சங்ககால நாடோடிகள்

சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஆகியவற்றுக்கு அடிப்படையாக அமைந்தவை வாய்மொழிப் பாடல்கள். பாணர்கள் வாய்மொழிக் கலையில் சிறந்து விளங்கியுள்ளனர். அப்பாணர் சமூகத்தைச் சேர்ந்தோராக அகவுநர், கோட
சங்ககால நாடோடிகள்
Published on
Updated on
2 min read

சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஆகியவற்றுக்கு அடிப்படையாக அமைந்தவை வாய்மொழிப் பாடல்கள். பாணர்கள் வாய்மொழிக் கலையில் சிறந்து விளங்கியுள்ளனர். அப்பாணர் சமூகத்தைச் சேர்ந்தோராக அகவுநர், கோடியர், கண்ணுளர், பொருநர் ஆகியோரைக் குறிப்பிடுவர். அக் கலைஞர்கள் தங்களது தனிப்பட்ட கலை முயற்சியால் அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கை முறை அலைந்து திரியும் நாடோடி வாழ்க்கையாக இருந்துள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டே பத்துப்பாட்டில் சிறப்புப்பெற்ற ஆற்றுப்படை இலக்கியங்களான பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை) முதலியன தோன்றியிருப்பது அறிதற்குரியது.

பாணர்கள் ஓரிடத்தில் நிலையாக வாழ்ந்தாரில்லை. தங்கள் குடும்ப வறுமையைப் போக்குவதற்காகவே பல இடங்களுக்குச் சென்று தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தி அரசர், வள்ளல் போன்றோரை பாடல்கள் பாடி இன்புறுத்தியுள்ளனர்.

""வெந்தேறற் கனலியோடு மதிவலந்திரிதரும்

தண்கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது

பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்

பழுமரந் தேடும் பறவைப் போலக்

கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்

புல்லென் யாக்கை புலவாய்ப் பாண''

பா.வரி 17}22


என்னும் பெரும்பாணாற்றுப் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.

பாணர்கள் வாழும் இடங்களில் நிலவிய வறட்சியின் காரணமாக, பழுத்த மரங்களை நாடிச் செல்லும் பறவைகளைப் போல் பல இடங்களுக்குத் திரிந்தலைந்ததையும் தங்கள் கலைத் திறமையை வெளிப்படுத்தவும் பல ஊர்களுக்குச் சென்றுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது. பொருள் கொடுத்துக் கலையை விரும்புவோர் குறைவாக இருந்த காரணத்தால், அக் கலைஞர்கள் புரவலர்களை நாடிச்செல்ல வேண்டியிருந்தது. இதை,

""கவிழ்ந்த மண்டை மவர்க்குநர் யார்? எனச்

சுரன்முதல் இருந்த சில்வளை விறலி''

(புறநா-103)

""கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது

சில்செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து

ஈங்கு எவன் செய்தியோ பாண''

(புறநா-68)

என்ற பாடல்களால் உணர்த்தப்பட்டுள்ளன.

பாணர்கள் பல ஊர்களுக்குச் சென்றவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் தங்களுக்கென்று ஒரு வசிப்பிடத்தைக் கொண்டிருந்தனர் என்பதை பாண்சேரி (புறம்-348:4), பெரும்பாண் இருக்கை (மதுரைக் காஞ்சி-342) என்னும் பாடல் அடிகள் மூலம் அறியலாம். இதிலிருந்து, பாணர்களை, "நாடோடிகள்' என்று அழைப்பது தவறு என்ற கருத்தும் நிலவுகிறது.

நாடோடி என்னும் சொல் சமூக செல்வாக்குப் பெறாத, சமூகப் பண்பாட்டுப் பொருள் தளத்தில் நிறைந்த கட்டமைப்புடைய சமூக இயக்கத்துக்குள் வராத, சுற்றத்தோடு அலைகின்ற, எங்கும் வேரூன்றாத மக்களைக் குறிக்கிறது.

இக்கருத்தை, பாணர்களோடு பொருந்திப் பார்க்கையில் ஒத்துப்போவதைக் காணமுடிகிறது.

""வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி

நெடிய என்னாது, சுரம்பல கடந்து

வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்

பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி

ஒம்பாது உண்டு, கூம்பாது வீசி

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை''

(புறநா-பா.47, அடி-16)

""ஆனினம் கலித்த அதர்பல கடந்து

மானினம் கலித்த மலையின் ஒழிய

மீனினம் கலித்த துறைபல நீந்தி

உள்ளிவந்த வள்ளுயிர்ச் சீறியாழ்

சிதாஅர் உடுக்கை முதா அரிப்பாண''

(புறநா-பா.138, அடி1-5)

என்ற பாடல்கள் பாணர்களின் நாடோடி வாழ்க்கையைக் காட்டுகின்றன.

