குழுவில் எனது எண்ணங்களை கட்டுரைகளாக எழுதத் தொடங்கினேன். தோல்வி, துரோகம், துன்பம் போன்றவற்றால் மனம் உடைந்துவிடாமல், தொடர்ந்து வாழ்க்கையை எப்படிக் கொண்டாடி மகிழ்வது? என்பதை விளக்கி 30 வாரங்களுக்கு கட்டுரைகளை எழுதினேன்.

இவற்றை தொகுத்து 2022ஆம் ஆண்டு "வாங்க பாஸ், வாழ்க்கையை கொண்டாடலாம்!' என்ற நூலாக வெளியிட்டேன். ஆங்கிலநூல் ஒன்றையும் வெளியிட்டேன். இதை தமிழில் மொழிபெயர்த்து வருகிறேன். வாங்க, இயற்கையோடு வாழ்க்கையைக் கொண்டாடலாம்!'' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com