

சைவப் புண்ணிய கண்கள்' என்று சேக்கிழார் பெருமானால் போற்றப்படுபவர் ஞானசம்பந்தரும், அப்பரடிகளும். திருமுறை ஆசிரியர்களுள் திருஞான சம்பந்தரே தமிழ் மொழிக்கும் இசைக்கும் ஏற்றம் தந்தவர். அதுமட்டுமா, தாம் அருளிய ஒவ்வொரு பதிகத்திலும், "தமிழ் தமிழ்' என்று சொல்வதில் தணியாத இன்பம் கண்டவர்.
அவரது காலத்தில் தீண்டாமை உச்சகட்டத்தில் இருந்தபோது, மிகச் சிறந்த வேதியர் குலத்தில் தான் அவதரித்திருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது, "திருநீலகண்ட யாழ்ப்பாணரை'த் தம்முடன் அனைத்து திருத்தலங்களுக்கும் அழைத்துச் சென்ற புரட்சியாளர். சமுதாயப் புரட்சியையும் சமயப் புரட்சியையும் ஒருங்கே செய்து, சைவநெறியை மேலோங்கச் செய்ததுடன் தமிழ்ச் சமுதாயத்துக்கும் நன்னெறி காட்டியவர்.
இவர் அருளிச்செய்த தேவாரத்தில் - திருக்கடைக்காப்புப் பாடலில் அரிய பல செய்திகள் அடங்கியுள்ளன. சம்பந்தரின் திருப்பதிகங்கள் பெரும்பாலும் 11 பாடல்களைக் கொண்டே அமைந்துள்ளன. பதிகத்தின் இறுதிப் பாடலை "திருக்கடைக்காப்பு' என்று சேக்கிழார் பெருமான் குறிக்கிறார், திருக்கடைக்காப்பின் ஒவ்வொரு பாடலிலும் தம் ஊர் பெயரைக் கூறிய சம்பந்தர், தாம் இயற்றிய பதிகத்தைப் பாடினால் துன்பம் நீங்கும், இன்பம் பெருகும் என்பதோடு, இதைப் பாராயணம் செய்பவர்கள் ஊழ்வினையிலிருந்து விடுபடுவதோடு, இப்பிறப்பிலேயே வீடுபேற்றை அடைவர் என்றும் அறுதியிட்டுச் சொல்வதோடு நின்றுவிடாமல், "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' என்ற நிறைவுப் பதிகம் பாடி, தமது திருமணத்துக்கு வந்தோர் அனைவரையும் "வீடுபேறு' அடையச் செய்த (சித்திரை-மூலம்) தமிழ் ஞானவள்ளல். இவரது ஒவ்வொரு பதிகமும் ஒவ்வொரு பதிவுசெய்யப்பட்ட பத்திரமாக (தங்ஞ்ண்ள்ற்ங்ழ்ங்க் ஈர்ஸ்ரீன்ம்ங்ய்ற்) கருதத்தக்கன.
ஞானசம்பந்தர் அருளிய பல பதிகங்கள், தமிழில் மூல இலக்கியங்களாகப் போற்றப்படுகின்றன. சித்திரக்கவி (எழுகூற்றிருக்கை), மொழிமாற்று, மாலைமாற்று, வழிமொழி, மடக்கு, இயமகம், ஏகபாதம், இளுக்குக் குறள், ஈரடி-ஈரடிமேல் வைப்பு, நாலடிமேல் வைப்பு, திருவிராகம், சக்ரமாற்று, கோமூர்திரிகம் முதலிய வகைகளைக் கொண்டவை. இவரது திருமுறை அமைப்புதான் பிற்காலத்தில் பல தமிழ்ச் சொல் வழக்குகளுக்கு வழிகாட்டியது எனலாம்.
