சிறுகதையின் சிகரம் "மெüனி'

எவ்வித ஆடம்பரமோ, ஆரவாரமோ அற்றவர்;  படாடோபமோ, பகட்டோ இல்லாதவர்; விளம்பரமோ, விமர்சனமோ விரும்பாதவர்; இலக்கிய ஆர்வம் குறைந்த வாசகர்களின் மெüனத்தைக் கலைத்துத் தட்டி எழுப்பியவர்; அமைதி எனும் மெüன வழியையே தம
சிறுகதையின் சிகரம் "மெüனி'
Updated on
3 min read

எவ்வித ஆடம்பரமோ, ஆரவாரமோ அற்றவர்;  படாடோபமோ, பகட்டோ இல்லாதவர்; விளம்பரமோ, விமர்சனமோ விரும்பாதவர்; இலக்கிய ஆர்வம் குறைந்த வாசகர்களின் மெüனத்தைக் கலைத்துத் தட்டி எழுப்பியவர்; அமைதி எனும் மெüன வழியையே தம் தலையாய கொள்கையாகக் கொண்டவர், இத்தகு சிறப்புமிகு மணிக்கொடி மெüனியே சுப்ரமணியம் எனும் இயற்பெயர் கொண்ட சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவரை அனைவரும் செல்லமாக ஆர்.எஸ்.மணி என அழைப்பினும் "மெüனி' என்ற புனைபெயரில் கதைகள் புனைவதையே தம் அவாவாகக் கொண்டவர்.

 1907-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி, தஞ்சை மாவட்டம் செம்மங்குடியில் பிறந்த இவர், கும்பகோணம் சென்று கல்வி கற்றார். 1926-ஆம் ஆண்டு வரை அங்கு வாழ்ந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணிதத்தை விருப்பப் பாடமாக எடுத்து முதல்தர மாணவராகத் தேர்வு பெற்றார். ஆழ்ந்த இலக்கியச் சிந்தனையும், தத்துவ ஞானமும், இசையில் இணையற்ற ஈடுபாடும் கொண்டவர். வயலின் வாசிப்பதில் வல்லமை பெற்றவர்.

 மாணவப் பருவத்தில் ஆங்கில இலக்கியங்களையும், ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்த பிற இலக்கியங்களையும் ஊன்றிப் படித்தார். ஏன் நாமும் அதுபோன்று எழுதக்கூடாது என்ற தாக்கம் இவர் மனதில் மேலோங்கியது. இவ்வுந்துதலால் 1934-இல் தம் எழுத்துப் பணியைத் தொடங்கிய இவர், கதை நூல்கள் பல எழுதினார். பின்னர் கும்பகோணத்தில் சில ஆண்டுகள் குடும்பத்துடன் வாழ்ந்த இவர், சிதம்பரம் வந்து வாழ்க்கை நடத்தினார். அங்கு, பயிர்த்தொழிலை முதன்மையாகக் கொண்டாலும், நெல் அரைவை ஆலை ஒன்றைத் திறம்பட நடத்தி வந்தார்.

 இவரது "ஏன்' எனும் சிறுகதை முதன் முதலில் பி.எஸ்.ராமையாவால் "மணிக்கொடி' இதழில் வெளிவந்தது. இக்கதை வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவரது "அழியாச் சுடர்' எனும் நூல், 1959-ஆம் ஆண்டிலும், "மெüனியின் கதைகள்' எனும் நூல் 1967,1978 மற்றும் 1991-ஆம் ஆண்டுகளிலும் வெளிவந்துள்ளன. "அழியாச் சுடர்' எனும் நூல், மக்கள் மத்தியில் சுடர் விட்டுப் பிரகாசிக்க உறுதுணையாக அமைந்தவர்கள் க.நா.சுப்ரமணியமும், சி.சு.செல்லப்பாவும் ஆவர்.

