மயிலாப்பூர் திருவிழா...

சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மயிலாப்பூரில் 20 ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில் சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தினர் 'மயிலாப்பூர் திருவிழா'வை கோலாகலமாக நடத்தி வருகின்றனர்.
மயிலாப்பூர் திருவிழா...
Updated on
2 min read

சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மயிலாப்பூரில் 20 ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில் சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தினர் 'மயிலாப்பூர் திருவிழா'வை கோலாகலமாக நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு திருவிழாவில் மயிலை கபாலீஸ்வரர் கோயிலை ஒட்டிய மாட வீதிகளில் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், பயிலரங்குகள் எனப் பலவிதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றில் மயிலாப்பூர், சாந்தோம் மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.

இந்தத் திருவிழாவின் சுவாரசியம் குறித்து அதன் இயக்குநர் வின்சென்ட் டிசூசா கூறியது:

'2001-ஆம் ஆண்டில் மார்கழி மாதத்தில், கோலம், ரங்கோலி போட்டிகளை மாட வீதியில் ஒரே இடத்தில் நடத்தினோம். ஆண்டுதோறும் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. அதுவே இன்று மயிலாப்பூர் திருவிழாவாக விரிவடைந்துள்ளது.

இந்த விழா சென்னையின் செழுமையான கலாசாரம், பாரம்பரியம், இசை, நடனம், பாரம்பரிய நடைப்பயணம், கோலம், வீதி நாடகம் மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி, விற்பனை போன்ற பல்வகையான நிகழ்ச்சிகளின் மூலம் கொண்டாடப்படுகிறது.

'மயிலாப்பூர் திருவிழா' என்றாலே நான்கு மாட வீதிகளும், நாகேஸ்வர ராவ் பூங்காவும் களை கட்டிவிடும். இந்த இடங்கள் கலை, பாரம்பரியத்தின் உயிரோட்டமான மேடைகளாக புதிய பரிமாணம் பெற்றுவிடும். தற்போது நாகேஸ்வர ராவ் பூங்காவில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுவருவதால், மாடவீதிகளில் மட்டும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

முந்தைய ஆண்டுகளில் பூங்காவில் நடத்தப்பட்ட இசைக்கச்சேரிகள் ஏராளமான ரசிகர்களை ஈர்த்தன. இந்த ஆண்டு கோயிலில் காலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை தினமும் கச்சேரிகள் நடைபெற்றன. கலாசார ஆர்வலர்களை ஆயிரக்கணக்கில் ஈர்க்கும் பெருமை கொண்ட 'மயிலாப்பூர் திருவிழா'வால் சென்னையின் 'கலாசாரத்தின் மையம்' என்ற அந்தஸ்து மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.

பொன்னம்பல வாத்தியார் தெருவில் வசித்த முதியவர் ஒருவர் சதுரங்க ஆர்வலர். அவர் ஏராளமானவர்களுக்கு சதுரங்க விளையாட்டில் ஆர்வம் ஏற்படுத்தினார். ஆகவே, எட்டு முதல் 12 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கு சதுரங்கப் போட்டி நடத்தப்படுகிறது.

அத்துடன் கூட ஆண்டுதோறும் சமையல் போட்டியும் ஜோராக நடக்கும். பாரம்பரியமான பல்லாங்குழி, தாயகட்டப் போட்டிகளும் நடத்தப்படும். இந்த வருடம் சுமார் 50 பேருக்கு காகித குவில்லிங், பானை ஓவியம் ஆகிய கைவினைப் பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

கோயில்கள் வரலாற்று வல்லுநர் சித்ரா மாதவன் மயிலாப்பூரின் முக்கியக் கோயில்களைச் சுற்றிக் காட்டி, அவற்றின் சிறப்புகளை எடுத்துச் சொல்லும் நடை சுற்றுலா மிகவும் பிரபலமானது.

'பிளாஸ்டிக் பைகளுக்கு விடை கொடுப்போம்' என்ற இயக்கம் 15-ஆவது ஆண்டாக இந்த முறையும் முன்னெடுத்து, 10ஆயிரம் துணிப் பைகளை இலவசமாக வழங்கினோம்.

'ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுகாதாரமான சூழ்நிலை அவசியம்' என்பதை வலியுறுத்தி, 'சுத்தமான மயிலாப்பூர்' என்ற விழிப்புணர்வு இயக்கத்தைச் செயல்படுத்தினோம்.

இந்த ஆண்டு சுந்தரம் ஃபைனான்ஸ் சார்பில், இந்திய சுற்றுச்சூழல் கழகத்தின் ஆதரவுடன் 'ப்ளூ கிரீன் மைல்' என்ற புதிய சுற்றுச் சூழல் முயற்சியை அறிமுகப்படுத்தினோம். இதன்படி, 'உங்கள் உணவை நீங்களே வளர்க்கலாம்' என்று மக்கள் தங்கள் வீடுகளிலேயே சமையலறைத் தோட்டம் அமைப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

விழாவின் நினைவாக மயிலாப்பூர் தொடர்பான அம்சங்கள் இடம்பெறும் பனியன்கள், சாவிக் கொத்துகள், ஃப்ரிட்ஜ் மேக்னெட்கள், போஸ்டர்கள் ஆகியன விற்பனை செய்யப்பட்டன.

மயிலாப்பூரின் அடையாளமாக விளங்கும் சம்ஸ்கிருதக் கல்லூரி, லேடி சிவசாமி பள்ளி, ராயர் மெஸ், லஸ் முனையில் பல்லாண்டுகள் பழைய புத்தகக் கடை நடத்திய ஆழ்வார் உள்ளிட்டோருக்கும், அமைப்புகளுக்கும் 'ஸ்பிரிட் ஆஃப் மயிலாப்பூர்' என்ற விருதுகளை வழங்கினோம். பாரம்பரியமான குங்குமம் தயாரிக்கும் ஸ்ரீவித்யா குங்குமம் நிறுவனத்துக்கும் விருது வழங்கப்பட்டது.

150-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நான்கு நாள்களில் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்கள். எட்டு பாரம்பரிய நடைப்பயணங்கள், சதுரங்கம் முதல் சமையல் வரை பல்வேறு வகையான போட்டிகள், குழந்தைகளுக்கான பயிலரங்குகள், சைக்கிள் சுற்றுப்பயணம் போன்றவற்றுடன் கோலாகலமாக மயிலாப்பூர் திருவிழா நடந்தேறியது'' என்கிறார் வின்சென்ட் டிசூசா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com