"திருவெழு கூற்றிருக்கை' என்னும் செய்யுள் வகையை முதன் முதலில் அருளிச் செய்த பெருமைக்குரியவர் திருஞானசம்பந்தர்தான். இவரைத் தவிர, 11-ஆம் திருமுறையில் நக்கீரதேவ நாயனாரும், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் திருமங்கை ஆழ்வாரும், முருகப்பெருமான் மீது அருணகிரிநாதரும் மற்றும் பாம்பன் சுவாமிகளும் எழுகூற்றிருக்கை பாவகையைப் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
""ஏழறையாக்கி முறையானே குறுமக்கள் முன்னின்றும் புக்கும் போந்தும் விளையாடும் பெற்றியால் வழுவாமை ஒன்று முதலாக ஏழிறுதியாக ஏறியும் இறங்கியும் எண்ணலங்காரம் படப் பாடப்படுவது எழுகூற்றிருக்கை''
என்று இந்தப் பா வகைக்கு இலக்கணம் கூறப்படுகிறது. இணைக்குறள் ஆசிரியப்பாவாக இச்செய்யுள் நாற்பத்தேழு வரிகளைக் கொண்டு தேர் போன்று ஒரு சித்திரப் பாட்டாக இருந்தாலும், மரபு பற்றி "பதிகம்' என்றே வழங்கப்படுகிறது. இதற்குரிய பண் வியாழக்குறிஞ்சி என்பர். இந்த ஏழு கூறுகளும் தேர் ஒன்றின் மேற்பரப்பாகக் கருதத்தக்கன.
உயிர்கள் ஏழுவகைப் பிறவிகளில் உழல்வன. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரப்படி நிலைகளையும் கடந்தது ஏழாம் நிலையாகிய தகராகாசம் என்பது. அருளாகிய திரு, ஏழு கூறாகி, இவ்வேழு இடங்களிலும் தங்குவதால், தூய்மைபெறும் உயிர்கள் ஏழு பிறவிகளின் நீக்கம் அடைகின்றன. அதனால் இது திரு எழுகூற்றிருக்கை எனப் பெயர் பெற்றது.
ஞானசம்பந்தர் அருளிச் செய்த "ஓருரு ஆயினை' என்று தொடங்கும் எழுகூற்றிருக்கைப் பதிகம், முதல் திருமுறையின் 128வது பதிகமாகத் திகழ்கிறது. இது, ஒன்று, இரண்டு, ஒன்று (1,2,1), ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று (1,2,3,2,1) என்று இவ்வாறு ஒன்று முதல் ஏழு வரை படிப்படியாக ஒன்று ஒன்றாக ஏற்றியும் இறக்கியும் இவ்வாறு ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப்படும் ஒருவகைச் செய்யுள் வகைதான் எழுகூற்றிருக்கை.
இந்த எண்களைக் கூறுபடுத்தி அறைகளில் இடும்போது, முதல் கூற்றில் மூன்று அறைகளும், இரண்டாவது கூற்றில் ஐந்து அறைகளும், மூன்றாவது கூற்றில் ஏழு அறைகளும், நான்காவது கூற்றில் ஒன்பது அறைகளும், ஐந்தாவது கூற்றில் பதினோரு அறைகளும், ஆறாவது கூற்றில் பதின்மூன்று அறைகளும், ஏழாவது கூற்றில் அவ்வாறே பதின்மூன்று அறைகளும் கூறப்படும். படத்தில் உள்ளவாறு.
இந்த எண்களின் வரிசையில் வைத்து சம்பந்தப் பெருமான் இயற்றிய இக்கூற்றிருக்கை யாருக்காகத் தெரியுமா? தன் தந்தை சிவபாத இருதயருக்காக.
""மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்'' (அதி-7.70)
தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு "இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ' என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும் என்ற திருக்குறளுக்கு ஏற்ப, தன் தந்தைக்கு இப்பதிகத்தின் மூலம் கைம்மாறு செய்துவிட்டார் ஞானசம்பந்தர்.
சிவபாத இருதயர், சம்பந்தப்பெருமான் அருளிச் செய்த அனைத்துப் பதிகங்களையும் நாள்தோறும் பாராயணம் செய்து வந்தார். முதுமை காரணமாக அனைத்துப் பதிகங்களையும் ஒரே நாளில் ஓத இயலாததை நினைத்து, இதுகுறித்து சம்பந்தரிடம், வருத்திக் கூறினார்.