 மெüனியின் ஆளுமையில் கணிதத்தில் அறிவு நுட்பமும், சங்கீதக் கலை உணர்வில் நளினமும், இலக்கியத்தில் கற்பனையும், தத்துவத்தில் தீர்க்க இயலா தாகமும் ஒருங்கே அமையப்பெற்றிருந்தன. சிறுகதை இலக்கியம் படைப்பதில் எண்ணற்ற சோதனைகள் உற்றபோதும், அனைத்தையும் தாங்கி, சாதனை படைத்தவர். தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் இவருக்குத் தலையாய பங்குண்டு. மெüனியால் எழுதப்பட்ட 15 சிறுகதைகள் மணிக்கொடி முதலிய பல ஏடுகளில் வெளிவந்தன. ஆயினும், அவை அனைத்தும் 1959-ஆம் ஆண்டு "அழியாச் சுடர்' எனும் ஒரே தொகுதியாக வெளிவந்தது. அக்கதைகளுள் காதல் சாலை, கொஞ்ச தூரம், பிரபஞ்ச கானம், அழியாச் சுடர், எங்கிருந்தோ வந்தான், நினைவுச் சுழல், மனக்கோலம், நினைவுச் சுவடு ஆகிய ஒன்பதும் சிறந்த காதல் ஓவியங்களாகும். "மாறுதல்' என்ற கதை மட்டும் மரணம் தழுவியது. குடும்பத்தேர், மிஸ்டேக், சுந்தரி, இந்நேரம்-இந்நேரம் போன்றவை மாபெரும் காவியங்கள்.

 இவருடைய காதல் கதைகளில், "அன்பின் ஐந்திணைக்குரிய அன்பு, காதலாக இல்லாமல், பெருந்திணைக்குரிய பொருந்தாக் காதலாக' அமைந்திருப்பது இவரது மனத்துணிவை மக்களுக்குப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

 எந்தக் கதாசிரியரும் கையாளாத வசன நடையைக் கையாண்டு அதில் வெற்றியும் கண்டார். அவரது கதைகளில் இழையோடும் தத்துவங்கள் கருத்தாழம் மிக்கதாக மிளிரும். அவரது எழுத்து நடை காட்டாற்று வெள்ளம் போன்று கரைபுரண்டோடாது, தெளிந்த நீரோடைபோல் அமைதியாகத் தவழ்ந்து செல்லும் பாங்குடையது. ஒவ்வொரு கதையிலும் புதுப்புது உத்தியைக் கையாண்டு, பல்வேறு கருத்துகளைச் சுவையாகச் சொல்வது மெüனிக்குக் கைவந்த கலை. இவர் கையாண்ட வசனநடை தமிழ் மறுமலர்ச்சிக்குப் புத்துயிர் ஊட்டியது.

 1961 மார்ச் மாதம், எழுத்தாளர் சி.சு.செல்லப்பா, "எழுத்து' எனும் தம் இதழில் மெüனியின் நூல்கள் பற்றிக் குறிப்பிடும்போது, ""அவரது கலைப் படைப்புகளை ஆழமாக உணர்ந்து கொள்ளாவிட்டால், அவற்றை மதிப்பீடு செய்ய இயலாது என்றும், அவற்றில் பழகிக்கொள்ள விசேஷ முயற்சி தேவை'' என்றும் கூறியுள்ளார்.

 1962- பிப்ரவரி மாதம் வெளிவந்த "எழுத்து' எனும் இதழில் பேராற்றல் மிக்க எழுத்தாளரும், திறனாய்வாளருமான க.நா.சுப்ரமணியம், மெüனியின் கதைகள் பற்றிக் குறிப்பிடும்போது, ""எத்தனையோ கதைகளும் கதாசிரியர்களும் இருப்பினும், மெüனியின் கதைகள் இலக்கிய உலகில் ஒரு தனிப்பெரும் சிகரம். அதைவிட உயரமான சிகரம் என்று சொல்ல ஏதுமில்லை'' என யதார்த்தமாகக் கூறியிருப்பது மெüனிக்குக் கிட்டிய வெற்றியாகும். மேலும், ""இன்றைய சிறுகதை உலகில் மெüனியை விஞ்சியவர் எவருமில்லை'' எனப் புகழாரம் சூட்டியுள்ளார். அவர்தம் "விமர்சனக் கலை' எனும் மற்றொரு நூலில், ""கம்பனை அனுபவிக்கத் தெரியாதவன் துரதிஷ்டசாலி, அதைப்போன்றே மெüனியை அனுபவிக்கத் தெரியாதவனும் துரதிஷ்டசாலிதான்'' என அழுத்தமாகக் கூறியுள்ளார்.

