கலாரசிகன்

கோவையில் நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கம் ஒன்றுக்குக் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்று செம்மொழி மாநாட்டுத் தலைவர் அறிவித்தபிறகும் பலருக்கும் சந
கலாரசிகன்

கோவையில் நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கம் ஒன்றுக்குக் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்று செம்மொழி மாநாட்டுத் தலைவர் அறிவித்தபிறகும் பலருக்கும் சந்தேகம் தீரவில்லை. கம்பரின் பெயரால் ஆய்வரங்கம் ஒன்று அமைத்துவிட்டால் ஆயிற்றா? சமய இலக்கியம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகிறதே, இது என்ன நியாயம்? இப்படியெல்லாம் பல கேள்விகள், கடிதங்கள் மூலம் எழுப்பப்படுகின்றன.

காரைக்குடியிலிருந்து பேசிய கம்பன் கழகச் செயலாளர் பழ.பழனியப்பன், இளம்பிறை மணிமாறன் தன்னிடம் சமய இலக்கியங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார் என்று கூறினார். தொடர்ந்து "தினமணி' உதவி ஆசிரியர் கி.மஞ்சுளா, சேரமான் பெருமாள் நாயனார் எழுதிய "திருக்கயிலாய ஞான உலா' பற்றிய தமது கட்டுரை "சமயமும் தமிழும்' (காதல் மகளிர் எழுவர்) பகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கான கடிதத்தைக் காட்டியவுடன் செம்மொழி மாநாட்டில் கம்பன் மட்டுமல்ல, சமயத்தமிழும் இடம்பெறுகிறது என்பது உறுதியானது.

ஆய்வுக் கட்டுரைகளைத் தேர்வுசெய்த குழுவிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் சொன்ன தகவல் தேனாய் இனித்தது. சமயமும் தமிழும் மட்டுமல்ல, தமிழும் மெய்யியலும் (தத்துவம்), பெண்ணியம், மாறிய பாலியல், நாட்டுப்புறப்பாடல், பிற நாடுகளில் தமிழ்ப் படைப்பிலக்கியம், ஊடகத்தமிழ் போன்ற தலைப்புகளில் பல ஆய்வுக்கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தெரிந்தால், மகிழ்ச்சி அடையாமல் இருப்பது எங்ஙனம்?

ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆச்சார்ய ஹிருதயம், உளவியல் நோக்கில் திருவாசகம், வள்ளலாரின் சமயம் கடந்த பொதுநிலை, சைவ சமய உருவாக்கத்தில் செவ்வியல் இலக்கியப் பங்கு, மூவர் திருமுறைகள்-சொற்பொருளும், சொல்லப்பட்ட பொருளும், தமிழ்மொழி வளர்ச்சிக்கு இஸ்லாமியப் பங்களிப்பு என்று சமயம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளின் நீண்டதொரு பட்டியலையே என்முன் நீட்டினார்கள்.

இதையெல்லாம் தெரிந்துகொண்ட பிறகும் எப்படி சும்மா இருப்பது?

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "ஏன் இதையெல்லாம் முன்பே சொல்லவில்லை? செம்மொழி மாநாடு என்று கூறி தேவையற்ற விவாதத்துக்கு வழிவகுப்பானேன்' என்று கேட்டவுடன், கிடைத்த பதில்-

"நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளாமல் போனால் அது யார் தவறு?' இப்படியெல்லாம் கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்துவிடக்கூடாது என்று முன்கூட்டியே யோசித்து, முதல்வர் தேர்ந்தெடுத்த பெயர்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்பது. நாங்கள் செம்மொழித் தமிழ் மாநாடு என்று சொன்னபோது அதைத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று அவர் மாற்றியதற்குக் காரணமே மாநாடு சங்க இலக்கியத்துடன் நின்றுவிடக்கூடாது என்பதுதான். அதனால் சமய இலக்கியங்கள் மட்டுமல்ல, பாரதி, பாரதிதாசன் வரை எதுவுமே ஆய்விலிருந்து விடுபடவில்லை' என்று விளக்கம் தந்தார்.

"அதெல்லாம் சரி. பிறகு ஏன் கொள்கை விளக்கப் பாடலில் கம்பன் விடுபட்டான்?' இது எனது கேள்வி.

"ஐம்பெரும் காப்பியங்களில் கம்பன் விடுபட்டுப் போனது ஏன் என்று கி.பி.13-14-ஆம் நூற்றாண்டில் நன்னூலுக்கு உரை எழுதிய மயிலை நாதரைத்தான் கேட்கவேண்டும். அவர் குறிப்பிட்ட ஐம்பெரும் காப்பியங்களில் கம்பன் இடம்பெறவில்லை. அதனால் பாடலில் இடம்பெறவில்லை, அவ்வளவே'.

செம்மொழி மாநாட்டின் ஆய்வுக் கட்டுரைகள் பற்றிய சர்ச்சைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மாநாட்டின் வெற்றிக்கு வழிகோலுவதுதான் தமிழ் உணர்வாளர்களின் கடமையாக இருக்கும் என்பது எனது கருத்து. இனிமேல் இதுபற்றிய விவாதம் தொடர்ந்தால் அது விதண்டாவாதமாகத்தான் இருக்கும்.

