'கர்நாடக இசை குறித்து அரிய தகவல்கள், அற்புத நிகழ்வுகளை கடந்த ஓராண்டாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் "ரீல்ஸ்'களாக வெளியிட்டு வருகிறேன். அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ரிஷிகேஷ் கங்கைக் கரையில் அமர்ந்து, கங்கையைக் குறிக்கும் பாடல் வரிகள் சிலவற்றைப் பாடி நான் போட்ட ரீல்ஸ்
களுக்கு பாராட்டுகள் குவிந்தன. "கல்யாண வசந்தம்' என்ற ராகத்தின் சிறப்பு, அதில் அமைந்த கர்நாடக இசைப் பாடல், திரைப்படப் பாடல் குறித்த ரீல்ஸ், முத்துசாமி தீட்சிதரின் பிறந்த தின நிகழ்வின்போது அவரின் அரிய தகவல்களைத் தொகுத்து வெளியிட்ட ரீல்ஸ், கர்நாடக சங்கீதக் கச்சேரி செய்வதற்கு முன் எப்படிப் பாடல்களைத் தேர்ந்தெடுப்பது என்பது போன்ற "ரீல்ஸ்'களை வெளியிட்டு வருகிறேன்.
இதனால் சாமானியர்களாலும் கர்நாடக இசையை அறிய முடிகிறது. சமூக ஊடகங்களில் தொடர்ந்து இயங்குவதற்கு என் கணவர் தனேஷ் அளிக்கும் ஊக்கம்தான் காரணம்'' என்கிறார் இசைப்பேரரசி டி.கே.பட்டம்மாள் குடும்பத்தின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த பாடகி லாவண்யா சுந்தரராமன்.
இவரது சித்தி பிரபலப் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன். இசையில் திளைத்த குடும்பத்திலிருந்து வந்திருக்கும் லாவண்யாவும், இசையின் பல பரிமாணங்களைத் தொட்டவர். பாரம்பரியம் குறையாமல் மேடைகளில் பாடி வருவதுடன், சமூக வலைதளங்களிலும் தன் இசை ஆர்வத்தை வெளிப்படுத்தி வரும் லாவண்யாவுடன் ஒரு சந்திப்பு:
கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் வந்தது எப்படி?
என் கொள்ளுப்பாட்டி பட்டம்மாள், என் தாத்தா சிவகுமார் வீடுகளில் கர்நாடக சங்கீதம் ஒலித்தபடியே இருக்கும். மிருதங்க வித்வான் பாலக்காடு மணி ஐயர் மகளான என் பாட்டி லலிதா சிவகுமார், அம்மா காயத்ரி, சித்தி நித்யஸ்ரீ உள்ளிட்ட பல பாடகிகள் எங்கள் வீட்டிலேயே இருந்தனர். சங்கீதம் எப்போதும் காதில் விழுந்தவண்ணம் இருந்ததால், அதைக் கேட்டே எல்லாப் பாடல்களையும் மனப்பாடமாகப் பாட ஆரம்பித்தேன்.
சந்தியாவந்தனம் பூர்ணப்ரக்யராவிடம் முறைப்படி அடிப்படை சங்கீதப் பாடங்களைக் கற்றேன். ஒருவர் கற்றுக் கொடுப்பதை அதைப் பாடிப் பாடி பயிற்சி செய்து பார்ப்பேன். ஏதாவது தவறாகப் பாடிவிட்டால் சொல்லித் தருவார்கள். இப்படியாக என் சங்கீதம் வளர்ந்தது. இசையில் முழுநேரப் பயிற்சி பெறுவதற்காகத் திறந்தவெளி முறைப் பள்ளியில் பிளஸ் டூ வரை படித்தேன். பின்னர், இசையில் எம்.ஏ. பட்டம் பெற்றேன்.
உங்கள் முதல் அரங்கேற்றம் குறித்து?
நான் ஏழாம் வகுப்பு படித்தபோது, "ஹம்ஸத்வனி' அமைப்பு மியூசிக் அகாதெமி நடத்திய "பரம்பரா' என்ற நிகழ்ச்சியில் பட்டம்மாள் பாட்டியுடன், அவரது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஒரே மேடையில் பாடினர். என் தாத்தா சிவகுமார் மிருதங்கம் வாசித்தார். பாட்டி லலிதா, அம்மா காயத்ரி, சித்தி நித்யஸ்ரீ ஆகியோருடன் நானும் பாடியதுதான் என் முதல் அரங்கேற்றம். அதற்காக இரண்டு மாதங்கள் எங்கள் குடும்பத்தினர் எல்லோருமே பாட்டியுடன் சேர்ந்து நன்றாகப் பயிற்சி மேற்கொண்டோம்.
நீங்கள் பாடுவதைக் கேட்டால், நித்யஸ்ரீ பாடுவது போலவே இருக்கிறதே?
