பொருள் பொதிந்த அடைமொழிகள்

தமிழில் அடைமொழி என்ற ஒன்று உண்டு. இந்த அடைமொழிகளைக் கொண்டு ஒருவரின் அல்லது ஒரு பொருளின் சிறப்பு, சிறப்பின்மைகளை அறிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, 'கோல்' என்ற சொல்லுடன் 'செம்மை' என்ற பண்பினைச் சேர்த
Updated on
2 min read

தமிழில் அடைமொழி என்ற ஒன்று உண்டு. இந்த அடைமொழிகளைக் கொண்டு ஒருவரின் அல்லது ஒரு பொருளின் சிறப்பு, சிறப்பின்மைகளை அறிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, "கோல்' என்ற சொல்லுடன் "செம்மை' என்ற பண்பினைச் சேர்த்து "செங்கோல்' என்றால், அதன் உயர்வு தெரிகிறது. கோலுக்குச் செம்மை அடைமொழி. கொடுமை என்ற சொல்லை அடைமொழியாகச் சேர்த்துக் கொடுங்கோல் என்றால், அதன் சிறப்பின்மை வெளிப்படுகிறது. புலவர்கள் அடைமொழிகளை ஏதேனும் ஒரு காரணம் கருதியே பயன்படுத்தினர். வெற்று அலங்காரத்திற்காகப் பயன்படுத்தவில்லை.

சங்கப் புலவர்களில் ஒருவராகிய வெள்ளைக்குடி நாகனார் புறநானூறு 35-ஆம் பாடலில்,

நளியிரு முந்நீர் ஏணி யாக

வளியிடை வழங்கா வானம் சூடிய

மணிதிணி கிடக்கை தண்டமிழ்க் கிழவர்

முரசு முழங்கு தானை மூவர்...

"நீர் செறிந்த பெரிய கடல் எல்லையாகக் காற்று வழங்காத வானத்தைச் சூடிய மண் செறிந்த உலகத்தின்கண் குளிர்ந்த தமிழ் நாட்டிற்கு உரியராகிய முரசு ஒலிக்கும் படையினை உடைய மூவேந்தர்' என்றார்.

வானத்தினை "வளியிடை வழங்கா வானம்' என்று அடைமொழி தந்து குறிப்பிடுகிறார். "வளியிடை வழங்கா' அதாவது, "காற்று வழங்கா' என்ற அடைமொழி தருகிறார். இந்த அடைமொழி வானத்திற்கு மிகப் பொருத்தமாக உள்ளது. சுமார் எட்டு கி.மீ.க்கு மேல் ஆகாயத்தில் காற்று இல்லை என அறிவியல் வல்லுநர் கூறுவதுடன் இவ்வடைமொழி ஒத்துவரக் காண்கிறோம். "வளியிடை வழங்கா வானம்' என்று அடைமொழியுடன் வெள்ளைக்குடி நாகனார், வானத்தைக் குறிப்பிட்டுப் பாடியது கற்பனை கலவாத உண்மையாகிப் புலவரின் வானவியல் அறிவைப் புலப்படுத்திவிட்டது.

"விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்' (புறநா-53) என்னும் அருமையான தொடரைத் தந்த பொருந்தில் இளங்கீரனார் என்னும் புலவர், கபிலரை,

 செறுத்த செய்யுட் செய்செந் நாவின்

வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் (புறநா-53:11,12)

என்று பல அடைமொழிகளை அடுக்கி, புகழின் உச்சிக்கே கொண்டு சென்றார். இவ்விரு அடிகளுக்கும் விளக்கம் தரும் பழைய உரையாசிரியர், "பல பொருளையும் அடக்கிய செய்யுளைச் செய்யும் செவ்விய நாவினையும் மிக்க கேள்வியையும் மிக்க புகழையும் உடைய கபிலன்' என்றெழுதினார்.

சொற்செறிவும் பொருட்செறிவும் தொடை நலச்செறிவும் அடக்கி, இனிமைச்சுவை சொட்டச் சொட்ட பாடுந்திறனில் ஓங்கித் தமிழுலகு அளந்த உயர் புலவன் கபிலன் என்பதைக் கலித்தொகையிலும் (குறிஞ்சிக்கலி), பத்துப்பாட்டினுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டிலும் கண்டு களித்துச் சுவைக்கலாம்.

