'நெகிழி ஒழிப்பு குறித்து அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். மஞ்சப் பைகளைப் பயன்படுத்தி பொருள்கள் வாங்குதல், எவர்சில்வர் பாட்டில்களில் நீர் அருந்துதல், சூடான பொருள்களைப் பாத்திரங்களில் வாங்குதல் உள்ளிட்ட நல்ல பழக்கங்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்' என்கிறார் 'விடியல் ஆரம்பம்' தொண்டு நிறுவனத் தலைவர் பிரகாஷ்.
நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட குமாரபாளையத்தில் 15 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இந்த அமைப்புக்கு 'பசுமை முதன்மையாளர்' எனும் விருதும், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அண்மையில் வழங்கப்பட்டது. 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் நாமக்கல் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றிய அவரிடம் பேசியபோது:
'தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெறும். ஆனால், அரசுப் பள்ளிகளில் அப்படி அதிகமாக நடக்காது. நானும் அரசுப் பள்ளியில்தான் பிளஸ் டூ வரையே படித்தேன். படிப்பில் சராசரி மாணவன். எனது தந்தை ராமசாமி மேற்கொண்ட நிலம் வாங்கி விற்கும் தொழிலில், அவருக்கு உதவியாக இருந்தேன். காப்பீடு முகவரும் ஆனேன். தொலைதூரக் கல்வியில் வணிகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றேன்.
ஓரளவுக்கு நான் பொருளாதாரத்தில் மேம்பட்டதும், 'விடியல் ஆரம்பம்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன். யாரிடமும் நன்கொடையை கேட்கக் கூடாது என்ற உறுதியையும் எடுத்தேன்.
உள்ளூர் நூலகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், வாசகர் வட்டம் அமைத்து, நூலகத்தின் கூரையை ரோட்டரி சங்க உதவியுடன் புதுப்பித்தோம். ஆண்டுதோறும் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
சுதந்திரத் தினத்தையொட்டி, சுதந்திரப் போராட்டத்தை மாணவர்களுக்கு அறிய வைக்க தியாகிகள் படங்களை ஏந்தி ஊர்வலம் செல்வோம். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குவோம். அரசுப் பள்ளிகளில் கழிவறை, குடிநீர் வசதிகளை பெற்றோர்கள் உதவியுடன் மேம்படுத்திக் கொடுக்கிறோம்.
கைப்பேசியிலும், தொலைக்காட்சியிலும் மாணவர்கள் அதிக நேரம் செலவழிப்பதால், அவர்களின் கவனங்களை மாற்ற முடிவு செய்து நூறு திருக்குறள்களை ஒப்பித்தால் பரிசு என்று அறிவித்து பல ஆண்டுகளாக வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
இந்த நடைமுறை குமாரபாளையம், அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் சுமார் 20 அரசுப் பள்ளிகளில் இருக்கிறது. சிறார்களுக்கு நூல்கள், நாளிதழ்களை அளித்து வாசிக்கச் செய்து, வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கிறோம். பறவைகளுக்குத் தண்ணீர் வைக்கச் சொல்லி அறிவுறுத்துகிறோம்.
தபால் தினத்தில் மாணவர்களுக்கு அஞ்சல் அட்டையை அளித்து, அப்பா, அம்மா, தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுத வைப்போம். நெசவாளர் தினத்தில் நெசவு எப்படி நடக்கிறது என்று மாணவர்களை அழைத்துச் சென்று காட்டுவோம். பாரதியார் தினத்தன்று மாணவர்களுக்கு பாரதியார் வேடம் அணியவைத்து, ஊர்வலம் செல்வோம். முடிவில் அவர்களுக்கு பாரதியார் கவிதை நூல்களைப் பரிசளிப்போம்.
குப்பைகளை முறையாக அதற்கான தொட்டிகளில் போட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசு பள்ளிகளுக்கு குப்பைத் தொட்டிகளை வழங்கி வருகிறோம்.
துரித உணவுகளைத் தவிர்த்து, இயற்கை உணவுகளை உண்ண வேண்டும் எனத் தொடர்ந்து விழிப்புணர்வை அளித்து வருகிறோம். குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் 9 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட சித்த மூலிகைச் செடிகளுடன் தோட்டம் அமைக்கப்பட்டு, இன்றளவும் சிறப்பாக பராமரித்து வருகிறோம். புதியதாக செடிகள் நடுவதுடன், ஏற்கெனவே நட்ட செடிகளை பராமரிக்க மாணவர்களை ஊக்குவிக்கிறோம்.
மழைக் காலங்களில் பனை விதைகளை ஏரிகள், கண்மாய்கரைகளில் விதைக்கிறோம். இந்தச் சேவையில் ஈடுபடுவதை அறிந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் என்னைப் பாராட்டியுள்ளார்.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் புத்தகக் கண்காட்சி நடத்துகிறோம். எங்கள் அமைப்பின் செயல்பாடுகளை அறிந்து பல அமைப்புகள் ரொக்கப் பரிசுகள் வழங்கியுள்ளனர். அந்தப் பணம் அமைப்பு செயல்பாடுகளுக்குச் செலவிடுகிறோம்' என்கிறார் பிரகாஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் இதுவரை 44,396 மாணவா்கள் சோ்க்கை

பகுதிநேர ஆசிரியா்களுக்கு ஊதிய உயா்வு: அரசாணை வெளியீடு
போலி வெளிநாட்டு வேலை மோசடி:2 போ் கைது
தாய் மொழி நாள் விழிப்புணர்வு அவசியம்
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

