பார்வையற்றோருக்கு 'பிரெயில்' திருக்குறள்!
தமிழின் ஆகச் சிறந்த அறநூலான திருக்குறளை 100 மொழிகளிலும், தமிழின் பெருமைமிகு இலக்கண நூலான தொல்காப்பியத்தை உலகின் முன்னணி மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும்...
ஆர்.எஸ்.
தமிழின் ஆகச் சிறந்த அறநூலான திருக்குறளை 100 மொழிகளிலும், தமிழின் பெருமைமிகு இலக்கண நூலான தொல்காப்பியத்தை உலகின் முன்னணி மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டு செயலாற்றி வருகின்றது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம். பெளத்த நாடுகளின் மொழிகளில் மணிமேகலை, உலக மொழிகளிலெல்லாம் ஏனைய செவ்வியல் நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுதல், தமிழுக்கு ஆக்கமும் பெருமையும் சேர்க்கும் ஆய்வு நூல்களை வெளியிடுதல் என இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் செம்மாந்து அமைந்துள்ளன.
இந்தத் திட்டங்கள் தொலைநோக்குச் சிந்தனையுடனும், உலகம் தழுவிய மானுடச் சமூகம் பயன்பெற வேண்டும் என்னும் அடிப்படையிலும் உருவானவை. செம்மொழி நிறுவனத்தின் வளர்ச்சிப் பணியில், பெரும் மைல்கல்லாக அமைந்த 'பிரெயில் நூல்கள் பதிப்புத் திட்டம்' குறித்து இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் கூறியதாவது.
'செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதன்மையான நோக்கம் தமிழின் தொன்மைகளையும் தனித்தன்மைகளையும் வெளிப்படுத்துவதாகும். அதற்கேற்ற வகையில் பல திட்டங்கள் தீட்டப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட உலக மொழிகளிலும் செவ்வியல் நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுதல், பொ.ஆ. 6- ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய கல்வெட்டியல், தொல்லியல் முதலான துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ளுதல், செவ்வியல் நூல்களின் சிறப்புகளை வலையொளி மூலம் பரப்புதல் முதலான திட்டங்கள் செயலாக்கம் பெறுகின்றன.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள 46 நூல்கள்தான் பிரெயிலில் இதுவரை இலக்கியம் சார்ந்த தொகுப்பாக உலக அளவில் வெளியான அளவிலும் எண்ணிக்கையிலும் அதிகமானவையாகும். 46 நூல்களும் 118 தொகுதிகளாக அமைந்துள்ளன. இவை ஏறத்தாழ 13,000-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டுள்ளன. இந்தத் தொகுப்பில் தமிழின் மூத்த இலக்கண நூலான தொல்காப்பியம், பழைமையான சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்கள், கீழ்க்கணக்கு நூல்கள், தமிழின் சில அடிப்படை இலக்கண நூல்கள் உள்ளிட்ட 46 தமிழ் நூல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூல்கள் அனைத்திலும் எளிய உரையும், மூலபாடங்கள் எளிய சந்தி அமைப்பிலும் இடம்பெற்றிருக்கின்றன.
தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் உரையுடன் இப்போதுதான் முதன்முதலாக பிரெயிலில் அச்சாகியுள்ளன. திருக்குறள் சிறந்த உரையுடன் பிரெயிலில் இப்போதுதான் வெளிவருகிறது. காப்பிய நூல்களும், இலக்கண நூல்களும் முதன்முதலாக பிரெயில் பதிப்பாக வெளிவருகின்றன.
இந்திய அளவில், ஏன் உலக அளவில் இப்படியான பெருந்தொகுப்புகளையும், அதிகப் பக்கங்களையும் கொண்ட பிரெயில் பதிப்புகள் இப்போதுதான் வெளிவந்திருக்கின்றன. இவற்றுக்குரிய நிதியை மத்திய அரசு செம்மொழி நிறுவனத்துக்கு அளித்திருக்கிறது.
46 தமிழ் நூல்களின் பிரெயில் பதிப்புகளையும் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 17-இல் வாரணாசியில் நடைபெற்ற காசித் தமிழ்ச் சங்கமம் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுச் சிறப்பித்தார்.
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழுள்ள மாற்றுத் திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின் கீழ், சென்னையில் செயல்பட்டு வரும், பார்வைக் குறைபாடுடைய நபர்களுக்குரிய அதிகாரமயமாக்கலுக்கான தேசிய நிறுவனம் இந்நூல்களைச் சிறப்பாக அச்சிட்டு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒரே மத்திய அரசு சார்பு பிரெயில் அச்சகம் இதுதான்.
முக்கியமான பொது நூலகங்கள், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள், கல்லூரி நூலகங்கள் ஆகியவற்றுக்கு இலவசமாக அனுப்பிவைக்கும் பணியைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. இந்தப் பிரெயில் நூல்களைப் பெற விரும்பும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக அனுப்பும் பணியையும் செம்மொழி நிறுவனம் தொடர்ந்து செய்து வருகின்றது.
நூலை அனுப்பிவைக்க வேண்டிய முகவரியுடன், பார்வையற்ற மாற்றுத் திறனாளி என்பதற்கான சான்றினை இணைத்து அனுப்பினால் அஞ்சல் கட்டணம் ஏதுமின்றி பிரெயில் நூல்கள் இலவசமாக அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் செம்மொழி நிறுவனத்தின் பிரெயில் பதிப்புகளைப் பெற்று பயன்பெற்றுள்ளனர்.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மீதும், அவர்களது அறிவு வேட்கையின் மீதும் பெரும் நம்பிக்கையும், கரிசனமும் கொண்டு அவர்களுக்கு விலையில்லா பிரெயில் புத்தகங்கள் வழங்குவதைச் செம்மொழி நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கும் இந்தப் பிரெயில் புத்தகங்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் இலக்கை அடையும்போதுதான் செம்மொழி நிறுவனத்தின் நோக்கம் நிறைவேறும்' என்கிறார் இரா.சந்திரசேகரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

