கட்டடக் கலை அதிசயம்!
சீனாவின் கியான்ஜியாங் செஞ்சுரி நகரத்தில் அமைந்துள்ள 'ரீஜென்ட் இன்டர்நேஷனல்', உலகின் மிகப் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பாகும்.
சீனாவின் கியான்ஜியாங் செஞ்சுரி நகரத்தில் அமைந்துள்ள 'ரீஜென்ட் இன்டர்நேஷனல்', உலகின் மிகப் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பாகும். 675 அடி உயரமுள்ள இந்தக் கட்டடக்கலை அதிசயமானது, முதலில் ஆறு நட்சத்திர சொகுசு விடுதியாகக் கட்டத் திட்டமிடப்பட்டது. பின்னர் பிரம்மாண்டமான அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகமாக மாற்றப்பட்டது. 2013- ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்தக் குடியிருப்பு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆயிரக்கணக்கான சொகுசு குடியிருப்புகள் உள்ள இந்த வளாகமானது 14.7 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், 39 தளங்கள் கொண்டது. இங்குள்ள அடுக்குமாடிக் கோபுரங்களின் வழக்கமான செவ்வக வடிவத்தைவிட, இயற்கை ஒளி வசதியை மேம்படுத்திப் பயன்படுத்திக் கொள்ளவும், கட்டடத்துக்குள் காற்றோட்டத்தை அதிகரிக்கவும், சூறாவளிக் காற்றின் வேகத்தைத் தாங்கி நிற்பதற்காகவும் 'எஸ்' வடிவத்தில் இந்தக் கட்டடத்தைக் கட்டியுள்ளனர்.
சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கும் ரீஜென்ட் இன்டர்நேஷனல் பல்நோக்கு குடியிருப்பை வடிவமைத்த அலிசியா லூ என்பவர், மெரினா பே சிங்கப்பூர் சாண்ட்ஸ் ஹோட்டலின் தலைமை வடிவமைப்பாளராவார்.
'சுயசார்பு கொண்ட சமூகம்' என்று அழைக்கப்படும் இந்தக் கட்டடத்தின் வளாகத்துக்குள்ளேயே அனைத்து வசதிகளும் உள்ளன.
குடியிருப்பாளர்கள் குடியிருப்பிலிருந்து எந்தத் தேவைக்கும் வெளியே காலடி எடுத்து வைக்காமலேயே, வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், பொருள்கள் வாங்குவதற்கும், உண்பதற்கும், விளையாடுவதற்கும், பொழுதுபோக்குவதற்கும் வழிவகுக்கும் வசதிகள் இங்குள்ளன.
வணிக நிறுவனங்கள், உணவகங்கள், திரை அரங்குகள், நவீன உடற்பயிற்சிக் கூடங்கள், உணவுக்கூடங்கள், உள்புற நீச்சல் குளங்கள், மளிகைக் கடைகள், முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள், பரந்த தோட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. மேலும் உலகில் எந்த அடுக்குமாடிக் கட்டடங்களிலும் இல்லாத வகையில் பள்ளிகள், மருத்துவமனைகளும் செயல்படுகின்றன.
இளம் தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர்கள் உள்ளிட்டோர் இங்கு வசிக்கின்றனர். ஜன்னல்கள் இல்லாத சிறிய அறைகளுக்கு மாதம் 1,500 யுவான் (சுமார்
ரூ. 17,959), பால்கனி வசதி கொண்ட பெரிய குடியிருப்புகளுக்கு 4,000 யுவான் (சுமார் ரூ.47,891) வசூலிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