*******

டந்த வாரம் அறிஞர் அண்ணா பற்றிய இரண்டு நூல்களைப் படிக்க நேர்ந்தது. முதலாவது, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவர் முனைவர் க.நெடுஞ்செழியன் தொகுத்துப் பதிப்பித்திருக்கும் "பன்முக நோக்கில் பேரறிஞர் அண்ணா' என்கிற புத்தகம். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறை, பாரதிதாசன் உயராய்வு மையம், பெரியார் உயராய்வு மையம் ஆகிய மூன்றும் இணைந்து நடத்திய அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் பதிவுசெய்யப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் முனைவர் நெடுஞ்செழியன்.

அந்தக் கட்டுரைத் தொகுப்பில் சிந்தனையைக் கவர்ந்த கட்டுரை முனைவர் நெடுஞ்செழியனுடையதுதான். "அறிஞர் அண்ணாவும் குமாரன் ஆசானும்' என்கிற தலைப்பில் இரண்டு பேரையும் ஒப்பிட்டு எழுதியிருப்பதைப் படித்து வியந்தேன். மலையாளத்தின் மகாகவி என்று கருதப்படுபவர்கள் வள்ளத்தோள், குமாரன் ஆசான் மற்றும் உள்ளூர் பரமேஸ்வர ஐயர் ஆகிய மூவரும். இந்த மூவரில் குமாரன் ஆசானின் கவிதைகளில்தான் சமூக, சீர்திருத்தச் சிந்தனைகள் அதிகம்.

மகாகவி குமாரன் ஆசானின் படைப்புகளிலிருந்து மேலும் பல மேற்கோள்கள் காட்டப்பட்டிருக்கலாமே என்று தோன்றியது. இந்தக் குறைபாட்டையும் மீறி கட்டுரை சிந்தனைத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்குக் காரணம் அறிஞர் அண்ணாவின் படைப்புகளைப் பற்றிய முனைவர் நெடுஞ்செழியனின் பார்வைதான்!

அறிஞர் அண்ணா பற்றிய இன்னொரு புத்தகம், ஆர். கண்ணன் என்பவரால் எழுதப்பட்டு பென்குயின் பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டிருக்கும் ஆங்கிலப் படைப்பு. வேடிக்கை என்னவென்றால், அறிஞர் அண்ணா காலமாகும்போது கண்ணனின் வயது ஒன்பது. தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றும் ஆர்.கண்ணனின், அண்ணா பற்றிய பதிவு என்பது, அடுத்த தலைமுறையினரிடம் அறிஞர் அண்ணா ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் வெளிப்பாடு என்றுதானே கொள்ள வேண்டும்.

அறிஞர் அண்ணாவிடம் பழகியவர்கள், அவரது காலத்தில் வாழ்ந்தவர்கள், அவரது சிந்தனைகள் என்று எதையுமே விட்டுவைக்காமல் அறிஞர் அண்ணாவைப் பற்றிய அற்புதமானதொரு ஆவணப்பதிவை ஆங்கிலத்தில் செய்திருக்கும் ஆர்.கண்ணன் பாராட்டுக்குரியவர். "தி இந்து' பத்திரிகை ஆசிரியர் என்.ராம், தனது விமர்சனத்தில் கூறியிருப்பதுபோல சரளமான நடையில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் திராவிட இயக்க வரலாற்றையும் அதன் முக்கியமான காலகட்டத்தையும் பதிவு செய்திருக்கிறார் ஆர்.கண்ணன்.

படித்தேன், ரசித்தேன், மீண்டும் ஒரு முறை படிக்கக் கண்படும் இடத்தில் வைத்திருக்கிறேன்.

*******

நெ ல்லையில் சமூக சிந்தனையாளர் தி.க.சி.யின் பிறந்தநாள் விழாவின்போது, தனது கவிதைத் தொகுப்பை எனக்குப் பரிசளித்தார் ராஜபாளையம் இரா.ஆனந்தி. அவரது பேச்சிலிருந்து பள்ளிக் கூடத்தில் தாளாளராக இருப்பார் என்று தோன்றியது. அவரது எழுத்திலிருந்து மென்மையான உணர்வுகளின் வாசனை மாறாத கவிஞராக இருக்கிறார் என்பதும் தெரிந்தது.

"தானாய் கழிந்தது பொழுது' என்கிற இரா.ஆனந்தியின் கவிதைகளில் ஒரு சிறிய குறை. அத்தனையும் தன்னுணர்வுக் கவிதைகள் என்பது உண்மைதான். ஆனால், அடிப்படைக் காதல் உணர்வைத் தாண்டி ஏன் தனது எழுத்தாளுமையை விரிவாக்க மறுக்கிறார் என்று தெரியவில்லை. சமுதாயச் சாடல்களோ, தார்மிகக் கோபங்களோ அவருக்கு ஏன் வரவில்லை. ஒருவேளை, அடுத்த தொகுப்பு தயாராகிறதோ என்னவோ?

நீ

ஒரு புரியாத புதிர்.

புரிந்தவர்கள்

சொன்னார்கள்.

சொல்லிவிட்டுப்

போகட்டும்.

புதிர்

எனக்குப் பிடிக்கும்!

புரியாமலேயே...!

***

எனக்குப் பிடிக்கிற

அத்தனையும்

உனக்குத்

தந்துவிடவேண்டும்.

எனக்கு

என்னைப் பிடிக்கும்!

 ***

உன்னிடம்

கற்றுக்கொள்ள

வேண்டியது

நிறைய

இருக்கிறது

உன்

மெüனம்

தவிர!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com