ஆராய்ச்சி, உண்மையைக் காண்பதற்காகவே என்பதில் ஆட்சேபமிருக்க முடியாது. ஆனால் உண்மை என்பது என்ன? எந்தப் பொருளையும் எந்தக் கோணத்திலிருந்தும் அளந்து பார்க்க முடியும். அப்படிப் பார்ப்பது சரியா? ஆதலால் பொருளின் தன்மை பற்றி அதற்கென்று ஒரு கோணம் உண்டு. அதன் வழியேதான் அதைப் பார்க்க வேண்டும். அதைவிட்டு ஒருவர் குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கமாகவே பார்ப்பேன் அல்லது என் கோணத்திலிருந்துதான் பார்ப்பது என்று முயன்றால், அவர் ஆராய்ச்சி நிலைக்கு வந்திருக்கக் கூடாது என்று மட்டும்தான் சொல்லலாம்'' என மு.அருணாசலம், தமது "தமிழ் இலக்கிய வரலாறு-பன்னிரண்டாம் நூற்றாண்டு' என்ற நூலின் முன்னுரையில் (பக்.12) கூறியுள்ளார்.
மு.அருணாசலம் சொன்ன அறிவுரை, அறவுரை இன்று ஓர் ஆய்வுமையத்துக்கே சொல்ல வேண்டிய அவலநிலை வந்து சேர்ந்திருப்பதை எண்ணி வருந்தாமல் இருக்க முடியாது.
கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலமே செம்மொழித் தமிழின் பொற்காலம். அந்தப் பொற்காலத்தில் தோன்றிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலம்பு, மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் ஆகிய நூல்களே தமிழ் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுக்கு உள்படுத்தப்படுகின்றன என சென்னையில் இயங்கி வரும் செம்மொழித் தமிழாய்வு மைய நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் "செம்மொழிச் செய்திமடல்' கூறுகிறது.
மேலே காணும் நூல்கள் ஆய்வுக்கு உள்படுகின்றன எனச் சொல்லும் ஆய்வு நிறுவனம், அதே சமயம் அவற்றைச் செம்மொழித் தமிழின் பொற்கால நூல்கள் என முன் கூட்டியே எப்படி அறுதியிட்டு முடிவு சொல்கிறது? அவை தோன்றிய காலம் பொற்காலம் என முடிவான பின்பு ஆய்வு தேவையா?
இங்கேதான் அறிஞர் மு.அருணாசலத்தின் எச்சரிக்கையை நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. எந்த ஒன்றையும் என் கோணத்திலிருந்துதான் பார்ப்பேன் எனச் சொல்லும் ஒருவர் ஆராய்ச்சிக்கே வரக்கூடாது என்பதுதான் அது.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் அதன் கோணத்திலிருந்து பார்ப்பதன் முடிவுதான் கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம் செம்மொழித் தமிழின் பொற்காலம் என்பதாகும்.
கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் முதலிய பக்தி இலக்கியங்கள் மற்றும் சிற்றிலக்கியங்கள் ஆகியன, செம்மொழித் தமிழாய்வு மைய நிறுவனத்தின் பார்வையில் செம்மொழித் தமிழாக இல்லாமல் காட்சிப்படும் அவலத்தை என்னவென்று சொல்வது?
இதில் ஒருபெரிய வேடிக்கை என்னவென்றால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "எங்கள் தமிழ்மொழி செம்மொழி நிலையை எய்திவிட்டது; அதனால் அரசு அதனைச் செம்மொழிப் பட்டியலில் சேர்க்க வேண்டும்' எனக் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பே உரிமைக் கொடியை உயர்த்திப் பிடித்த பரிதிமாற்கலைஞர் முதலான பெருமக்கள் பலர் எந்த அளவுக்குச் சங்கத் தமிழை நேசித்தார்களோ, அந்த அளவுக்குச் சமயத் தமிழை நேசித்தார்கள். சமயத் தமிழ்தான் அவர்கள் வாழ்க்கை நெறியை வகுத்தது. அந்தச் சான்றோர்கள் போற்றிக் கொண்டாடிய சமய நூல்கள் - அந்த நூல்களின் சமயத்தமிழ், நமது செம்மொழி ஆய்வு மையத்தின் பார்வையில் "கொடுந்தமிழாக'க் காட்சிப் படுகிறது.
அந்தப் பெருமக்கள் போற்றிக் கொண்டாடிய சமய நூல்கள், பக்தி இலக்கியங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அறிவு சார்ந்தவை அல்ல எனச் செம்மொழித் தமிழாய்வு மையம் தள்ளிவைத்துவிட்டது.
பொற்கால இலக்கியம் என்றால் என்ன? என்பதை வரலாற்றில் சிறந்த ஆய்வறிஞர்கள் சில வரையறை செய்கின்றனர்.
ஒரு காலத்தில் தோன்றிய இலக்கியம் அந்தக் காலத்தைக் கண்ணாடி போலத் தெளிவாகக் காட்டவேண்டும்; அதை இயற்றியவர் பிறர் புகழும் பெருமையைப் பெற்றிருக்கவேண்டும்; (நல்லிசைக் கபிலன், புலனழுக்கற்ற அந்தணாளன், நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் - என்பது போன்ற பெருமை) காலம் கடந்தும் மக்கள் மனத்தில் பதியவேண்டும்; சிறந்த குறிக்கோளைக் கொண்டிருக்க வேண்டும்; செய்யுள் கட்டமைப்பில் சிறந்திருக்க வேண்டும்; பரிதிமாற்கலைஞர் சொல்லும் செம்மொழிக்கான திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பெற்றிருக்க வேண்டும்; படிப்பவர் உள்ளத்தை பற்றிக்கொள்ளும் முருகியல் இன்பம் கொண்டதாக இருக்க வேண்டும்; அரசியல் சிறப்பும் சமுதாயச் சிந்தனையும் ஒருங்கே சேர்ந்திருக்க வேண்டும் என்பனவாம் அவை.
