சீனாவில் டிரம்ப் - ஜின்பிங் - புதின் முத்தரப்பு சந்திப்பு தொடங்கியது!வி.எஸ். பாபு மறைவு: முதல்வர் விஜய் இரங்கல்!கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்!இந்தியாவில் ஹிந்துக்கள் விகிதம் குறையும்; முஸ்லிம்கள் அதிகரிப்பார்கள்! ஆய்வில் தகவல்!வி.எஸ். பாபு உடல்நிலை குறித்து விரைவில் அறிவிப்பு? மருத்துவமனை விரைந்தார் ஆதவ் அர்ஜுனா! போலீஸ் குவிப்புடாடா காட்டிய அக்வான்! ஏமாற்றத்திலிருக்கும் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல மழைச் செய்தி!கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? கேப் டவுன் நகரமே சாட்சி!தை பிறந்தால் பல்கலைக்கழகங்களுக்கு வழி பிறக்கும்: அமைச்சர் விஸ்வநாதன்திருவண்ணாமலை தீபம்! சென்னை, விழுப்புரம், வேலூரில் இருந்து 16 மெமு ரயில்கள் - முழு விவரம்!தவெகவினர் அணையைக்கூட திறக்கிறார்கள், முதல்வர் விஜய் வாயை யாராலும் திறக்க முடியவில்லை! மு.க. ஸ்டாலின் கருத்துதிடீரென தங்கம் விலை குறைவது ஏன்? இது எத்தனை நாள்கள் வரை தொடரும்?திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!

தமிழ் இலக்கிய அச்சு நூல்கள் வரலாற்றில் அநாமதேயங்களும் புனைபெயர்களும்! சங்க காலம் முதல் சமகாலம் வரை!

இலக்கியத்தின் பெயரால் அரங்கேறும் அச்சு வன்முறை பற்றி..

Tamil Literature

தமிழ் இலக்கிய அச்சு நூல்கள் - AI

Updated On :

'போலி நூல்கள்', போலிப் பதிப்பகங்கள்' என்ற புது வகைகளைக் கண்டு தற்போது திகைத்துக் கிடக்கிறது 'கல்வி சிறந்த தமிழ்நாடு'. கோவை, பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட தமிழக அரசின் சிறப்பு நூலகங்களுக்கும், மாநிலமெங்குமுள்ள சுமார் 4,500-க்கும் மேற்பட்ட பொது நூலகங்களுக்கும் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்ட விஷயத்தில் நிகழ்ந்துள்ள அரிய வகை முறைகேடுகள் அண்மையில் வெடித்து வெளிவந்துள்ளன.

அறியக் கிடைப்பது யாதெனில், சில புற்றீசல் பதிப்பகங்கள், நூலெழுதுவதிலோ, இலக்கியத்திலோ எந்தப் பின்புலங்களும் அறவே இல்லாத - 'யாரிவர்' எனப் பெயர் அறியப்படாத - ஆளில்லாத (போலி) பெயரில் வெளியிட்டிருக்கும் நூல்கள் ('நூற் போலிகள்') பெருமளவில் மாநில நூலகங்களுக்குக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என்பதாகும். மதுரை உயர் நீதிமன்றம் கடந்த 20 ஆண்டுகால நூல் கொள்முதல் குறித்து அரசிடமிருந்து வெள்ளை அறிக்கை கேட்கிறது. ஊடகங்களில், செய்தி ஏடுகளில் இவ்விஷயங்களே பரபரப்பான பேசுபொருளாகித் தினவலம் வருகின்றன. நான்கைந்து நூலகர்கள் மீதான நடவடிக்கைகளும் ஒரு பதிப்பக உரிமையாளர் கைதும் தற்போது வரை செய்திகளாகியுள்ளன.

கொள்முதல் செய்யப்பட்டுள்ள சில நூலாசிரியர்கள் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் யாரென்று அடையாளம் தெரிவிப்பவர்களுக்குச் சன்மானம் அளிக்கப்படும் எனும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பானது, நடந்துள்ள 'புதுவகைப் போலி'யின் பரிணாமத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவே கொள்ள வேண்டும். நூல்களைக் கொள்முதல் செய்யும் பொறுப்புக் கொண்டவர்கள் அனைவருமே (ஆலோசனைக் குழு முதல் அலுவலர்கள், இறுதி முடிவெடுப்பவர்கள் வரை,'அனைவருமே') வெகு மெத்தனமாகக் - கண்களைக் 'காந்தாரிபோல'க் கட்டிக்கொண்டு இத்தீது நிகழத் துணைநின்றுள்ளனர். 'பொறுப்புக் கொண்டவர்'களது இத்தகைய 'தடித்த தோல்' போக்கு அடியோடு அகற்றப்பட உரியது.

