

தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 'அரும்பாவூர்' எனும் கிராமம் மரத்தாலான கைவினைப் பொருள்களுக்கு உலக அளவில் புகழ் பெற்றுள்ளது. கலைப்பொருள்கள், தேர்கள், அலங்காரப் பொருள்களில் தனித்துவமான பாணியை சிற்பிகள் கையாள்கின்றனர்.
வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப வடிவமைத்துத் தருவதோடு, பாரம்பரிய நெறிப்படி தரத்துடன் செய்வதே அரும்பாவூர் சிற்பங்களின் பெருமைக்குக் காரணம். கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் இந்தக் கிராமத்திலும், பெருநகரங்களிலும் விற்பனை அரங்குகளில் விற்பனையாகின்றன. பல வெளிநாடுகளிலும் சிறப்பு விற்பனை மேளாக்கள் நடத்தப்படுகின்றன.
இதன் சிறப்புகள் குறித்து சிற்பி மணிகண்டனிடம் பேசியபோது:
'அரும்பாவூர் மரச்சிற்பங்கள் புவிசார் குறியீடு பெற்றவை. சுமார் 300 ஆண்டுகாலப் பழமை பெருமை அரும்பாவூர் சிற்பங்களுக்கு உண்டு.
தெய்விகம், கலாசாரத்தைப் போற்றிடும் படைப்புகளை மட்டும் உருவாக்குவதே எங்களது தனித்தன்மை.
சுவர் அலங்காரங்கள், பேனல்கள், பிராக்கெட்டுகள், வரவேற்பறை சிலைகள், நிலைக்கதவு, தலைவாயில், கடவுளர் சார்ந்த வேலைப்பாடுகள், பூஜை மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்து வகைத்தயாரிப்புகளும் இங்குண்டு. கோயில் திருமேனிகள், முகங்கள், திருவிழா வாகனங்கள், ரதங்கள் உள்ளிட்டவையும் உருவாக்கப்படுகின்றன.
மதுரையில் இருந்து புலம் பெயர்ந்த குடும்பங்களின் வாரிசுகள் வசிக்கும் இந்தக் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
தயாரிப்பு முறை: வேங்கை, மாவிலங்கை, தேக்கு, அத்தி, பூவாகை முதலான மரங்களைத்தான் பயன்படுத்துகிறோம். தேர் சிற்பங்கள் என்றால் இலுப்பை, கோயில் கதவு என்றால் வேங்கை அல்லது தேக்கு, கடவுள் என்றால் அத்தி என்று ஒவ்வொன்றுக்கும் உகந்த மரங்களை சிற்ப சாஸ்திர விதிகளின்படி பயன்படுத்துகிறோம்.
முதிர்ந்த மரக்கட்டைகளில் சுற்றியுள்ள வளையமான வெண்மைப் பகுதியை நீக்கி விடுவோம். மையத்தில் உள்ள வைரம் பாய்ந்த பகுதியே உதவும். பெரிய சிற்பங்களுக்கு 50 ஆண்டு வயது முதிர்ந்த மரங்கள் சரியாக இருக்கும். குறுஞ்சிற்பங்களுக்கு குறைந்த அளவிலான வயது முதிர்ந்த மரங்களே போதுமானவை. தெரிவு செய்த மரத்துண்டுகளை வாங்கி வந்து இழைத்து சீராக்குவது முதல் பணி. இதில் தேவையான சிற்பத்தின் உருவத்தை வரைவோம்.
பின்னர் அதனைச் சரியான வடிவத்துக்குக் கொண்டு வருவோம். இதனை 'ஜாடித்தல்' என்போம். பின்னர் 'செக்கடம்' எனப்படும் மூன்றாவது நிலை. அதாவது டிசைனுக்கு ஏற்றவாறு மென்மையாகச் செதுக்கிக் கொண்டு வருதலாகும். நான்காவதாக நகை, உடைகள், நுணுக்கமான வேலைப்பாடுகள். இதனை 'நகாசு செய்தல்' என்போம்.
இறுதியாகத்தான் முகத்தை அமைப்போம். இந்த ஐந்து நிலைகள் முடிந்தவுடன் 'எமரி பேப்பர்' கொண்டு மெருகேற்றுவோம்.
