படைப்பிலக்கிய ஆழ்கடல் - கு.அழகிரிசாமி

திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் இடையில் இடைசெவல் என்னும் சிற்றூரில், 1923-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி, குருசாமி-தாயம்மாள் தம்பதிக்குத் தலைமகனாகப் பிறந்தவர், கரிசல்காட்ட
படைப்பிலக்கிய ஆழ்கடல் - கு.அழகிரிசாமி

திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் இடையில் இடைசெவல் என்னும் சிற்றூரில், 1923-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி, குருசாமி-தாயம்மாள் தம்பதிக்குத் தலைமகனாகப் பிறந்தவர், கரிசல்காட்டு எழுத்தாளர் கு.அழகிரிசாமி.

கரிசல் மண்ணுக்குத் தனிப் பெருமையை ஏற்படுத்தியவர்கள், இலக்கியம் படைத்துத் தமிழுக்கு அழியாப் பெருமையைச் சேர்த்துத் தந்த கவிஞர்களும் எழுத்தாளர்களும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுமாவர்.

கரிசல் மண்ணில் பிறந்து இலக்கிய வேகத்துடன் சென்னை, மலேசியா பகுதிகளில் வாழ்க்கையின் பெரும் பகுதிகளைக் கழித்து, இலக்கியப் படைப்புக்கு உரித்தான பாராட்டுதல்களையும் பொற்கிழியையும் பெறாதவர் கு.அழகிரிசாமி. சாகித்ய அகாதெமி பரிசையும் அவர் மறைந்த பிறகுதான் அவர் துணைவியார் பெற்றுக்கொள்ள நேர்ந்தது.

மூத்த பழமைக்கும் வளர்ந்துவரும் புதுமைக்கும் பாலமாக அமைந்த அடக்கமான - ஆனால், ஆழமான சமூகக் கண்ணோட்டம் கொண்டவர் எழுத்தாளர் கு.அழகிரிசாமி. வாழ்ந்த 47 ஆண்டுகளில் காதலித்து மணந்த மனைவியுடனும், நான்கு குழந்தைகளுடனும் 15 ஆண்டுகளே வாழ்ந்த - வாழ்க்கையின் வளப்பத்தை முழுமையாக அவர்  அனுபவிக்கவில்லை.

அவருடைய சமகாலத்துப் புகழ்பெற்ற எழுத்தாளரான புதுமைப்பித்தனின் எழுத்தால் ஈர்க்கப்பட்டார். தொ.மு.சி.யுடன்  இணைபிரியா நண்பராக இருந்தார் கு.அழகிரிசாமி.

கதையொன்றை யார் வேண்டுமானாலும் எழுதியிருக்கலாம். ஆனால், அந்தக் கதையை இருபது, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு படித்தாலும் அதே புதுமை, உயிர்த்துடிப்பு, வியப்பு குன்றாமல் அன்றலர்ந்த மலரைப்போல் இருந்தால், அது இலக்கிய வரிசையில் சேர்ந்துவிடும்.

வசதியான குடும்பத்தில் அழகிரிசாமி பிறக்கவில்லை. அதனாலேயே அவரை நான்காவது வரைகூட படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை. ஆனால், விடாமுயற்சியுடன் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து முடித்தார். அந்தச் சிற்றூரில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர் என்ற "பெருமை' அவருக்கு உண்டு. பள்ளிப் படிப்பைவிட அவர் அனுபவத்தில் பெற்ற அறிவே அதிகம்.

பரம்பரையாக வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் அழகிரிசாமியின் குடும்பத்தார். ஆனால், வெளியே பேசும்போது தமிழில்தான் பேசுவார் அழகிரிசாமி.

கம்பர், தாகூர், பாரதி என்று நிறைய நூல்களை சுயமாகப் படித்தார். புதுமைப்பித்தன் கதைகள் அவரை மிகவும் கவர்ந்தன. அதனால் அவரது இலக்கிய ஆர்வம் கொழுந்துவிட்டது. சிறுகதைகள் எழுதினார். முதல் சிறுகதை அனுப்பிய வேகத்தில் திரும்பி வந்தாலும், அடுத்த சிறுகதை 1943-ஆம் ஆண்டு "ஆனந்த போதினி' மாத இதழில் பிரசுரமானது. கதையின் பெயர் "உறக்கம் கொள்ளுமா?'

ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் கவர்ந்தது. கார்க்கியின் நூலை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் கு.அ.தான். தமிழ் இலக்கியங்களுடன் மேல்நாட்டு இலக்கியங்களையும் படித்தார். பழைய பாடல்களுக்கு உரை எழுதும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டார். "எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்' என்பதை லட்சியமாகக் கொண்டார்.

அரசுப் பணியில் சேரத் தேர்வு பெற்றதால், சார்பதிவாளர் அலுவலகத்தில் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்தில் எழுத்தர் உத்தியோகம் கிடைத்தது. ஆனால், நாள்தோறும் பத்திரங்களைப் பதிவது அவருக்குப் பிடிக்கவில்லை. அந்த எழுத்தர் உத்தியோகத்தில் மனநிறைவு ஏற்படவில்லை. அதனால் சென்னைக்கு வந்து, முதல் கதையை வெளியிட்ட "ஆனந்த போதினி' பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்.

 "ஆனந்த போதினி', "பிரசண்ட விகடன்' ஆசிரியராக இருந்த மூத்த எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் அந்த நாள்களில் எழுத்தாளர்களுக்கு ஒரு வேடந்தாங்கல்.

கு.அழகிரிசாமியின் எழுத்தாற்றலைப் புரிந்து கொண்ட நாரண துரைக்கண்ணன், கு.அழகிரிசாமிக்கு உதவி ஆசிரியர் பணியைத் தந்தார். நாரண துரைக்கண்ணன், கு.அழகிரிசாமியின் திறமையைக் கண்டு ஊக்கமளித்து பல வகைகளில் ஆதரவு தந்தார்.

"பிரசண்ட விகடனி'ல் வெளிவந்த அவரது கதைகளை சமகால எழுத்தாளர்களான வல்லிக்கண்ணனும், புதுமைப்பித்தனும், தொ.மு.சி.ரகுநாதனும் பாராட்டினார்கள். பிரசண்ட விகடன் பத்திரிகை அலுவலகத்தை விட்டுவிட்டு "தமிழ்மணி' என்ற அரசியல் வார இதழில் சேர்ந்தார்.

"தமிழ்மணி' வார இதழில் அவர் சில காலம்தான் பணியாற்றினார். அதன் பிறகு வை.கோவிந்தன் வெளியிட்ட "சக்தி' மாத இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். ஆசிரியர் தி.ஜ.ரங்கநாதன். கு.அழகிரிசாமியின் முற்போக்குச் சிந்தனையையும், ஆற்றலையும் கண்டுகொண்ட வை.கோவிந்தன், அழகிரிசாமிக்கு சக்தி இதழிலும் பதிப்பகத்திலும்  இடமளித்து, எழுதுவதற்கு வாய்ப்பளித்தார்.

கு.அ.வின் முயற்சியால் வெளியான கம்பராமாயணம், காவடிச் சிந்து ஆகிய பதிப்புகள் அவருடைய ஆராய்ச்சித் திறனையும் மொழியாக்க ஆற்றலையும் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தின.  

""கதையில் உள்ளத்தைக் கவரும் நிகழ்ச்சிகளும் வர வேண்டும்; அதே சமயத்தில் இப்படி நடந்திருக்க முடியுமா?' என்று கேள்வி எழுப்பக்கூடிய நிகழ்ச்சிகளை விலக்க வேண்டும். பிரத்யேகமாகப் பார்த்த உண்மையான நிகழ்ச்சிகளாக இருக்கலாம்; ஆனால், படிக்குபோது இது நம்பக் கூடியதா என்று தோன்றுமானால் அது பயனற்றதாகி விடுகிறது. கதையில் கதையும் இருக்க வேண்டும்; அதே சமயத்தில் அது கதையாகவும் இருக்கக் கூடாது. இம்மாதிரி கதைகள் புனைவது எவ்வளவு கடினமான கலை என்பதை அதை எழுதும் துறையில் இறங்கி, வெற்றியோ, தோல்வியோ அடைந்தவர்களால்தான் உணர முடியும். அழகிரிசாமி அத்தகைய கடினமான கலையில் அபூர்வமாக வெற்றியடைந்திருக்கிறார்.