இல்லாத பெயர்களில் போலி நூல்களை உருவாக்கி, அறிவுத்தேடல் ஆர்வலர்களிடையே பெருவருத்தங்கள் நிறையச் செய்துவரும் லாப மோகக் கருஞ் சூழல்களிலிருந்து விலகி, தமிழ் இலக்கிய, பதிப்பு வரலாற்றின் நீள் பரப்பில் பின்னோக்கிய ஒரு பயணத்தை மேற்கொள்வோம்... போலிப் பெயர்களில்லை; படைப்பாளிகளது உண்மைப் பெயர்களே அறியக் கிடைக்காத காலம் அது.

சங்க காலந்தொட்டுப் பற்பல படைப்பாளிகளின் உண்மைப் பெயர்கள் வெளித்தெரியாமலே போயிருப்பதும், புலமைத்தரம் மிகுந்த பல நூல்களின் தொகுப்பாளர்கள் அல்லது வெளியீட்டாளர்களது விவரங்களும் அறியக் கிடைக்காமலே மறைந்திருப்பதும் காண முடிகிறது. ஆனால், இப்போதுபோலன்றி, அக்கால இலக்கியப் பரப்பில் அல்லது பின்னர், அச்சு நூல் பதிப்பு, தொகுப்பு வரலாற்றில், படைப்பாளிகள், பதிப்பாளர்கள், தொகுப்பாளர்களது பெயர்களோ அடையாளங்களோ புதைந்து மறைந்திருப்பதற்குப் பின்னால் மிக நியாயமான, ஆழமான, கால, வரலாற்று, அரசியல், சமூகக் காரணங்கள் இருந்துள்ளன என்பது நாம் உணர்ந்தறிய உரியது.

சங்க காலம் முதல் பதினாறாம் நூற்றாண்டு வரையிலும்கூட நூல்கள் / தொகுப்புகளில் பல புலவர்களின் இயற்பெயர்கள் நமக்குக் கிடைக்கவேயில்லை. குறுந்தொகையில் 10 பாடல்களை இயற்றியவர்கள் பெயர் தெரியவில்லை; நற்றிணையில் 50, 72, 149 உள்ளிட்ட பல பாடல்களுக்கான புலவர்கள் பெயர் கிடைக்கவில்லை; புறநானூறு, 244, 256, 263 உள்ளிட்ட 14 பாடல்களின் ஆசிரியர்கள் யார் என அறிய முடியவில்லை; அகநானூறு 3 பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் அறியோம். சங்க கால நூல்களில், மொத்தம் 102 பாடல்களை இயற்றிய புலவர்களது பெயர்கள் இன்று வரை அறியப்படவில்லை. தமிழின் முக்கியப் பழந்தொகுப்புகளான புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகிய எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்தவர்களின் பெயர்களும் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை.

பழந்தமிழ் நூல்களில் பெயரிலாப் படைப்புகளுக்கான காரணங்கள்

பழந்தமிழ் இலக்கியங்களில் பெயர் தெரியாப் படைப்பாளிகள் போலிகளல்ல; அவர்களின் பெயர்கள் திட்டமிட்டு மறைக்கப்படவில்லை. படைப்புகள் வாய்மொழி மரபிலிருந்து சுவடி எழுத்துக்குப் பெயர்ந்தபோது ஏற்பட்ட தரவு இழப்புகளாலும்; ஓலைச்சுவடிகள் காலப்போக்கில் அழிந்ததாலும்; அவை முழுமையாகக் கிடைக்காததாலும் (எ.கா: பதிற்றுப்பத்தில் முதற்பத்தும் பத்தாம்பத்தும் கிடைக்கவில்லை) இயற்றியவர்களின் பெயர்கள் விடுபட்டு அறியப்படாமற் போயிருக்கலாம் (முத்தொள்ளாயிரம், வளையாபதி, உதயண குமார காவியம், நீலகேசி போன்றவற்றின் ஆசிரியர்களது பெயர்கள் அறியப்படவில்லை). தன்னலமற்ற அக்காலத் தொகுப்பாளர்கள் தங்கள் பெயர்களை எவ்வகையிலாவது முன்னிறுத்துவதைவிடவும் நற்படைப்புகளை முயன்று தேடி எழுத்து வடிவில் - சுவடியில் (உ.வே.சா. போல பிற்காலத்தில் அச்சிலேற்றி) - நிலைப்படுத்தக் கொண்டிருந்த பேரார்வமும் பெருமனதும் போற்றப்பட உரியது.