தமிழர்தம் திருமண நிகழ்ச்சி முறையைத் தோழி கூற்றில் அமைத்துப் பாடும்போது திருமணத்தை முன்னின்று நடத்தும் அறிவன் (சோதிடன்) சான்றோர் இவ்விருவரையும் குறிப்பிடும் கபிலர்.

நெறியறி செறிகுறி புரிதிரிபு

அறியா அறிவனை முந்துறீஇத்

தகைமிகு தொகைவகை அறியும்

சான்றவர் இனமாக .....

என்று அறிவன் சான்றோரின் புலமைத் திறத்தினைத் தம்முடைய செறுத்த செய்யுட்செய் திறன் மூலம் வெளிப்படுத்தி நம்மை வியக்க வைக்கிறார்.

கபிலர் பாடிய இவ்விரு அடிகளுக்குப் பொருள் கூறும் நச்சினார்க்கினியர், "நூல்நெறியாலே அறிந்த இருவரும் (தலைவன், தலைவி) கூடுதற்கு ஏதுவாகிய முகூர்த்தம் வேறுபட்டுத் தப்புதலை ஒரு காலத்தும் அறியாத கணிவனை (சோதிடனை) முன்னிட்டு, அழகு மிகுகின்ற தொகுத்துக் கூறுதலையும் வகுத்துக் கூறுதலையும் அறியும் சான்றவர்' என்று எழுதுகிறார். இவ்வாறு விரிந்த பொருள்தரும் வகையில் சுருங்கிய சொற்களை அமைத்துப் பாடியதால்தான் பொருந்தில் இளங்கீரனார், வேறு எந்தப் புலவரிடமும் இல்லாத தனித்திறன் கபிலரிடம் இருக்கக்கண்டு "செறுத்த செய்யுட்செய் கபிலன்' என்று பொருள்பொதிந்த அடைமொழி தந்து பாராட்டினார்.

பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார் ராமனுடைய வில்லாற்றலைக் குறிப்பிடும்போது ""அரக்கர் தலைவன்தன் வற்பார் திரள்தோள் ஐந்நான்கும் துணித்த வல்வில் இராமன்'' (5:1-4) என்று பாடினார்.

சீவகசிந்தாமணி பாடிய திருத்தக்கதேவரும் கனகமாலையார் இலம்பகத்தில் வரும் விசயன் என்ற பாத்திரத்தின் மூலம் ராமனைப் புகழ்வார். சீவகன் ஏமமாபுரத்துச் சோலையில் இருந்தபோது அங்குவந்த ஏமமாபுரத்தரசன் மகன் விசயன் என்பான் சீவகனை அணுகி, "தான் அம்பெய்தி வீழ்த்த முடியாத மாங்கனியை விழச்செய்து தருமாறு வேண்டினான். சீவகன் உடனே ஓர் அம்பெய்து அந்த மாங்கனி தன் கையில் வந்து விழச் செய்தான். இச்செயல் கண்ட விசயன் வியந்து, ""மராமரம் ஏழும் எய்த வாங்குவில் தடக்கை வல்வில் இராமனை வல்லன் என்பது இசையலால் கண்டதில்லை'' அதாவது, வில்லினை வளைத்த கையினை உடைய ராமன் மராமரம் ஏழும் ஊடுருவ எய்த வலிய விற்றொழிலை வல்லன் என்பது வார்த்தையல்லது கண்ணினால் கண்டதில்லை; இப்போது கண்டேன்'' எனக் கூறியதாகப் பாடுமிடத்து "வல்வில் இராமன்' என்ற அடைமொழியுடன் ராமனை, திருத்தக்கதேவர் சிறப்பித்தார். வல்வில் சீவகனை ராமனாகக் காட்டுகிறார் தேவர். "வல்வில் இராமன்' என்று ஆழ்வார் கொடுத்த அடைமொழி பொருள் பொதிந்தது. அதனால் தேவரும் வழிமொழிந்தார்.

இவ்வாறு பண்டைய இலக்கியங்களில் புலவர்கள் பொருளொடு பொருந்திய அடைமொழிகளையே பயன்படுத்தினர். அதனால் பலநூறு ஆண்டுகளானாலும் பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று பொருள் பொதிந்த இவ் அடைமொழிகள் நிலைத்து நிற்கின்றன. இன்றுபோல் வெற்று அடைமொழி தந்து புகழ்வதும், அதனை ஏற்று மகிழ்வதும் அன்று இல்லை. பொருள் பொதிந்த அடைமொழிகளே என்றும் நிலைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com