 பெரும் எழுத்தாளரான தொ.மு.சிதம்பர ரகுநாதன் தம் "இலக்கிய விமர்சனம்' எனும் நூலில், ""புதுமைப்பித்தன், மெüனி, லா.ச.ராமாமிர்தம் ஆகிய மூவருமே தமிழின் இன்றைய முக்கிய சிறுகதைப் படைப்பாளிகள்'' எனப் பாராட்டியுள்ளார். "தமிழில் விமர்சனத்துறை - சில போக்குகள்' எனும் நூலை தமிழுலகத்துக்கு அளித்த முதுபெரும் திறனாய்வாளராய் இன்றும் நிலைத்து நிற்கும் தி.க.சிவசங்கரன் தம் நூலில், ""மெüனியிடம் கலையுள்ளம், கற்பனை, வெளியீட்டுத் திறன் ஆகியவை நன்கு அமைந்துள்ளன. மெüனி, புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன் ஆகியோர் பாணியில் கதை எழுத முயன்று தோற்றவரும் உண்டு. மணிக்கொடியில் புதுமைப்பித்தன், மெüனி போன்றவர்களின் படைப்புகளால் அகவை முப்பதுக்கும் குறைவாய் உள்ள இவ்விளைஞர்கள் தமிழ் இலக்கியத்தை உன்னதச் சிகரங்களுக்கு இட்டுச் செல்கின்றனர்'' எனவும் கூறியிருப்பது மெüனியின் எழுத்தாற்றலுக்குத் தரும் தகுந்த சான்றாகும்.

 சிறுகதையின் முன்னோடியான புதுமைப்பித்தன், மெüனியின் பெருமையைக் குறிப்பிடும்போது, ""தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்'' என்றும், ""கற்பனை எல்லைக் கோட்டில் நின்று வார்த்தைகளுக்குள் அடைபட மறுக்கும் கருத்துகளையும் மடக்கிக்கொண்டு வரக்கூடிய ஆற்றல் பெற்றவர் அவர் ஒருவரே'' எனவும் குறிப்பிட்டுள்ளது அவரது திறமைக்குச் சான்று பகரும்.

 சிறுகதை மன்னன் ஜெயகாந்தன், ""மெüனியின் கதைகளை, மீண்டும், மீண்டும் படித்து உள்ளத்தில் தேக்கி இன்புறுவேன்'' என முத்தாய்ப்பு வைத்தாற்போல கூறியிருப்பதும் மெüனிக்குக் கிடைத்த மாபெரும் சிறப்பு. இவ்வாறு சான்றோர் பலரின் பாராட்டுதல்களுக்கு உரியவராய் விளங்கியவர் மெüனி.

 புதுமையான சிறுகதைகள் பல படைத்ததன் மூலம் தமிழுலகுக்குத் தொண்டாற்றி, பெயரும் புகழும் பெற்று விளங்கிய மெüனி, 1985-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

 அவர் மறைந்தாலும், அவரது மெலிந்த தேகமும், தும்பை மலர்போன்ற வெண்ணிற முடியும், தீர்க்கமான ஒளிவீசும் கண்களும், கலகலவென எல்லோரிடமும் சிரித்துக்கொண்டே உரையாடும் காட்சியும் என்றும் நம் கண்முன்னே நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com