படைப்பாளியின் பெயர் தெரியாத ஒற்றைக் காரணத்திற்காக, பாடல்களை / நூல்களைத் தொகுத்தவர்கள் அவற்றை அநாமதேயமாக விட்டுவிடவில்லை. படைப்பாளியின் இயற்பெயர் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாலும், அப்படைப்பாளியின் கவித்துவமான சொல்லாட்சிகள், அவர்களது ஆகச் சிறந்த உவமைகள் அடிப்படையில் அப்புலவர்களுக்குச் சிறப்புப் பெயர்களாகச் சூட்டி அவர்களுக்கான அடையாளங்களாக அவற்றை ஏற்படுத்திச் சென்றுள்ளனர்.

எ.கா:- செம்புலப் பெயனீரார் (குறுந். 40); அணிலாடு முன்றிலார் (குறுந். 41): நெடுவெண்ணிலவினார் (குறுந். 47); மீனெறி தூண்டிலார் (குறுந். 54); விட்டகுதிரையார் (குறுந். 74); ஓரேருழவனார் (குறுந் 131); மடல்பாடிய மாதங்கீரனார் (குறுந். 182); காக்கைபாடினியார் (நச்செள்ளையார்?) (குறுந். 210); ஓரில் பிச்சையார் (குறுந். 277); கல்பொருசிறுநுரையார் (குறுந். 290); பதடி வைகலார் (குறுந். 323); கங்குல் வெள்ளத்தார் (குறுந். 387); குப்பைக் கோழியார் (குறுந். 305); இரும்பிடர்த் தலையார் (புறம் 3): கூகைக் கோழியார் (புறம் 364); தொடித்தலை விழுத்தண்டினார் (புறம் 243); விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார் (நற்றிணை 242); தேய்புரிப் பழங்கயிற்றினார் (நற்றிணை 284).

அறியப்படாத அயலக எழுத்தாளர்களின் புகழ்பெற்ற கவிதைகள், நூல்கள்

தமிழ்ப் பரப்பிலிருந்து வெளியே பறந்து, உலக இலக்கியப் பரப்பில் ஒரு பருந்துப் பார்வையை விரிக்கும்போது, உலகப் புகழ்பெற்ற பல ஆங்கிலக் கவிதைகள், நூல்களின் அசல் எழுத்தாளர்கள் தம்மைப் பற்றிய எந்தப் பதிவையும் விட்டுச் செல்லவில்லை அல்லது தமது எழுத்துகளை ரகசியப் படைப்புகளாகவே இருக்கவைத்துவிட்டு மறைந்துள்ளனர். ஆகையால், யூகங்களின் அடிப்படையில், அறியப்படாத அல்லது அநாமதேய படைப்பாளிகளின் பெயர்களுக்கு அப்படைப்புகள் நிரந்தரமாக உரித்தாக்கப்பட்டுள்ளதை அறிகிறோம்.

எடுத்துக்காட்டுகள்:

  • பியோ வுல்ஃப்

    அடிப்படையான பழைய ஆங்கில காவியக் கவிதையான 'பியோ வுல்ஃப்', கி.பி. 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டுகளின் முற்பகுதிக்கு இடையில் இயற்றப்பட்டது. இந்நூலின் ஒரே ஒரு கையெழுத்துப் பிரதியே எஞ்சியுள்ளது; அதில் ஆசிரியரின் பெயர் இல்லை. ஆகவே, ஒரு அநாமதேய ஆங்கிலோ - சாக்சன் கவிஞரால் 'பியோ வுல்ஃப்', உருவாக்கப்பட்டது எனக் கருதப்பட்டு வருகிறது.