÷பாணர்கள் பல இடங்களுக்கு அலைந்து திரிவோராக இருந்தபோதிலும், இலக்கிய வளர்ச்சிக்கு மூலகாரணமாக இருந்துள்ளனர். அவர்களுடைய பாடல்களில் மூதுரைகளும், பழமொழிகளும், அருளுரைகளும், அறிவுரைகளும் இலைமறை காய் போல் இடம் பெற்றிருந்தன. அவர்களின் வாழ்க்கை முறை மாறிவரும் சூழலுக்கேற்ப நிலை நிறுத்திக்கொள்ள சமூக மாற்றங்களால் பல்வேறு மாறுதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

÷புறநானூறு, ஆற்றுப்படை இலக்கியங்களில் பெருமைப்படுத்தப்பட்ட பாணர்கள், அகப் பாடல்களில் கேலிக்குரியோராகவும், இழிநிலையில் வைத்துப் பார்க்கும் நிலையினராகவும் காணமுடிகிறது.

÷அகப்பாடல்களில், தலைவன் பரத்தையிடம் செல்வதற்குத் துணை புரிவோராகப் பாணர்கள் செயல்பட்டுள்ளனர். பரத்தமை மற்றும் தலைவன் காரணமாக வந்த பாணர்கள் தலைவி, தோழியரின் ஏச்சுகளுக்கு ஆளாகியுள்ளர் என்பதை குறுந்தொகைப் பாடல் வழி அறியமுடிகிறது.

""அன்னாய் இவன் ஓர் இளமாணாக்கன்

தன்னூர் மன்றத்து என்னன் கொல்லோ

இரந்தூண் நிரம்பா மேனியோடு

விருந்தின் ஊரும் பெருஞ் செம்மலனே''(பா.33)

என்ற பாடல் வாயிலாக, இளம் மாணவனாகத் திகழும் இவன், ஊர் மன்றத்தில் என்ன செய்வான்? என்றும், "இரந்தூண் நிரம்பா மேனி' என்றும் கேலி செய்யப்படுவதைக் காணமுடிகிறது.

சங்ககாலச் சமூகத்தின் வளர்ச்சி தொடர்ந்து நிலவிய போரின் காரணமாக, ஆட்சி அதிகாரங்கள் அடிக்கடி மாறிக்கொண்டிருந்ததன் விளைவாக சமச்சீரற்ற முறையில் இருந்தது. அந்நிலையில், பழைய வாழ்வியல் மரபுகளைச் சுமந்து கொண்டு அலைந்து திரிந்த நாடோடிக் கலைஞர்களின் வாழ்க்கை மிகுந்த நெருக்கடிக்குள்ளானது. பேரரசுகள் நிலைப்படுத்திக்கொள்ள முயன்ற சங்ககாலப் பிற்பகுதியில் கலைஞர்களிடையேயும் நிலையான வாழ்வுக்கான முயற்சிகள் தோன்றின.

திணை மக்களைச் சார்ந்து வாழ்ந்தோர் நாட்டுப் புறக் கலைகளை வளர்த்து வந்தனர். அகவன் மகளிர், வெறியாடு வேலன் போன்ற சடங்கோடு தொடர்புடைய சிறுதெய்வ வழிபாட்டுக் கலைஞர்களாயினர். பெண் கலைஞர்களில் சிலர் பரத்தையராகவும் ஆயினர். சில கலைஞர்கள் முல்லை, மருதம், நெய்தல் போன்ற திணை நில மக்களின் இல்லற வாழ்க்கைச் சூழலின் வாயில்களாக, தூதராக விழாக்காலங்களில் கலை இன்பம் அளிப்பவராக நிலை பெற்றனர்.

÷சங்க காலத்தில் காதல் மற்றும் வீர உணர்வுகளை கலைத்திறமை மூலம் வளர்த்த இப்பாணர்கள் பல்வேறு தளங்களில் இயங்கியுள்ளனர். சங்ககால இறுதியில் பக்தி உணர்வு எழுச்சிப்பெறத் தொடங்கியபோது அக்கலைஞர்களின் பணி பக்தியாளர்களோடு தொடர்ந்து சென்றுள்ளது என்பதை அறிய முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com