தமிழ் இலக்கியங்களில் "குறி' என்பது களவு காலத்தில் ஊரார் அறியாமல் கள்ளத்தனமாக தலைவன், தன் தலைவியை குறிப்பிட்ட ஓர் இடத்தில் சந்திக்கும் இன்ப நிகழ்வாகும். பகல் நேரத்தில் சந்தித்தால் பகற்குறி எனவும், இரவு நேரத்தில் சந்தித்தால் இரவுக்குறி எனவும் இருவகையாக வழங்கப்படும்.
இவை தவிர, "அல்லகுறி' என்று ஒன்றும் உண்டு. சில வேளைகளில், பகலிலோ அல்லது இரவிலோ குறிப்பிட்ட ஓர் இடத்தில் குறிப்பிட்ட ஒரு வினோத ஓசையை எழுப்பி, தனது வருகையைத் தலைவிக்கு அறிவிக்கும் தலைவனுக்கு பதில், இயற்கை நிகழ்வாக பறவைகளாலோ அல்லது விலங்கினங்களாலோ கூட இது நிகழ்வது உண்டு. இதுவே அல்லகுறி.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் கபிலர், களவு காலத்தில் பகற்குறியின்போது, தலைவன் தலைவியை மணம் புரிந்த நிகழ்ச்சியை "நாரையை' சாட்சிப் பொருளாக வைத்து வர்ணித்துள்ளார்.
""யாருமில்லை தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தா னன்ன பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே'' (குறு.25)
என்று கூறுவதன் மூலம், தலைவன் வரைவு நீட்டித்தவிடத்து தலைமகள், தோழிக்கு வருந்திக் கூறியதாக இத்துறை அமைந்துள்ளது. அதாவது, களவில் மணந்த தலைவன், ஊரறிய மணம் முடிக்காது காலம் தாழ்த்துவது கண்டு வருந்தித் தன் தோழியிடம் கூறியபோது, குருகு (நாரை அல்லது கொக்கு) அங்கு இருந்தது. ஆனால், அதுவும் மீனை தனது பசியாற்றுவிக்கும் பொருட்டு அதைக் கொத்தித் தின்பதிலேயே அதன் கவனம் இருந்தது. அதனால் தலைவன், "என்னைக் கைவிடமாட்டேன்' என்று சூளுரைத்த செய்தியைக் கூட அந்தக் குருகு கேட்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது என வருத்தம் தோய்ந்த குரலில் கூறுகிறாள்.
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனிடம் தோழி எதிர்ப்பட்டு, "இனியும் வரைவு நீட்டிக்க வேண்டாம்' என்று கூறுவதாகக் கீழ்க்கண்ட குறுந்தொகைப் பாடல் அமைந்துள்ளது.
""வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கியாங்கி இவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே'' (குறு.18)
எனும் கபிலரின் பாடல் மூலம் தலைவியை கள்ளத்தனமாகச் சந்திப்பதை விட்டு, கற்பு மணத்துக்கு வரும்படி தோழி தலைவனிடம் வற்புறுத்திக் கூறுகிறாள். "செவ்வியை யாகு' என்பதன் மூலம் "திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையைப் பெறுவாயாக' என்பதாக இக்குறியிடப் பாடல் மூலம், "குட்டும் குறியுமாக' மணந்துவாழும் குடும்ப வாழ்க்கை வாழ வலியுறுத்துகிறார் கபிலர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.