ஓருவர் மற்றொருவரிடத்து, மக்களையோ அல்லது அஃறிணைப் பொருளையோ தூதாக அனுப்புவது "தூது' எனப்படும். தூதாகச் செல்வதற்கு உரியவர்களை "வாயில்கள்' என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். சங்க இலக்கியங்களில் அகப்பொருள் நிலையிலும் புறப்பொருள் நிலையிலும் தூதுச் செய்திகள் அமைவதைக் காணலாம்.
இராமனின் வேண்டுகோளின்படி சீதையைக் கண்டுவரச் செல்கிறான் அனுமன். இலங்கையில், சீதையைத் தேடும் பொருட்டு ஒற்றனாகச் சென்றாலும் (இரவு நேரத்தில், யாரும் அறியாதபடி மறைந்து சென்று சீதையைக் கண்டது), சீதையைக் கண்டு அவளிடம் ராமதூதன் என்றே கூறுகிறான். மேலும், ராவணனைச் சந்தித்து, தன்னை "ராமதூதன்' என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறான். இதில் எந்தத் தவறும் இல்லை.
ஏனென்றால், சீதையைத் தேடும் பொருட்டு ஒற்றனாகச் சென்றாலும், அனுமன் தூதுவனுக்கே உள்ள பண்போடும் நெறிமுறையோடும் ராவணனிடம், ""பிறர் மனைக் கொள்ளுதல் அநீதி, வீர சைவனாகவும் சிவபக்தனாகவும் விளங்கக்கூடிய நீ, உன் சமயத்துக்கும், உனக்கும், உனது குலத்துக்கும் அழியாத பெரும் பழி, பாவத்தைத் தேடிக்கொள்ளாதே'' என்றும், ராமனையும், அவனது வீரத்தையும் பற்றி எடுத்துக்கூறி, சீதையை விடுவிக்குமாறும் கூறுகிறான். இவ்வாறு கூறுவதிலிருந்தே அனுமன் தூது சொல்லும் நெறிமுறையில் இருந்து சற்றும் பிறழவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. இராமனிடம் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்ட அனுமன், தன்னை "ராமதூதன்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டது சரியே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.