கௌஹாத்தி விமான நிலையத்தின் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் இரண்டாம் முனையம் 'வாழும் காடு' என்று அழைக்கப்படுகிறது.
நாட்டின் விமான நிலைய உள்கட்டமைப்பு கலையில் வித்தியாசமான முறையில் வடிவமைத்திருக்கும் மும்பையைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் நூர் கரீம் மேற்பார்வையில், முழுவதும் மூங்கில்களையே கொண்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த முனையம் கலை அழகுடன் அமைந்திருப்பதால்தான் இந்தப் பெயரைப் பெற்றிருக்கிறது. மூங்கில் காடுகள் நிறைந்த இயற்கை வளமுள்ள பசுமை மாநிலமான அஸ்ஸாமில் உருவாகியுள்ள இந்த முனையமானது 2025 சர்வதேச கட்டடக்கலை விருதைப் பெற்று உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதுகுறித்து நூர் கரீம் கூறியது:
'அஸ்ஸாம் நரிவால் போல தோற்றம் தரும் புகழ்பெற்ற ஆர்க்கிட் மலர்களை முனையத்தில் பார்க்கலாம். பயணிகளைக் கவரும் வகையில், மினி காசிரங்கா தேசியப் பூங்காவையும் அமைத்துள்ளேன். காங்கிரீட் கட்டமைப்பைத் திணிப்பதுக்குப் பதிலாக இயற்கையான சுற்றுச்சூழலை இந்த முனையம் அறிமுகப்படுத்துகிறது.
மேற்கூரை ஜன்னல்கள் அதிகம் உள்ளதால், பகல் நேரத்தில் மின் விளக்குகளின் பயன்பாடு இல்லை. வெப்பமும் குறைந்துள்ளது. பரபரப்பான விமான நிலையங்களில் அரிதாகக் காணப்படும் அமைதியான சூழலையும் இந்த விமான நிலையம் உருவாக்கியுள்ளது. மேம்படுத்தப்பட்ட காற்றோட்டம், செயற்கை விளக்குகளைச் சார்ந்திருப்பதைத் தவிர்த்தல் மின் சக்தி நுகர்வைக் கணிசமாகக் குறைக்கின்றன'' என்கிறார் நூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.