செம்மொழி மாநாட்டின் சார்பாக கோவூர்க்கிழார் அரங்கில் நடந்த "நுண்கலைகள்' என்னும் தலைப்பில் அமைந்த ஆய்வரங்கில் கட்டுரை படித்த மூவரின் கட்டுரைகளுமே அடித்தளத்தில் இருக்கும் சமுதாயத்தினரின் பெருமைகளைக் கூறுவதாக அமைந்தது.
"பாணர் உள்ளிட்ட கலைஞர்கள் குறித்த கலையியல் சிந்தனை' என்னும் தலைப்பில் பேராசிரியர்
குணசேகரன் அளித்த ஆய்வுரை
சங்ககாலப் பாடல்களை ஆராய்ந்த அளவுக்கு அதில் இடம்பெற்றிருக்கும் பாணர்களைப் பற்றி உரையாசிரியர்கள் ஆராயவில்லை. பாணர்களை அடுத்தே புலவர்கள் வருகின்றனர். பாணர்களுடையது, வாய்மொழி மரபிசை. இவர்கள் நாடோடிச் சமூகத்தினராக இருந்திருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட இனத்தின் பின்னணியைப் பாடி பரிசு பெறுபவர்களாக பாணர்கள் இருந்தனர்.
சமூகத்தில் சாதிக்கொரு பாணர் இருந்திருக்கிறார். கைக்கோளன் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பாடுவதற்கு பொன்னம்பலத்தார் என்னும் பாணர் இருந்திருக்கின்றனர். வன்னியர் இனத்தைப் பற்றி பாடுவதற்கு நோக்கர் என்னும் பாணர் இருந்திருக்கின்றனர்.
அருந்ததியினர் சமூகத்தைப் பாடுவதற்கு தொம்ம நாயுடு, கொங்கு வேளாளர் இனத்தைப் பற்றி பாடுவதற்கு முடவர், இஸ்லாமியர் இனத்தைப் பாடுவதற்கு பக்கீர் என பல பாணர் வகைகள் இருந்திருக்கின்றன. பான் என்ற பாணர் வகையினர் ஜார்கண்ட் மாநிலத்தில் இன்றும் இருக்கின்றனர்.
சங்க காலப் பாடல்களில் பேய் மகளிர் என்று குறிப்பிடப்படுவது, பாணர்கள் சமூகத்தில் இருக்கும் பெண்களைத்தான். இவர்களை விறலியர் என்பர். இவர்கள் நடனமாடுவதுடன் மருத்துவம் போன்ற துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர்.
சங்ககாலத்தில் போர்க்களங்களில் பிணங்களை
அப்புறப்படுத்தும் பணியை இவர்கள் செய்திருக்கின்றனர்.
பாணர் சமூகத்தில் இசைப்பவர்கள், நடனமாடுபவர்கள் என குடும்பமாக குழுவாகத்தான் இருப்பார்கள். பாணர் பாடினால்தான் அரசவையே கூடும். பாணர்கள் இல்லாத அரசும் இல்லை, போரும் இல்லை என்பதுதான் சங்ககாலம் காட்டும் உண்மை.
"நந்தனார் சரித்திரத்தின் பாடல் முறைமைகளும் அதன் தமிழ்ச் செழுமையும்' என்னும் தலைப்பில் பேசிய பாலசுப்பிரமணியன்
19-ம் நூற்றாண்டில் கோபால கிருஷ்ண பாரதி எழுதிய நந்தனார் சரித்திரத்தை 1861-ல் முதன்முதலாகப் பதிப்பித்தவர் சி.சே.துரை என்னும் ஆங்கிலேயர்தான். அதன்பின் பல பதிப்புகளைக் கண்டது இந்தப் புத்தகம். பெரிய புராணத்தில் வரும் நந்தனார் சரித்திரத்திலிருந்து கோபால கிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரம் நிறைய மாற்றங்களை உள்ளடக்கியதாக இருந்தது.
தன்னுடைய நந்தனார் சரித்திரத்தில் வேதியர் என்னும் பாத்திரத்தைப் புகுத்தினார் கோபால கிருஷ்ண பாரதி. கர்நாடக, கிராமிய, இந்துஸ்தானி இசை வடிவங்களை தன்னகத்தே கொண்டிருந்தது நந்தனார் சரித்திரம்.
உ.வே.சாமிநாதய்யர் தன்னுடைய "என் சரித்திரம்' நூலில், 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கர்நாடக இசை வளர்த்த மும்மூர்த்திகளின் பாடல்களை விடவும் சிறப்பானதாக கோபால கிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"தியாகேசர் குறவஞ்சி' என்னும் தலைப்பில் பேசிய பத்மஸ்ரீ ராமதிலகம் (85) அளித்த ஆய்வுரை
குறவஞ்சிகளில் 96 வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தியாகேசர் குறவஞ்சி. இது 18-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கணிக்கப்படுகிறது. குறவஞ்சி நாட்டிய நாடகம், ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் உன்னதத்தைச் சொல்வது. இந்த நாட்டிய நாடகத்தில் முக்கிய பாத்திரமாக குறத்தியின் பாத்திரம் வருகிறது.
நாரதரே குறத்தியாக வருவதாக கதையில் வருகிறது. ராஜமோகினியாக வரும் நாயகி, தியாகேசரை எண்ணி வாடுவதும், அவளுக்கு ஆறுதல் கூறி, ஆற்றுப்படுத்துவதாக அமைந்த நாட்டிய நாடகம் இது. குறத்தியாக வருபவள் அவளது குலப் பெருமையைக் கூறுவாள்.
"பூனை மாமிசம் சாப்பிட மாட்டோம். பொய் சொல்ல மாட்டோம். நாங்கள் செவ்வேளுக்கு சம்பந்தி' என்பாள்.
வாசல் இது வாசல் இது...
மகராசன் வாசல் இது...
மறை நான்கும் கோபுரமாய்...
வான் கிழிக்கும் வாசலிது...
நிறையாறு சாத்திர புராணங்கள்
நிறை வாசலிது...
- என்று பாடிய ராமதிலகத்தின் பாடல், மயிலிறகாய் சுவைஞர்களை வருடியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.