எனது மூன்று வயது முதலே சித்தியின் கச்சேரிகளுக்குப் போய் மேடையில் அவருக்கு அருகில் அமர்ந்துகொண்டு, அவர் பாடும்போது தாளம் போடுவேன். சற்று வளர்ந்தவுடன் அவருக்கு தம்பூரா போடுதல், சேர்ந்து பாடுதல் என நிழல் போல அவரையே பின்தொடர்ந்தேன்.
அவருடன் இணைந்து மேடையில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. வீட்டில் அவர் எனக்குச் சித்தி என்றால், மேடையில் அவர் சங்கீதப் புலி. பாடும்போது ஏதேனும் நான் தவறு செய்துவிட்டால், திட்டமாட்டார். அவரது ஒரு பார்வையையும், சொல்வதையும் கேட்டு உடனடியாக திருத்திக் கொள்வேன்.
உங்களை எப்படி டி.கே. பட்டம்மாள் மெருகேற்றினார்?
தொடக்கத்தில் நான் பாடும்போதெல்லாம் என் பாட்டி லலிதா நிறைய நுணுக்கங்களைக் கற்றுத் தருவார். ராகம் சரியாக இருக்கிறதா?, ஸ்வரம், நிரவல் சரியாக இருக்கிறதா?, உச்சரிப்பு ஸ்பஷ்டமாக இருக்கிறதா? ராகம்-தானம்- பல்லவி எப்படிப் பாடுவது உள்ளிட்ட பல நுணுக்கமான விஷயங்களையும் சொல்லித் தருவார். அதை உள்வாங்கிக் கொண்டு நான் சரியாகப் பாட ஆரம்பித்ததும், பட்டம்மா பாட்டியிடம் போய் பாடிக் காட்டு என்று சொல்லுவார். இப்படித்தான் என்னை மெருகேற்றிக் கொண்டேன்.
உங்களால் மறக்க முடியாத கச்சேரி எது?
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் உற்சவ விழாவின்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நான்கு மணி நேரம் நடைபெற்ற கச்சேரியை ரசிகர்கள் முழுமையாக ரசித்தது என்னை வியக்க வைத்தது.
பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில் உற்சவத்தில் நான் பாடிக் கொண்டிருக்கும்போது திடீரென பயங்கரக் காற்று வீசியது. அப்போது, இறைவனை பிரார்த்தித்துவிட்டு, பாட்டைத் தொடர்ந்தேன். கச்சேரி முடியும்வரை காற்றோ, மழையோ இல்லாமல் இருந்தது. அதுவொரு மறக்க முடியாத அனுபவம்.
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு முன்னால் நான் பாடியிருக்கிறேன். மடத்துக்குச் செல்லும்பொதெல்லாம் என்னைப் பார்க்கும்போதெல்லாம், "இப்ப என்ன பாட்டு கத்துக்கறே?' என்று சுவாமி விசாரிப்பார். பாடச் சொல்லிக் கேட்டு, கற்கண்டுகளைத் தருவார்.
ஒருமுறை சென்னையில் நடைபெற்ற என் கச்சேரியைக் கேட்க வரும்படி பட்டம்மாள் பாட்டியை அழைத்தேன். எண்பத்தைந்து வயதில் அவர் வீல் சேரில் அமர்ந்துதான் இயங்கிக் கொண்டிருந்தார். தாத்தா இல்லாமல் வெளியே எங்கும் செல்லாதவர். மேடையில் அமர்ந்து சில பாடல்களைப் பாடி முடித்திருப்பேன். திடீரென்று வீல் சேரில் அமர்ந்தபடியே பாட்டி அந்த அரங்கத்துக்குள் நுழைவதைப் பார்த்ததும் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. அன்று என் கச்சேரி முழுவதையும் கேட்டார் பாட்டி.
நீங்கள் பொக்கிஷமாகப் பாதுகாத்து வரும் பொருள்?
ஆரஞ்சு நிறப் புடவையை பட்டம்மா பாட்டி அடிக்கடி கட்டுவார். அதைப் பார்த்து எனக்குத் தரும்படி கேட்டபோது, அவரும் மகிழ்ச்சியுடன் தந்தார். அந்தப் புடவையைக் கட்டிக்கொண்டு நானும் நிறைய கச்சேரிகள் செய்திருக்கிறேன். இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.
அதேபோல், நித்யஸ்ரீ சித்தி எனக்குத் தந்த நெக்லஸ், பட்டம்மா பாட்டிக்கு கிடைத்த சவுடையா நினைவுத் தங்கப் பதக்கம், லலிதா பாட்டி எனக்குத் தந்த கஜலட்சுமி விக்ரகம், பட்டம்மா பாட்டி பூஜையறையில் வைத்து பூஜை செய்து வந்த லலிதாம்பிகை சிலை, பூஜை மணி, கிண்ணம் என்று பல பொருள்கள் என்னிடம் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெகவுடன் இணைந்ததால் கட்சிப் பதவியை ராஜிநாமா செய்த கவுன்சிலர்!
தாயாகும் பிகில் பட நடிகை!
தொழில்நுட்பத்தை யாரும் தடுக்க முடியாது!
இசையும் வாழ்வும்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