தம் தந்தைக்காக இந்தத் திருப்பதிகத்தை அருளிச் செய்த சம்பந்தர், ""இப்பதிகம் ஒன்றை மட்டும் ஓதினால் தமது அனைத்துப் பதிகங்களையும் ஓதியதற்குச் சமமாகும்'' என்றும் கூறினார். இவ்வுண்மையை சேக்கிழார் பெருமான்,
""எந்தைக்கு எழு கூற்றிருக்கை, மூல இலக்கியமாக
எல்லாப் பொருள்களும் முற்ற ஞாலத்து உயர்
காழியாரைப் பாடினார் ஞானசம்பந்தர்'' (277)
என்று அருளிச் செய்திருப்பதில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது. இப்பதிகத்தை நாள்தோறும் இடைவிடாமல் மன உறுதியுடன் (உறைப்புடன்) பாராயணம் செய்து வருபவர்களுக்கு மறுபிறப்பு ஏற்படுவதில்லை என்றும், இவ்வுலகில் பெற வேண்டிய அனைத்தையும் பெற்று சிவனுலகு எய்துவர் என்றும் இதன்பயன் கூறப்படுகிறது. இப்பதிகத்தை சிவபெருமானை முன்னிலைப்படுத்தியும், இறைவனின் எண்ணற்ற ஆற்றல்களைச் சிறப்பித்தும் பாடியுள்ளார் சம்பந்தர். சீர்காழி திருத்தலத்தின் பன்னிரு திருப்பெயர்களும் இப்பதிகத்தினுள் இடம் பெற்றிருப்பதுதான் இதன் தனிச்சிறப்பு.
எழுகூற்றிருக்கையும் அமைப்பும்:
""ஓருரு வாயினை மானா ங்காரத்து
ஈரியல்பாய் ஒரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து, அளித்து, அழிப்பமும் மூர்த்திகளாயினை
இருவரோடு ஒருவனாகி நின்றனை (1-5)
முதல் அறை: 1. ஓர் உரு ஆயினை: முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நிற்கும் சிவபெருமானே, உயிர்கள் உய்யும் பொருட்டு ஐந்தொழில் ஆற்றுவதற்காக உன் இச்சா சக்தியால் நீயே திருமேனி கொண்டருள்வாய்.
2. மான் ஆங்காரத்து ஈர் இயல்பாய்: ஐந்தொழில் ஆற்றுவதற்காக, தன் அருளாற்றலைக் கொண்டு சிவம், சக்தி ஆகிய இரு வடிவங்களை உடையவனாய்; (மான்-சக்தி; ஆங்காரத்து-ஐந்தொழில் ஆற்ற).
1. ஒரு: அவ்வாறு சிவமும் சக்தியுமாகி நின்றாலும், நீ ஒருவனே ஆகியுள்ளாய்.
இரண்டாம் அறை: 1. விண் முதல் பூதலம் ஒன்றிய: ஆகாயம் முதல் பிருத்வி (மண்) வரையுள்ள பஞ்ச பூதங்களையும் ஒருநிலைப்படுத்தி;
2. இருசுடர் உம்பர்கள் பிறவும் படைத்து, அளித்து, அழிப்ப: சூரியன், சந்திரன், ஆகிய இருவரையும் பிற தேவர்களையும் மற்றுமுள்ள ஆன்மாக்களையும் உரு உடையவர்களாய்ப் படைத்து, காத்து, ஒடுக்கும் பொருட்டு;
3. மும்மூர்த்திகள் ஆயினை: அயன், மால், உருத்திரன் என்னும் மூவராகி நீயே நின்றாய்;
2. இருவரோடு: அயனையும், மாலையும் இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் அடக்கிக் கொண்டு;
1. ஒருவனாகி நின்றனை: மும்மூர்த்தியாகி நீ ஒருவனே நின்றாய்;
இவ்வாறாக எழுகூற்றிருக்கையில் சொற்கள் அமைந்திருக்கும். இவரது எழுகூற்றிருக்கையை முழுமையாகப் படித்தால் அதிலுள்ள சொல்லும், பொருளும் கூறப்படும் தத்துவங்களும், சைவ சித்தாந்த நுட்பமும், உண்மையும் எளிமையாக விளங்கும்.
இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி!
சிலப்பதிகாரம் பேசப்படும் அளவுக்கு மணிமேகலையும், சீவகசிந்தாமணியும் பேசப்படுவதில்லையே, ஏன்?
புதூ.சு. முருகையன், திருப்பத்தூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.