மன்றம் வேறு; மண்டபம் வேறு!

மன்றம் - மண்டபம் ஆகிய இரண்டும் பல பொருள்தரும் இருவேறு சொற்களாகவே நூலாசிரியர்களாôலும் உரையாசிரியர்களாலும் கருதப்பட்டன. மன்று என்பது, அம் சாரியை பெற்று "மன்றம்' என வழங்கப்படுகிறது. சொற்களில் சிலவற்றுக்க
Updated on
2 min read

மன்றம் - மண்டபம் ஆகிய இரண்டும் பல பொருள்தரும் இருவேறு சொற்களாகவே நூலாசிரியர்களாôலும் உரையாசிரியர்களாலும் கருதப்பட்டன. மன்று என்பது, அம் சாரியை பெற்று "மன்றம்' என வழங்கப்படுகிறது. சொற்களில் சிலவற்றுக்குத் தலைமைப் பொருள், துணைப்பொருள் என இருவகைப் பொருள் உண்டு. மன்றம் என்பதற்கு, அவை (சபை) என்பதே தலைமைப் பொருள். மன்றம் என்றாலும் மன்றகம் என்றாலும் ஒன்றுதான்.

""மன்றகத்தே நம்பி மாடம் எடுத்தது'' (திருமந்திரம்.148) என்பார் திருமூலர். அவையோர் கூடும் இடத்தையே மன்றகம் என்றார். சிலப்பதிகாரத்தில், "கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில்' (40) என வருமிடத்தில், மன்றமாகிய பொது இடம் எனும் பொருள் தரக்காணலாம்.

திருமுருகாற்றுப்படையில், பழமுதிர்சோலை பற்றிப் பாடும்போது, ""மன்றமும் பொதியிலும்''(226) என்பார் நக்கீரர். இதற்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர், மன்றமும் என்பதற்கு, "ஊர்க்கு நடுவாய் எல்லாரும் இருக்கும் மரத்தடி' என்றும், பொதியிலும் என்பதற்கு, அம்பலத்திலும் என்றும் எழுதியுள்ளார். இதனால், மன்றம் வேறு; அம்பலம் வேறு என்று கருதப்பட்டதையும் அறிய முடிகிறது.

மணிமேகலையில், ""மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும், தேர்ந்தனன் திரிவோன்'' என்று காஞ்சனன், காயசண்டிகையைத் தேடியது பற்றிச் சாத்தனார் கூறுவார். தஞ்சைவாணன் கோவையில், மன்றம் வேறு; பொதியில் வேறு என்பது விளங்க, ""மன்றும் பொதியிலும் மாமயில் சேர் தஞ்சைவாணன் வெற்பில்'' (34) என்பார் பொய்யாமொழிப்புலவர்.

நீதி மன்றத்தை "அறங்கூறு அவையம்' என வழங்கிய வழக்கம் உண்டு என்பதைச் சங்க நூல்களில் காணலாம். மதுரைக் காஞ்சி, ""சிறந்த கொள்கை அறங்கூறு அவையம்'' (492) என்றது. உறையூர் நீதி மன்றத்தின் சிறப்பைக் கூறும் ஆலங்குடி வங்கனார், ""மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறங்கெட அறியாதாங்கு'' என்பார். அகநானூறு, ""அறங்கெழு நல்லவை உறந்தை'' என்று போற்றுகிறது. பெருங்கதை ஆசிரியர், ""அறம் நிலை பெற்ற அருள்கொள் அவையத்து'' (பெரு 1:34-25) என்பார். எனவே, இப்போது வழங்கும் நீதிமன்றம் முன்பு அறங்கூறு அவையம் என வழங்கப்பட்டதை அறிகிறோம்.

திருவிளையாடற்புராணம் - மாமனாக வந்து வழக்குரைத்த படலத்தில் (35)

""அனையவர் போகநின்ற அறன்நவில் மன்றத் துள்ளோர்

தனபதி வணிகர் தந்த தனமெலாம் தந்த மைந்தற்

கெனமனை யெழுதி வாங்கி யீந்தனர்...''

