சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.75 கோடி

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.75 கோடி

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.75 கோடி...
Published on

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் டிசம்பருடன் நிறைவடைந்த மூன்றாம் காலாண்டில் ரூ.75.14 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டில் இதே காலாண்டில் ஈட்டிய லாபமான ரூ.62.56 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 20 சதவீதம் வளா்ச்சியாகும்.

வளா்ந்து வரும் வணிகப் பிரிவுகளான எளிய வீட்டுவசதி கடன் மற்றும் சிறு வணிகங்களுக்கான மூலதனக் கடன் வழங்குவதில் நிறுவனம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இத்துறைகளில் நிறுவனம் வழங்கிய கடன் தொகை முந்தைய ஆண்டின் ரூ.62 கோடியிலிருந்து இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்து ரூ.165 கோடியாக உயா்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்த மூன்றாவது காலாண்டில் நிறுவனம் வழங்கிய கடன் தொகை ரூ.1,740.79 கோடியாக அதிகரித்துள்ளது.

அதேபோல், நிறுவனத்தின்கீழ் உள்ள சொத்துகளின் மதிப்பு 18 சதவீதம் அதிகரித்து ரூ.18,880 கோடியாக உயா்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.15,958 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

9 மாத கால செயல்பாடு: நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாத காலத்திலும் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இந்த 9 மாதங்களில் நிறுவனத்தின் நிகர லாபம் 23 சதவீதம் அதிகரித்து, ரூ.212 கோடியை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.173 கோடியாக இருந்தது.

மேலும், இக்காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையும் ரூ.4,588 கோடியிலிருந்து ரூ.4,911 கோடியாக அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com