அழுத்தமான ஒரு மூலக் கருத்து இல்லாமல் கதையை எழுதக்கூடாது என்பது கு.அ.வின் இலக்கியக் கோட்பாடு. கு.அ.வின் "ராஜா வந்திருக்கிறார்' என்ற கதை இந்திய மொழிகளிலும், ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த கதை.

"சக்தி' இதழில் பணியாற்றிய பிறகு ஐந்தாண்டுகள் மலேசியா (1952-1957) சென்றார். அந்தக் காலம் அவர் வாழ்க்கையின் பெரும் திருப்புமுனை எனலாம். 1955-ஆம் ஆண்டு கு.அழகிரிசாமிக்கும், சீதாலட்சுமிக்கும் மலேசியாவில் திருமணம் நடைபெற்றது. கு.அ.இளம் வயதிலிருந்தே இசைஞானம் மிக்கவர். இசைஞானம் உள்ள ஒரு பெண்ணை மனைவியாக அடைய வேண்டும் என்ற அவருடைய லட்சியக் கனவின்படி சீதாலட்சுமி அமைந்தார். மலேசிய வானொலியில் முக்கூடல் பள்ளு இசை நாடகத்துக்குப் பாடியவர்களில் ஒருவர் சீதாலட்சுமி. கு.அ.வுக்கும் சீதாலட்சுமிக்கும் நடைபெற்ற திருமணம் காதல் திருமணம் மட்டுமல்ல, சாதி வித்தியாசங்களைக் கடந்த திருமணம்.

""மலேசிய நாட்டில் தன்னுடைய இலக்கிய வாழ்க்கைக்கு உற்ற நண்பர்கள் இல்லை என்பதாலும், தமிழ் நாட்டு அன்பர்களை விட்டுப் பிரிந்திருக்க மனமில்லாததாலும் நான் மலேசியா நாட்டை விட்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பினேன்'' என்று கு.அ. கூறும் காரணங்கள் ஏற்புடையவைதாம். மேலும், "தமிழ்நேசன்' நாளிதழ் அலுவலகத்திலும் வெளியே அரசியல்வாதிகள் சிலரின் ஒத்துழையாமையும் அவருக்கு ஆசிரியர் பணியில் சோர்வை ஏற்படுத்தின.

1957-ஆம் ஆண்டு சென்னை திரும்பிய அவர், 1960-ஆம் ஆண்டு வரை காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். பிறகு "நவசக்தி' நாளிதழில் 1965 வரை பணியில் இருந்தார். "நவசக்தி' இதழில் இருந்த காலத்தில்தான் அவர் "கவிச்சக்ரவர்த்தி' என்ற வரலாற்று நாடகத்தை எழுதினார். அந்த நாடகம் அவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.

"நவசக்தி' நாளிதழ் பணியிலிருந்து விலகி, ஐந்தாண்டுகள் சுதந்திர எழுத்தாளராக இருந்தார். கடிதம் எழுதுவதை அவர் கடமையாகக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் எழுதிய கடிதங்களை கி.ராஜநாராயணன் தொகுத்து, "கு.அழகிரிசாமி கடிதங்கள்' என்ற நூல் வெளிவந்துள்ளது. கு.அழகிரிசாமியின் சிறுகதைகள் ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த அழகிரிசாமி, சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார்.

இறுதியாக "சோவியத் நாடு' ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். ஆனால், உடல்நிலை காரணமாக அவரால் முழுமையாக அந்தப் பணியில் தொடர முடியவில்லை.

1970-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் வாழ்க்கை முடிந்தது. இது தமிழ்ப்படைப்புலகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com