என்று பரஞ்சோதி முனிவர் மிகத் தெளிவாக, பண்டைய புலவர்களால் "அறங்கூறு அவையம்' எனக் குறிப்பிட்ட இடத்தை "அறன் நவில் மன்றம்' என்றார். இக்காலத்தில் இத்தொடர் சிறு மாற்றத்துடன் நீதிமன்றம், வழக்காடு மன்றம் என வழங்கப்படுகிறது. மன்றத்தை "மண்டபம்' என எவரும் குறிப்பிடவில்லை.

மண்டபங்கள் பல வகைப்பட்டிருந்தன. கம்பர், பாலகாண்டம் - நகரப் படலத்தில் (பா.61) நான்கு வகை மண்டபங்களைத் தெரிவித்துள்ளார். பட்டி மண்டபத்தைக் குறிக்கும்போது, "பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம்' என்று அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கிறார். அதனால்தான், சாத்தனார், மணிமேகலையில் (1:61) பட்டி மண்டபம் பாங்கரிந்து ஏறுமின்' என்றார். பட்டி - இடம் எனப் பொருள் கூறுவர் நிகண்டு நூலார்.

நச்சினார்க்கினியர் மதுரைக் காஞ்சியில்,

""பெருஞ்செய் ஆடவர்த் தம்மின் பிறரும்

யாவரும் வருக ஏனோரும் தம்மென

வரையா வாயில்.......''

எனவரும் அடிகளுக்குப் பொருள் கூறுமிடத்து, "பெரிய செய்கைகளையும் உடைய மண்டபங்களை ஆள்கின்றவர்களைக் கொணர்மின்' என்றெழுதி, "ஏனோரும் தம்மென வரையா' என்பதற்கு, மண்டபத்துள்ளாரையும் அறங்கூறு அவையத்தாரையும் கொணர்மின் என வரைந்து கூறி' என்றெழுதினார். இங்கே மண்டபத்தார், அறங்கூறு அவையத்தார் எனத் தனியே பிரித்துக் கூறுவதாலும் மண்படம் வேறு; மன்றம் (அறங்கூறு அவையம்) வேறு என்பது தெளிவாகிறது.

பத்துப்பாட்டைப் பதிப்பித்த உ.வே.சா. அடிக்குறிப்பில், "இங்கே மண்டபத்தார் என்றது, பட்டி மன்றத்தாரைப் போலும்; பட்டி மண்டபம் - கல்விக்கழகம், மதுரையில் இப்போது புதுமண்டபம் என வழங்கும் இடத்தில் முன்பு பழைய மண்டபம் ஒன்று இருந்திருத்தல் கூடுமென்றும், அஃது இப்பட்டி மண்டபம் போலும் என்றும் சிலர் கருதுகிறார்கள்' என எழுதுவார்.

சிலப்பதிகாரம் இந்திரவிழாவூர் எடுத்த காதையில் இளங்கோவடிகள்,

""மகதநன் னாட்டு வாள்வாய் வேந்தன்

பகைபுறத்துக் கொடுத்த பட்டி மண்டபம்''

என்பார். இங்கே வரும் பட்டி மன்றத்துக்குத் திருவோலக்க மண்டபம் எனப் பொருள் கூறினார் அரும்பத உரையாசிரியர். ஆனால், அடியார்க்கு நல்லார் தம் உரையில், "வாட்போர் வாய்ப்புடையனாகிய மகத வேந்தன் பகையாற் பொருது தாங்க மாட்டாது, அப்பகையிடத்துத் தரப்பட்ட பட்டி மண்டபம். பட்டி மண்டபம் - வித்யா மண்டபம்' என்றெழுதுகிறார். ஆகையால், மன்றம் வேறு; மண்டபம் வேறு. பண்டைய நூலாசிரியர், உரையாசிரியர் எவரும் பட்டி மன்றம் என்று குறிப்பிடவில்லை. பட்டி மண்டபம் என்றே எழுதினர்.எனவே, பட்டி மண்டபம் என்பதே சரி. வழக்காடும் இடம்தான் நீதிமன்றம் அல்லது வழக்காடு மன்றம் எனப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com