  • சர் கவைன் மற்றும் கிரீன் நைட்

    14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்ட இந்த மத்திய கால ஆங்கில வீர காதல் நூல். ஆர்தர் குழுவின் ஒரு மாவீரரைப் பற்றியது. அதன் படைப்பாளரை அறிய இயலவில்லை. ஆதலால், அறிஞர்கள் வெறுமனே "கவைன்-கவிஞர்" அல்லது 'முத்து கவிஞர்' என்றே குறிப்பிட்டு வருகிறார்கள்.

  • செயின்ட் நிக்கோலஸின் வருகை

    ("கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவு" இப்படைப்பு கிளெமென்ட் கிளார்க் மூர் என்பவர் பெயரில் பாரம்பரியமாக, வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், பேராசிரியர் டான் ஃபாஸ்டரின் நவீன இலக்கிய பகுப்பாய்வு முதலியவை இந்த கவிதை மேஜர் ஹென்றி லிவிங்ஸ்டன் ஜூனியரால் எழுதப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ந்து கூறுகின்றன. ஆயினும், அதன் உண்மையான படைப்பாளி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

  • கில்காமேஷின் காவியம்

    இது பண்டைய மெசொப்பொத்தேமியாவைச் சேர்ந்த உலகின் ஆரம்பகால சிறந்த இலக்கியப் படைப்புகளில் எஞ்சியிருக்கும் ஒன்றாகும், இக்காவியம் அநாமதேய எழுத்தாளர்கள் மற்றும் கதை சொல்லிகளின் தலைமுறைகளால் தொகுக்கப்பட்டு வடிவமைக்கப் பட்டதாகவே கருதப்பட்டு வருகிறது.

  • கவிதை எடா மற்றும் உரைநடை எடா

    இவை இடைக்கால ஐஸ்லாண்டிக் கவிதைக் கையெழுத்துப் பிரதிகளில் பாதுகாக்கப்பட்டுள்ள பழைய புராண மற்றும் வீரக் கவிதைகளின் முக்கிய தொகுப்புகளாகும். அக்கவிதைகளின் தனிப்பட்ட கவிஞர்கள், தொகுப்பாளர்கள் யாரென்பது பதிவு செய்யப்படவில்லை.

  • லாசரிலோ டி டோர்ம்ஸ்

    ஸ்பானிஷ் மதகுருமார்கள் பற்றிய முன்னோடியான (கூர்மையான நையாண்டி) நாவல். மத நிறுவனங்களின் கண்டனங்கள், தண்டனைகளுக்கு அஞ்சி, முற்றிலும் அநாமதேயமாகவே வெளியிடப்பட்டது.

  • கெல்ஸ் புத்தகம்

    செல்டிக் துறவிகளால் கி.பி. 800 இல் உருவாக்கப்பட்ட ஒளிரும் நற்செய்தி கையெழுத்துப் பிரதியான இப்புத்தகத்தில், தனிப்பட்ட தங்கள் படைப்புகளின் எழுத்தாளர்கள் பெயரை இணைத்து வைக்கவில்லை.

பழங்காலத்தைக் கடந்து, ஆங்கில ஆட்சிக் காலத்தில் பார்த்தோமானால், 1867-ஆம் ஆண்டின் அச்சு மற்றும் நூல் பதிவுச் சட்டம் வரையிலான காலகட்டத்திலும் ஆசிரியர், வெளியீட்டாளர் பெயர் மறைப்பு நிகழ்ந்துள்ளது. ஆனால், அது அப்போதைய சூழலில் அந்நிய ஆட்சியாளர்களின் தண்டனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் தற்காப்பு அரணாகவும், ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிரான அறச்சீற்றத்தின் வெளிப்பாடாகவும் குறியீடுகளாகவும் இருந்தன.

19-ஆம் நூற்றாண்டில் அச்சு எந்திரம் பரவலான பயன்பாட்டிற்கு வந்தபின், சமூக, மத மோதல்கள் நூல்கள், வெளியீடுகள், சிறு பிரசுரங்கள் வழியாகவும் மேற்கொள்ளப்பட்டன. நேரடித் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் படைப்பாளிகள் புனைபெயர்களையும் அநாமதேய வெளியீடுகளையும் நாடினர்.

