"தமிழ்நாதனின்' தமிழ் உணர்வு

தமிழ்க் கவிஞர்களில் தமிழ் உணர்வு மிக்கவர் திருஞானசம்பந்தர். அவர், சைவசமயத்தை வளர்த்ததோடு தமிழையும் போற்றி வளர்த்தவர். தமிழ் உணர்வை அனைவருக்கும் தந்தவர். தமிழைப் பெருமைப்படுத்தி சிறப்போடு விளங்கவைக்கப்
"தமிழ்நாதனின்' தமிழ் உணர்வு

தமிழ்க் கவிஞர்களில் தமிழ் உணர்வு மிக்கவர் திருஞானசம்பந்தர். அவர், சைவசமயத்தை வளர்த்ததோடு தமிழையும் போற்றி வளர்த்தவர். தமிழ் உணர்வை அனைவருக்கும் தந்தவர். தமிழைப் பெருமைப்படுத்தி சிறப்போடு விளங்கவைக்கப் பாடுபட்ட சைவசமயக் குரவருள் முதன்மையானவர்.

""தென்தமிழ் விளங்கவந்த திருக்கழு மலத்தோன்'' என்ற அவர்தம் கவிதைத் தொடர், அவர்தம் உயர்வான நோக்கத்தையும் பணியையும் புலப்படுத்தும். அவர் புதுப்புது யாப்பு முறைகளை உருவாக்கித் தமிழுக்கு ஆக்கம் தந்தார். வடிவ அமைப்பிலும் சொல்லும் முறையிலும் தமிழ்க்கவிதை உலகில் புதுமை செய்தவர். திருவெழுகூற்றிருக்கை, மாலைமாற்று, மொழிமாற்று, திருச்சக்கரமாற்று, திருத்தாளச்சதி முதலியவற்றை எவரால் மறக்க முடியும்? தமிழின் இசைத்துறையை வளமாக்கியவர் திருஞானசம்பந்தர். இன்றைய கர்நாடக இசையின் முன்னோடி அவர்தான். தமிழ் உணர்வால் தமிழர்களை ஒற்றுமைப்படுத்திய முதல் தமிழ்ப் பற்றார்வலரும் அவரே.

சங்கத் தமிழ் மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட களப்பிரர் ஆட்சிக் காலத்திலும், தொடக்க காலப் பல்லவர்கள் ஆட்சிக் காலத்திலும் பிராகிருத மொழி, பாலிமொழி, வடமொழி முதலிய மொழிகள் அதிகமான செல்வாக்கைப் பெற்றபோது தமிழைக் காத்து, சபையேற்றி அழகுபார்க்கப் பாடுபட்டவர் சம்பந்தர்.

""நற்றமிழ்க்கு இன்துணை ஞானசம்பந்தர்'' என்று முழங்கி, தமிழின் அருமை பெருமைகளை இசைத்தார். அருந்தமிழ், இன்தமிழ், ஒண்தமிழ் ஒளிர்பூந்தமிழ், கலைமலிதமிழ், குன்றாத்தமிழ், செந்தமிழ், செப்பரிய தண்தமிழ், ஞானத்தமிழ், தவமல்குதமிழ், நற்றமிழ், பண்ணாருந்தமிழ், பலந்தரு தமிழ், பழுதில் இறை எழுதுமொழி தமிழ், முத்தமிழ், வண்தமிழ், வேதியன் விரும்புதமிழ்'' என்றெல்லாம் நெஞ்சார்ந்த உணர்வோடு பாடினார். தமிழை, தக்க அடைமொழிகளோடு அற்புதமாகப் புகழ்ந்து, மிகுதியாகப் பாடிய முதற்கவிஞர் சம்பந்தர்தான். மொழியுணர்வைத் தூண்டிய மகாகவி பாரதியின் முன்னோடி சம்பந்தரே எனலாம்.