இங்கே காட்டப்படுள்ள கருத்துகளில் பல செம்மொழித் தமிழாய்வு மையம் "பொற்கால நூல்கள்' எனக் குறிப்பிடும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்குப் பொருந்தி வரவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.
முதலில் கீழ்க்கணக்கு நூல்கள் கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தோன்றியனவா என்பதையும் காலம் பற்றியும் பார்ப்போம். ""மொழியோ, சமயமோ, வாழ்க்கைத் தத்துவமோ, இலக்கிய, இலக்கணமோ எதுவானாலும் கால உணர்வோடு அமைந்தால்தான் அது உண்மைக்குப் பொருந்துவதாய் அமையும்'' என்கிறார் இலக்கிய வரலாற்றறிஞர் மு.அருணாசலம்.
பிற்காலப் பாண்டியர் வரலாற்றை அறிந்துகொள்ளப் பெரிதும் உதவியாக இருப்பது, "வேள்விக்குடிச் செப்பேடுகள்'. இந்தச் செப்பேட்டின் வழி கி.பி. 4 முதல் கி.பி. 7 வரை பாண்டிய நாட்டையும், சோழ நாட்டையும் "களப்பிரர்' என்னும் பெயருடைய பிறமொழி பேசும் தேசத்தினர் கைப்பற்றி ஆண்டனர் என்பது தெளிவாகிறது. இவர்கள், ஜைன சமயத்தையும், பெüத்த சமயத்தையும் சார்ந்தவர்கள் என்பதும் "பாலி' மொழியை ஆதரித்தவர்கள் என்பதும் அதன்வழி அறியலாம். இவர்களை "வடுகக் கருநாடர்' எனப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது. "கலி' அரசர்கள் என்கிறது வேள்விக்குடி செப்பேடு.
இவர்கள் காலத்தைத் தமிழ்நாட்டு வரலாற்றை எழுதும் ஆசிரியர்கள் "இருண்ட காலம்' எனக் குறிப்பிடுகின்றனர். இவர்கள் ஆண்ட மதுரையில் "வச்சிரநந்தி' என்னும் ஜைன முனிவர் கி.பி. 470-இல் சமண சங்கம் ஒன்றை நிறுவினார் என்பதைத் "திகம்பர தரிசனம்' என்னும் நூல் வழி அறியலாம். இந்த ஜைன சங்கத்திற்குப் பிற்பட்ட காலங்களில்தான் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பல தோன்றின என்பது ஆய்வாளர்கள் முடிவாகும்.
சான்றுக்கு நாலடியார், ஏலாதி, ஆசாரக்கோவை என்ற மூன்று நூல்களைக் குறிப்பிடலாம்.
காவிரிக் கரையில் உள்ள செந்தலை என்னும் ஊரில் காணப்படும் கல்வெட்டில், "முத்தரையர்' என்னும் அரச மரபினர் குறிக்கப்பட்டுள்ளனர். இந்த முத்தரையர் மிகக் குறுகிய நிலப்பரப்பில் ஆட்சி செய்தனர் என்று நாலடியார் குறிப்பிடுகிறது. இவர்களது காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு. ஏலாதி மற்றும் ஆசாரக்கோவை ஆகிய இரண்டும் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பர்.
பொற்கால நூல்களுக்கென மேலே நாம் கண்டு வந்த இலக்கணங்கள் கொஞ்சம்கூட பொருந்திவராத, கி.பி. 7, 8, 9-ஆம் நூற்றாண்டுகளில் தோற்றம் பெற்ற நூல்களை 6-ஆம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட நூல்கள் என்றும், அதுவும் அவை பொற்கால நூல்கள் என்றும் செம்மொழித் தமிழாய்வு மையம் முடிவு சொல்லியிருப்பது விந்தையானதே. இந்த நூல்களைச் செம்மொழித் தமிழ் நூல்கள் என ஏற்றுக்கொண்டுள்ள ஆய்வு மையம், நமது நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் "கொழுத்த தமிழில்' அருளிச் செய்யப்பட்டவற்றைச் "செம்மொழித் தமிழ் நூல்கள்' அல்ல என முடிவு செய்துள்ளது விந்தையிலும் விந்தையல்லவா?
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் "முத்தமிழ்' என்ற சொல்லே இருக்காது. இதுபற்றி விரிக்கின் பெருகும். திருக்குறளை மற்ற நூல்களுடன் சேர்க்கக்கூடாது. அது காலத்தால் முந்தியது. அதன் கருத்துகளையே மற்ற நூல்கள் கடன் வாங்கின.
பதினென்கீழ்க்கணக்கு நூல்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதன்று. அவை நேரிய முறையில் ஆராயப்பட வேண்டியவை. ஆனால், அவை பொற்கால நூல்கள் என்னும் முடிவை முன்னிறுத்தி ஆய்வு செய்யப்படக்கூடாது. அவ்வாறு செய்வது ஆய்வாகாது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் இன்றுவரை ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள நமது பக்தி இலக்கியங்களில் "முத்தமிழ்' போற்றப்பட்டுள்ளது. அதற்கான சான்றுகள் பல உள்ளன.
கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் நூல்களே செம்மொழித் தமிழ் நூல்கள் என முடிவெடுத்து, சமய நூல்களையும் பக்தி இலக்கியங்களையும் தள்ளி வைத்தது நியாயமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.