அச்சு எந்திரம் வந்தபின் இயற்றியவர் பெயரின்றியே வெளிவந்த நூல்கள் / நூல் வகைகள் எடுத்துக்காட்டுகள்

  • கிறிஸ்தவ மதக் கண்டனத் துண்டுப் பிரசுரங்கள் (1800 -1840): தரங்கம்பாடி மற்றும் மதராஸ் அச்சகங்களில் வெளிவந்த தொடக்க கால மதப் பரப்புரைப் பிரசுரங்களுக்குப் பதிலடியாகப் பல அநாமதேயத் துண்டுப் பிரசுரங்கள் பரப்பப்பட்டன. 'ஓர் இந்து' என்ற பெயரில் இந்துமத இருளகற்றி (1845) போன்ற பிரசுரங்கள் அச்சிடப்பட்டு வெளிவந்தன. கிறிஸ்துமதக் கண்டனம் 1887, யேசு கிறிஸ்து மனிதனே 1888, பிராமினிஸம் கிறிஸ்துவமல்ல 1873 என்ற நூல்கள் எழுதியவர், பதிப்பாளர் விவரமின்றி வெளிவந்தன. (ஆதாரம்; Classified catalogue of the public reference library - Books registered from 1867 to 1889, Office of the Registrar of Books, Madras)

  • அருட்பா - மருட்பா கண்டனப் பிரசுரங்கள் (1868-1869)

    வள்ளலார் இராமலிங்க அடிகளின் பாடல்களைச் சுற்றி எழுந்த 'அருட்பா - மருட்பா' மோதலில் இருதரப்பினரும் தங்களின் தனிப்பட்ட அடையாளங்களை வெளிப்படுத்தாமல், 'ஓர் ஆத்திகன்', 'ஓர் உண்மை விரும்பி', 'ஒரு சைவன்' என்ற புனைபெயர்களிலேயே பல கண்டனப் பிரசுரங்களை, உண்மையான ஆசிரியர் யார் என இறுதிவரை அறியப்படாத வகையில் வெளியிட்டனர். தனிமனிதத் தாக்குதல்களையும் சட்டச் சிக்கல்களையும் தவிர்க்கவே இத்தகைய அடையாளமில்லாப் பெயர் வழக்கம் கையாளப்பட்டது.

  • பழைய சித்தர் வைத்தியக் கைமுறைகள் (1880-1890)

    'அகத்தியர்', 'போகர்' பெயர்களில் 19-ஆம் நூற்றாண்டில் மருத்துவ நூல்கள் பல அச்சுக் கூடங்களில் அச்சாகி வெளிவந்தன. இவற்றை எழுதிய அன்றைய 'மருத்துவர்'களின் உண்மைப் பெயர்கள் எந்த நூல்களிலும் பதிவு செய்யப்படவில்லை.

  • விடுதலை (சுதேசப்) போராட்டப் பிரசுரங்கள் (1908-1910)

இந்தியாவில் அச்சு ஊடகத்தைக் கட்டுப்படுத்த ஆங்கிலேய அரசு 1867-இல் கொண்டுவந்த 'அச்சு மற்றும் நூல் பதிவுச் சட்டம்', ஒவ்வொரு பிரசுரத்திலும் அச்சிடுபவர், வெளியிடுபவர், அச்சிடப்பட்ட இடம் (அச்சகம்) ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும் என விதித்தது. பின்னர் 1908 மற்றும் 1910-களில் கொண்டுவரப்பட்ட மிகக் கடுமையான தேசத்துரோகத் தடைச் சட்டங்களும் இந்தியர்களின் சுதந்திர தாகத்தை ஒடுக்க முயன்றன. இச்சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருக்க, தேசியவாதிகள் மிக விநோதமான புனைபெயர்களைப் பயன்படுத்தினர்.

எடுத்துக்காட்டுகள்

  • சுதேசி இயக்கக் காலத்தில் 'வந்தேமாதரம்', 'சுதேச பக்தன்', 'ஒரு தேசபக்தன்' போன்ற புனைபெயர்களில் வந்தேமாதரம் கும்மி (1908), சுதேசிக் கும்மி (1909), 'இந்தியாவின் சுதந்திர யுத்தம்' (1928) போன்ற நூல்கள் ரகசிய அச்சகங்களில் எழுதியவர் பெயரில்லாமல் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டன. 1928 ஆம் வெளியான நூலில் (நூல் பதிவு எண்: 1353) ஆசிரியர்: 'வந்தேமாதரம்' என முகவுரைக் குறிப்பில் காணப்பட்டது.