இதை 'தைத்தல்' என்பார்கள். வடிவத்துக்குத் தகுந்தவாறு பாலிஷ் வேலையின் தன்மையும் மாறுபடும். இதற்குப் பிறகு வர்ணவேலை செய்தல். இதுதான் இறுதிக்கட்டம்.
இயற்கையான தோற்றத்தில் உள்ள எங்களது தயாரிப்புகள் நூறு ஆண்டுகள் ஆனாலும் தன்மை மாறாமல் அப்படியே பளபளப்புடன் இருப்பது சிறப்பு. 'வுட் பாலிஷ்', 'வுட் பினிஷிங்' போன்றவற்றைக் கொண்டு மெருகேற்றி விடுவோம். வட மாநிலங்களைச் சேர்ந்தோரும், வெளிநாட்டவர்களும் வர்ணம் தீட்டப்பட்ட கலைப்பொருள்களையே அதிகம் விரும்புகின்றனர்.
பாதுகாப்பது எப்படி?: மரப் பொருள்களை அதிக வெயில், நீர் ஆகிய இரண்டிலிருந்து பாதுகாத்தாலே, நூறாண்டு கடந்தாலும் அப்படியே இருக்கும். அவ்வப்போது தூய்மையான பருத்தித் துணி கொண்டு துடைப்பது நல்லது. இடுக்குகளில் படியும் தூசுகளை சன்னமான பிரஷ் கொண்டு மென்மையாகத் துடைக்க வேண்டும்.
விதவிதமான விநாயகர், கஜலட்சுமி, கிருஷ்ணர் சிலைகளுக்கு எப்பொழுதும் வரவேற்பு உண்டு. அஷ்ட கணபதியர், கஜலட்சுமி, தசாவதாரச் சிற்பங்கள், பள்ளிகொண்ட பெருமாள், சூரியப்பலகை, கிருஷ்ண லீலா சிற்பங்கள் முதலானவை எங்களுக்குச் சிறப்பான பெயர் வாங்கித் தருபவை.
கடவுளரில் ஒரு அடி முதல் எட்டு அடி வரை உயரம் வரை உள்ள சிற்பங்களைத் தயாரிக்கிறோம். உயரத்துக்கேற்ப சிலைகளின் அகலமும், கனமும் மாறுபடும். அதற்கேற்ப தயாரிப்பதற்கான காலம், விலையும் அதிகரிக்கும். சாதாரணமாக மரத்தின் தன்மை, அளவு, வேலைப்பாடுகளைப் பொறுத்து ரூ.5 ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் வரையிலும் சிற்பங்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இங்கு தயாரிக்கப்படும் சுவாமி வாகனங்கள் ஆயிரக்கணக்கில் நாடு முழுவதும் அனுப்பிவைக்கப்படுகின்றன. சில ஊர்களுக்கு கிராம தேவதைகள், மூலவர் சிலைகளையும் செய்து அளித்திருக்கிறோம்.
இவ்வூரிலிருந்து 400-க்கும் மேற்பட்ட கோயில்களுக்குத் தேர்கள் செய்துள்ளோம். தேர்ப்பணிகள் நடைபெறும்போது அந்தந்த ஊர்களிலேயே தங்கி இருந்து செய்வதும் வழக்கம்தான். வேலையைத் தொடங்கி விட்டால், பிறகு வெள்ளோட்டம் வரை அனைத்து நிலைகளிலும் எங்களது பங்களிப்பு இருக்கும்.
அலங்காரத் தயாரிப்புகளை வசதிப் படைத்தவர்கள் பெரிதும் விரும்பி வாங்கிடுவார்கள். நிலைக்கதவுகள், தலை வாயில் செட், பூஜை மண்டபங்கள் போன்றவை எப்போதும் விற்பனையாகும்.
தலைவாயிலில் பொருத்திடுவதற்காக கஜலட்சுமி, விநாயகர் பொறித்த எம்போஸ்ட் வேலைப்பாடுகள் அதிக அளவில் விற்பனையாகும். வாஸ்துவின்படி, சூரியப் பலகைகள் அமைப்பதையும் பெரிதும் விரும்புகிறார்கள். பெரிய நிறுவனங்கள், ஹோட்டல்களில் அலங்கார வளைவுகள், அலங்காரத் தொங்கல் வடிவங்கள், சுவர் பேனல்கள் வைக்க அவை அதிக அளவில் விற்பனையாகின்றன'' என்கிறார் மணிகண்டன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.