வடமொழியே தெய்வமொழி என்று கூறப்பட்ட காலகட்டத்தில், தமிழும் தெய்வமொழிதான் என்று முத்தமிழ் விரகர் ஞான சம்பந்தர் குரல் கொடுத்தார். தாம் பாடிய முதற்பதிகத்தின் திருக்கடைக்காப்பிலேயே தமிழைக் ""திருநெறிய தமிழ்'' என்று பாடினார். ""மறைவளரும் தமிழ்'', ""மறை இலங்குதமிழ்'' என்றெல்லாம் பாடி, தமிழின் பெருமையையும் சிறப்பையும் அருமையையும் உணர வைத்தார்.

÷அனைத்தும் சிவமயம் என்பர். இவரோ சிவமே தமிழ்மயம் என்றார். திருவீழிமிழலைத் திருப்பதிகத்தில் நட்டபாடைப் பண்ணில்,

""பண்ணும்பதம் ஏழும்பல ஓசைத்தமிழ் அவையும்

.....     ....      .....   ........

விண்ணும்முழு தானான்''

என்று பாடியதைப் பாருங்கள். திருக்கானூர்த் திருப்பதிகத்தில், தக்கேசிப் பண்ணில்,

""தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணி நல்ல

முழவம்மொந்தை மல்குபாடல் செய்கையிடம் ஓவார்''

என்று பாடி, தமிழ் ஒலிக்கும் இடமெல்லாம் சிவபிரான் இருப்பான் என்று உணர்ச்சி பொங்கப் பாடியருளினார். தமிழை மறவாத சிவபக்தி ஞானசம்பந்தருக்கு!

தமிழைப் புகழ்ந்து பாடுவதோடு, தம்மையும் தமிழோடு இணைத்துப் பாடுவதில் ஈடுபாடு மிக்கவராகத் தவமுதல்வர் சம்பந்தர் திகழ்ந்தார். தமிழைவிட்டுத் தம்மைப் பிரித்துப் பார்க்க முடியாமல் வாழ்ந்தவர் அவர்.

""தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்'', ""தமிழ் விரகன்'', ""நற்றமிழ் ஞானசம்பந்தன்'', ""நல்ல செந்தமிழ் வல்லவன்'', ""முத்தமிழ் விரகன்'' என்றெல்லாம் பாடிப் பெருமைப்பட்டுக்கொண்டார். இவ்வண்ணம் தமிழைத் தம்மோடு சார்த்திப் பாடியோர், சம்பந்தர்க்கு முன்னும் பின்னும் இலர். தமிழ்ப் புலவன், தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் அவருக்கிருந்த ஆர்வத்தை இத்தொடர்கள் சுட்டுகின்றன. மொழியுணர்வையும் இனவுணர்வையும் இவ்வாறு பாடித் தூண்டினார். தமிழர்களுக்கு தமிழ் உணர்வூட்ட, தமிழை முன்னிலைப்படுத்திப் பாடி, முதலில் வெற்றி கண்டவர் ஞானசம்பந்தர்தான்.

அடியார்களின் பணிகளையும் பெருமைகளையும் சுட்டிக்காட்டிப் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்த சுந்தரர், ""நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன்'' என்றார். தமிழ் வளர்த்த ஞானசம்பந்தரின் பணியை முதலில் உணர்ந்து கொண்டவர் ஆலாலசுந்தரர்தாம்.

வரலாறு உணர்ந்து பாடும் சேக்கிழார் பெருமான், சம்பந்தரின் அவதாரத்தைப் பாடும்போது, ""வண்தமிழ் செய் தவம்நிரம்ப'' என்று பாடியது நோக்கத்தக்கது. எனவே, தமிழை வளர்த்துச் செழுமைப்படுத்திய ஞானசம்பந்தர், தம்மைத் ""தமிழ்நாதன்'' என்று பாடிக்கொண்டது சாலப் பொருத்தமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com