    வ.உ.சி. சிறை சென்றபோது 'கப்பலோட்டிய தமிழர் சிந்து' ஆசிரியர் பெயர், அச்சிட்டோர் எனும் எவ்வித முகவரியுமின்றி வீதியெங்கும் விநியோகிக்கப்பட்டுப் பாடப்பட்டது.

  • சந்தை இலக்கியங்கள் (1910-1920): சந்தைகள், திருவிழாக் கடைகளில், இலக்கியத் தரமற்ற, பொது வாசிப்புக்கென மலிவு விலையில் விற்பனைகளுக்கு வந்த 'சாப் புக்ஸ்' எனப்படும் கதைப்பாடல் பதிப்புகளில், பதிப்பாளர், ஆசிரியர் பெயர்கள் இடம்பெறவில்லை.

  • சென்னையில் 1919-இல் நடந்த ஒரு ஆங்கிலேயரின் கொலையைப் பாடிய 'டிலைட் கொலைச் சிந்து' மற்றும் பிரிட்டிஷ் முதலாளிகளின் சுரண்டலைப் பதிவு செய்த 'கண்டி தேயிலைத் தோட்டப் பாட்டு' (1920), 'தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சிந்து' (1928) போன்ற பிரசுரங்கள் எழுதியவர்கள் பெயர்கள், அச்சக முகவரிகூட இல்லாமலே தொழிலாளர்களிடையே பிரபலமாயின. முதலாளிகள், ரயில்வே நிர்வாகம் எடுக்கக்கூடிய சட்ட நடவடிக் கைகளில் இருந்து தப்பவும், வெளியீடுகளை ரகசியமாகவே அச்சிடவும் பதிப்பாளர்கள் மேற்கொண்ட உத்திகளே இந்த அநாமதேயப் பிரசுரங்கள். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத் தரவுகளின்படி இவ்வகை வெளியீடுகள் ஆசிரியர் பெயரின்றியே அச்சாயின.

  • ஆங்கிலத் துப்பறியும் நாவல்களைத் தழுவி எழுதியவர்கள் சிலரும் ‘மர்ம நாவல்கள்’ எழுதியவர்களும் (1920-1940): அக்காலப் பழமைவாத சமூகத்தின் கண்டன விமர்சனங்களுக்கு அஞ்சி 'ஒரு வித்வான்', 'ஒரு தமிழ் மாணவன்' போன்ற பொதுவான புனைபெயர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

  • சுயமரியாதை இயக்கக் கண்டன நூல்கள் (1930கள்): சமூக சீர்திருத்தக் கருத்துகளை முன்வைத்து, மூடப்பழக்கங்கள்,, வைதிகச் சடங்குமுறைகளை வெளிப்படையாக எதிர்த்து (போலிப் பெயர்களல்ல) புனைபெயர்களில் பல நூல்கள் பிரசுரமாயின.

  • போலித் தல புராணங்கள் (19 - 20 ஆம் நூற்றாண்டு): குறிப்பிட்ட சில சமூகங்கள் தங்கள் சாதி, குலப் பெருமையை உயர்த்தவும், தமது ஊர்களின் வரலாற்றை விரும்பிய வகையில் நிறுவவும், வரலாற்று இடைச்செருகல்களாக, பல வெளியீடுகளை - பழைய நூல்கள் போல - அநாமதேயமாகவே, எழுதியவர், பதிப்பகப் பெயர் எதுவும் இல்லாமலே வெளியிட்டனர்.

இல்லாத பெயர்கள், புனைபெயர்கள்

இப்போது, நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ளதாக அறியப்படும் இல்லாத எழுத்தாளர்களைப் போலன்றி, நவீனத் தமிழ் இதழியல் தனது வீச்சை அதிகப்படுத்திய காலத்தில், புதுமைப்பித்தன், தேவன், கல்கி, தமிழ்வாணன், சோமலெ போன்ற எண்ணற்ற எழுத்தாளுமைகள் இறுதிவரை தங்களின் புனைபெயர்களாலேயே வாசகர்களால் அறியப்பட்டனர். இவர்களின் 'இயற்பெயர் மறைப்பு' என்பது லாப நோக்கம் அல்லது எந்த அச்சுறுத்தல் காரணமாகவும் ஏற்றுக் கொண்டதல்ல. மாறாக அது, நவீன இலக்கியப் பரப்பில் தமக்கான ஒரு தனித்துவமான ஆளுமையை உருவாக்கிக் கொள்ளும் எழுத்தாளர்களது சுதந்திரத்தின் வெளிப்பாடாகப் பயன்படுத்தப்பட்டது.

