காலமாறுபாடும் நோக்க வேறுபாடுமே காரணம்!

ஐம்பெருங் காப்பியங்களின் நோக்கம் வேறு, கம்பராமாயணத்தின் நோக்கம் வேறு. இந்த அடிப்படை உண்மையை  முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இராமாயணம், மகாபாரதம் என்பன இருபெரும் இதிகாசங்கள். இவற்றில் "ஆதிகாவியம்' என
Published on
Updated on
1 min read

ஐம்பெருங் காப்பியங்களின் நோக்கம் வேறு, கம்பராமாயணத்தின் நோக்கம் வேறு. இந்த அடிப்படை உண்மையை  முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இராமாயணம், மகாபாரதம் என்பன இருபெரும் இதிகாசங்கள். இவற்றில் "ஆதிகாவியம்' எனப்படும் வால்மீகி ராமாயணக் கதைப்போக்கை, அப்படியே பின்பற்றாமல், தமிழ்ப் பண்பாட்டைப் போற்றி மலர்ந்ததே கம்பராமாயணம். இதிகாசம் வேறு, காப்பியம் வேறு என்று தெரிந்து, தெளிதல் வேண்டும்.

சிலப்பதிகாரமும், சீவகசிந்தாமணியும் பலதார மணத்தை ஏற்றுக்கொள்ளும் காப்பியங்கள். ஆனால் கம்பன் காவியமோ, "ஒருவனுக்கு ஒருத்தி' என்ற உயரிய பண்பாட்டையும், ஆண்களுக்கும் "கற்பு' என்ற விழுமிய பண்பு உண்டு என்பதையும், புனிதமான மனிதநேயமே மனிதனை தெய்வமாக உயர்த்தும் என்ற உயர்ந்த நோக்கத்தையும், உலகமெலாம் ஒரே குடும்பமாக, சகோதர நேயத்துடன் வாழ வேண்டும் என்ற சீரிய நோக்கத்தையும் மையமாகக் கொண்டு எழுந்தது.

மனிதன், மனிதநேயத்துடன் செயல்பட்டால், "மனிதன் தெய்வமாகலாம்' என்பதே கம்பன் காவியம் தரும் விழுமிய நோக்கம்.

சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்கள், கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. எனவே, அவற்றுடன் 9-ஆம் நூற்றாண்டில் தோன்றிய கம்பராமாயணத்தை இணைப்பது பொருத்தமானதாக அமையாது. மேலும், காவிய நோக்கிலும், கருப்பொருள் நோக்கிலும் சீவகசிந்தாமணியும், கம்பராமாயணமும் முரண்பாடு மிக்கவை. சிலப்பதிகாரம் சமணக்காப்பியம், மணிமேகலையோ பெüத்தக் காப்பியம். எனவே சமண, பெüத்த காப்பியங்களோடு கம்பராமாயணத்தை ஒப்பிடவே முடியாது.

எனவே, கால வேறுபாடு, நோக்க வேறுபாடுள்ள ஐம்பெருங்காப்பியத்துள் இதிகாசமாகிய கம்பராமாயணத்தை ஒப்பிடவே கூடாது. அதனால்தான், ஐம்பெருங் காப்பியங்களுள் கம்பராமாயணம் இடம்பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com