சங்க இலக்கியத்தில் பங்காளிச் சண்டை

பண்டைத் தமிழகத்தில் மன்னராட்சி நடைபெற்ற காலங்களில் பெருநில வேந்தர்களும் குறுநில மன்னர்களும் மண்ணாசை காரணமாகவோ, பெண்ணாசை காரணமாகவோ தங்களுக்குள் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போர் புரிந்து வந்துள்ளனர். அதுப
சங்க இலக்கியத்தில் பங்காளிச் சண்டை
Published on
Updated on
1 min read

பண்டைத் தமிழகத்தில் மன்னராட்சி நடைபெற்ற காலங்களில் பெருநில வேந்தர்களும் குறுநில மன்னர்களும் மண்ணாசை காரணமாகவோ, பெண்ணாசை காரணமாகவோ தங்களுக்குள் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போர் புரிந்து வந்துள்ளனர். அதுபோல வேதாயாதிகள் (உடன் பிறந்தோர்) ஒருவரை ஒருவர் நாடாளும் உரிமைக்காகப் போராடிய வரலாறுகளும் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. அதற்கு எடுத்துக் காட்டாக புறநானூற்றுப் பாடல்களுள் ஒன்றை இங்கு காண்போம்.

அண்ணன் தம்பிகளான சோழன் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் சோழ நாட்டின் இருவேறு பகுதிகளில் ஆட்சி செய்து வந்தபோதிலும் அவ்வப்போது தங்களுக்குள் தொடர்ந்து போர்புரிந்து வந்துள்ளனர். ஆவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்த நெடுங்கிள்ளி, அண்ணன் நலங்கிள்ளியுடன் நடந்த போரில் தோற்று உறையூரில் வந்து தங்குகிறான். அதை அறிந்த நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிடுகிறான். சோழன் குடியைச் சேர்ந்த இருவரும் தம்முள் பகைகொண்டு மாறிமாறிப் போர் செய்துகொண்டு இருப்பதைக் கண்டு நெஞ்சம் பதைத்த கோவூர்கிழார் என்னும் புலவர், இருவரையும் சந்து செய்யும் (சமாதானம்) பொருட்டுப் பாடியுள்ள ஒரு பாடல் இங்கு நினைவு கூரத்தக்கது.

""நலங்கிள்ளி! உன்னால் எதிர்க்கப்படுபவன் பனம்பூ மாலையைச் சூடிய சேரனும் அல்லன். வேப்பம்பூ மாலையைச் சூடிய பாண்டியனும் அல்லன். உன்னுடைய மாலையும் ஆத்திப்பூமாலை. உன்னோடு போர் செய்பவன் அணிந்துள்ள மாலையும் ஆத்திப்பூ மாலையே! இருவரில் ஒருவர் தோற்றாலும் தோற்கப்போவது என்னவோ உமது சோழர் குடியே! உங்கள் இருவருக்கும் நடைபெறும் போரில் இருவரும் வெற்றி பெறுவது என்பது இயற்கையில் நடக்கக்கூடிய செயலன்று. அதனால், உம்முடைய செயல் சோழர் குடிக்குத் தகுதியுடைய செயல் அல்ல.

நீங்கள் இருவரும் உங்களுக்குள் நிகழ்த்தும் இப்போரைக் கண்ணுறும் உம்மையொத்த அரசர்களுக்கு (சேர, பாண்டியர்க்கு) உடல் குலுங்கும்படியான (உடல் பூரிக்கும்படியான) நகைப்பை உண்டாக்கும். எனவே, உங்களுக்குள் நிகழும் இப்போரை உடனடியாக நிறுத்துங்கள்'' என்று அறிவுரை கூறும் வகையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். அப்பாடல் இதுதான்,

""இரும்பனை வெண்டோடு மலைந்தோன் அல்லன்

கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்

நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே, நின்னொடு

பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே

ஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியே

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே - அதனால்

குடிப்பொருளன்று நும் செய்தி கொடித்தேர்

நும்மோரன்ன வேந்தர்க்கு

மெய்ம்மலி உவகை செய்யும் இவ்விகலே''

(புறம் - 45)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com