வரலாற்றில், ஒரு பெயர் மறைக்கப்படுவது என்பது ஒருவகையில் அதிகாரத்திற்கு எதிரான கலகமாக, பக்தி சார்ந்த பணிவாக, அல்லது கடுமையான சமூக, சட்ட நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கும் அரணாக இருந்துள்ளது. பிரிட்டிஷ் அரசின் கண்காணிப்பையும் மீறி, அடக்குமுறைச் சட்டங்களுக்குள்ளேயே நின்றுகொண்டு, கற்பனையான பெயர்களிலும், முகவரியற்ற அச்சகங்களிலும் இருந்து விடுதலை உணர்வூட்டும் வெளியீடுகள் மூலம் உரிமைக்குரல் எழுப்பிய சுதேசி இலக்கியங்கள் ஒருவகை. கடுந்தணிக்கைகளோ, பதிப்புகளை முடக்கும் அடக்குமுறைகளோ இல்லாத ஜனநாயகச் சூழலில், அரசுப் பணத்தைக் கபளீகரம் செய்துவிழுங்க ஆளில்லாப் போலிப் பெயர்களில் - அசுரக் காளான்களாய் முளைத்திருக்கும் போலிப் பதிப்பகங்கள் இன்றைய இழிவகை.

இரண்டு வகைகளுக்குமுள்ள இடைவெளி மலைக்கும் மடுவுக்குமானது. முந்தையது, நாட்டை, மொழியை, சமூகத்தைக் காப்பதற்கான அறப்போர் வெளிப்பாடுகள்; பிந்தையது அறமிலா வணிகத்தால் நடக்கும் 'எழுத்து, இலக்கிய வன்கொடுமைகள்'!

நூலகங்களுக்கான நிதியானது, பொது மக்களது அறிவுப்பெருக்கத்திற்காக அரசு மேற்கொள்ளும் அதிமுக்கிய முதலீடாகக் கருதப்பட உரியதாகும். தற்போது, அத்தகைய முதன்மை நிதியைச், சுயலாப நோக்கில் - தமது சொந்த வாய்க்கால்களில் வடித்துக்கொள்ளும் தீயெண்ணத் திட்டங்களோடு - சில பதிப்பகங்கள் செயல்பட்டுள்ளன. இல்லாத (போலியான), 'உருவாக்கப்பட்ட' பெயர்களில் அச்சிட்ட 'தாள் குப்பைகளை' ('நூல்கள்' எனும் பெயரில்) நூலகங்களுக்குள்ளே வலிந்து திணித்துள்ளனர்.

நூலகங்கள் என்பன அனைத்துத் தரப்பினரின் பொதுப் பயன்பாட்டிற்குரிய அறிவாலயங்களாகும். அத்தகைய புனிதப் பொது வளத்தில் கலப்படம் செய்து கைவைக்கத் துணிந்த செயலானது மக்கள் பருகும் குடிநீர்த் தொட்டியில் மலங்கலந்த - அருவருக்கத்தக்க, மனிதாபிமானமேயற்ற, மன்னிக்க முடியாத - வேங்கைவயல் கொடுமையை விடவும் பெருங்கொடுமை, கடுங்குற்றம்! அறச் சிந்தனை ஏதும் இல்லாமல் இத்தகைய 'அச்செழுத்து வன்முறை'யை அரங்கேற்றியுள்ள, கொழுத்த லாப வெறி கொண்ட பதிப்புச்சூழல் அறவே களைந்து அழிக்கப்பட வேண்டிய பெருந்தீது.

இச்சூழலில் 'உயர்குணமேவிய தமிழருக்கு'ப் பாவேந்தர் இட்ட கட்டளையொன்றே ('கொலைவாளினை எட்டா, மிகு கொடியோர் செயல் அறவே') மனதில் எழுந்து நிறைகிறது. பாவேந்தர் கொடியோரை அல்ல; கொடியோரது கொடுஞ் செயல்களை அடியோடு வேரறுக்கவே வாளெடுக்க அழைத்தார் என்பதை அறிவோம்.

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.