கடுகுக்குள் கடல்

சில சொற்களில், சில அடிகளில் பலபொருள்களை அடக்கிக் காட்டுவதே செய்யுளாகும். அதனால்தான் நன்னூல் இயற்றிய பவணந்தியார். ""சில்வகை யெழுத்தில் பல்வகைப் பொருளைச் செவ்வென் ஆடியிற் செறித்து இனிது விளக்கித் திட்ப
Updated on
2 min read

சில சொற்களில், சில அடிகளில் பலபொருள்களை அடக்கிக் காட்டுவதே செய்யுளாகும். அதனால்தான் நன்னூல் இயற்றிய பவணந்தியார்.

""சில்வகை யெழுத்தில் பல்வகைப் பொருளைச்

செவ்வென் ஆடியிற் செறித்து இனிது விளக்கித்

திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம்'' (நன்.18)

என்றார். இலக்கணத்துக்குச் சொன்னாராயினும் இந்த நூற்பா இலக்கியத்துக்கும் பொருந்தும்.

தண்டியலங்காரம் தந்த தண்டி என்னும் புலவர், பொருளணிகளில் ஒன்றாகிய சங்கீரண அணிக்குப் பின்வரும் இலக்கணம் தருகிறார்.

""மொழியப் பட்ட அணிபல தம்முள்

தழுவ உரைப்பது சங்கீர ணம்மே''

தன்மையணி முதலாகச் சொல்லப்பட்ட அணிகளில் பலவும் (அதாவது இரண்டிறந்த பல அணிகள்) ஒரே செய்யுளில் பொருந்தும்படி உரைப்பது சங்கீரணம்.

வள்ளுவர், தம் திருக்குறள் ஒன்றில் ஓரடிக்குள் ஒன்பது வகையான பொருள் தோன்றப் பாடியுள்ளார்.

""இலனென்னும் எவ்வம் உரையாமை யீதல்

குலனுடையான் கண்ணே யுள'' (223)

"யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும், அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும் இவை இரண்டும் உளவாவன குடிபிறந்தான் கண்ணே' என்று உரை கூறிய பரிமேலழகர் தம் காலத்துப் பிறர் செய்ததாகக் கிடைத்த மூவகை உரைகளைப் பின்வருமாறு எடுத்துக் காட்டுவார். (இளிவரவு-இழிவு).

இனி, "இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்' என்பதற்கு, அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும், அதைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையில் கொடுத்தல் எனவும், யான் இதுபொழுது பொருளுடையேன் அல்லேன் எனக் கரப்பார் சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும் உரைப்பாரும் உளர்' எனப் பிறர் மூவகையில் பொருள் கொண்டதைக் குறிப்பிடுகிறார். இதனால் இக்குறளின் முதலடி, பழைய உரையாசிரியர்கள் நான்கு வகையாகப் பொருள்கொள்ளும் அளவுக்கு விரிந்த பொருளை உள்ளடக்கி உள்ளதெனத் தெரிகிறது.

வை.மு.கோபால கிருஷ்ணமாசாரியார், "இலன் என்னும் எவ்வம் உரையாமை யீதல்' என்ற இவ்வடிக்கு மேலும் ஐந்துவகைப் பொருள் காண்கிறார்.

தன்னிடம் வந்து யாசிப்பவன் எவனோ அவன் தன்னிடம் வந்து யாசிப்பவர்க்கு "இல்லேன்' என்ற இழிமொழியைச் சொல்லாமல் அவர் வேண்டுவன எல்லாம் கொடுக்கும்படி அவனுக்கு நிரம்பப் பொருள் கொடுத்தல் என்று முன்னைய உரையாசிரியர்கள் போல "இலன்' என்பதைத் தன்மை ஒருமையாக்கிக் கொண்டு உரை கூறினார். பிறகு இனி, "இலன்' என்பதை ஆண்பால் படர்க்கை ஒருமை வினைமுற்றாகக் கொண்டு, இவன் இல்லாதவன் என்னும் நிந்தைச் சொல்லை யாசகனைக் குறித்துத் தான் சொல்லாமல் ஈதல் என்றும், இவன் இல்லாதவன் என்னும் இகழ்சொல்லைத் தன்னைக் குறித்து யாசகனாவது பிறராவது சொல்லாதபடி ஈதல் என்றும், தன்னிடம் வந்துபோன யாசகனைக் குறித்தும், பிறர் இவன் இல்லாதவன் என்று சொல்லாமல் பொருளால் மிக்கவன் என்று சொல்லும்படி ஈதல் என்றும், இவன் நம் இல்லினிடத்தே வந்துள்ளான் என்று இகழ்ந்து கூறாமல், ஈதல் என்றும் கூறலாம் என்று கிருஷ்ணமாசாரியார் ஐந்து வகையில் பொருள் கூறினார்.

தண்டியலங்கார ஆசிரியர் சங்கீரண அணிக்கு எடுத்துக் காட்டாகத் தந்த பாடலில், மிளகுக்குள் ஆறு கடலைப் புகட்டினால் போல் ஆறு அணிகளைச் செறித்துப் பாடினார். திருவள்ளுவரோ, "இலனென்னும் எவ்வம் உரையாமை யீதல்' என்ற ஓரடிக்குள் கடுகுக்குள் கடலைப் புகட்டினாற்போல் ஒன்பது வகைப் பொருளைப் புகட்டிப் பாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com