நின்ற சொல்லர்

இவ்வுலகம் நீரின்றமையாது என்பது மாந்தர் யாவரும்  தெளிந்த உண்மைதான். அதைத் தலைவன் அறிந்தவனாயினும், பொருளிலார்க்கு இவ்வுலகம் நிலைபெறாது என்பதையும் தெளிந்து, பொருள் ஈட்டுதற் பொருட்டுத் தன் அருமந்த மனையாளை
Published on
Updated on
2 min read

இவ்வுலகம் நீரின்றமையாது என்பது மாந்தர் யாவரும்  தெளிந்த உண்மைதான். அதைத் தலைவன் அறிந்தவனாயினும், பொருளிலார்க்கு இவ்வுலகம் நிலைபெறாது என்பதையும் தெளிந்து, பொருள் ஈட்டுதற் பொருட்டுத் தன் அருமந்த மனையாளைப் பிரிய எண்ணினான். இக்கருத்தை இன்னும் தன் மனைவியிடம் சொல்லவில்லை. ஆனால், அவனது மன ஊசலாட்டத்தை அறிந்த தலைவியின் தோழி, தலைவன் பிரிய நினைக்கும் எண்ணத்தை அவளிடம் மெல்ல எடுத்துரைத்தாள். அதனைப் பொறாத தலைவி, தன் தோழியிடம் தன் கொழுநர் - தலைவன் இயல்பு, பண்பு குறித்து எடுத்துரைத்தாள்.

""தோழி! உன் சொல்லைக்கேட்டு நான் கலங்க வேண்டுமா? எனது நெஞ்சில் குடியிருக்கும் என் மணாளர் என்னைப் பிரிய இருப்பதாகச் சொல்ல உன் மனம்தான் எப்படித் துணிந்தது? என் கொழுநர் பண்பு பற்றி நீ அறிவாயா? அவர், "உன்னை விட்டுப் பிரியேன்; பிரியின் தரியேன்' என்று என்னிடம் கூறிய உறுதிமொழியை மறந்துவிடுவாரா? எப்படி வேண்டுமானாலும் பிறழும் நரம்பில்லாத நாக்கு உடையவரா அவர்? என் காதலர் உண்மை நிலைமை தவறாத வாய்மை உடையவர்! அது மட்டுமா? நெடுங்காலமாக இனிமையுடன் பழகி என்னை மகிழ்விப்பவர்; எப்பொழுதும் என் தோள்களைப் பற்றித் தழுவும் அவர், அவற்றைப் பிரியும் இழிந்த பண்பாடு இல்லாதவர்; அத்தகைய தகைமை உடையவரின் நட்பானது, தேனீ தாமரைப் பூவின் குளிர்ந்த தாதினையும் (மகரந்தத்தூள்) நறுமணம் கமழும் சந்தனத்தின் தாதினையும் ஊதி, சந்தன மரத்திலே கட்டிய இனிய தேனடைபோல நெடிதாகச் சுவை நல்குமன்றோ! தவிர, தண்ணீரில்லாமல் இயங்காத உலக ஒழுகலாறுபோல அவரில்லாமல் வாழமுடியாத என்னிடம் மிகுந்த அன்பும், அருளும் காட்டிப் பின்பு என்னைவிட்டுப் பிரிய உள்ளந்தான் விரும்புமா? ஆனால், அவ்வாறு பிரியின் ஒளிமிக்க எனது நெற்றியில் பசலை ஏற்படுமோ என்று அஞ்சி, யாதும் செய்வதை அறியாது தடுமாற்றம் அடைவாரோ? (அதாவது, தலைவியின் நெற்றியில் உள்ள ஒளி, தலைவன் பிரிவால் மழுங்கித் தோன்றுமோ என்ற கருத்து, "நறுநுதல் பசத்தல் அஞ்சி' என்பதன் வாயிலாகப் பெறப்படுகிறது). அங்ஙனம் ஒருகாலும் எனக்குச் சிறுமை செய்யமாட்டார் என்பதை நீ அறிந்துகொள் தோழி!'' என்கிறாள்.

கபிலர் பாடிய நற்றிணை பாடலில் (நற்-1) தாமரைப் பூவின் தாது தலைவன் உள்ளத்துக்கும், சந்தனத்தின் தாது  தலைவியின் நெஞ்சத்துக்கும் உவமையாகின்றன. தேனீ முதலில் தாமரைப் பூவின் தாதிலும், அடுத்து மணங்கமழும் சந்தன மரத்திலே தேனடையைக் கட்டிவைத்தது பயன்தரத்தக்கதுதானே! தலைவன், தலைவி மீது அன்பைச் சொரிந்தான் என்பது இங்குக் குறிக்கத்தக்கது.

இயற்கைப் புணர்ச்சியின் இறுதியில், "நின்னிற் பிரியேன்' என்று சொன்னதை இதுகாறும் நிலைநாட்டி வந்துள்ளான் தலைவன். அச் சத்தியத்தை இன்னும் நிலைநாட்ட முனைந்து என்னைப் பிரிய நினைக்கமாட்டான் என்ற கருத்தில் "நின்ற சொல்லர்' என்கிறாள்.

இவ்வண்ணம், தலைவி தன் காதலரின் பண்புகளையும், இல்லறச் செம்மையையும் தன் தோழிக்கு எடுத்துரைப்பதை இப்பாடல் தெளிவுபடுத்துகிறது அன்றோ! பாடலைக் காண்போம்:

""நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;

என்றும் என்தோள் பிரிபு அறியலரே;

தாமரைத் தண்தாது ஊதி, மீமிசைச்

சாந்தில் தொடுத்த தீம் தேன்போலப்

புரைய மன்ற புரையோர் கேண்மை

நீரின்று அமையா உலகம் போலத்

தம்மின்று அமையா நம் நயந்தருளி

நறு நுதல் பசத்தல் அஞ்சிச்

சிறுமை உறுபவோ செய்பு அறியலரே''

(நற்றிணை, பா-1)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com