Enable Javscript for better performance
சரித்திர நாவலில் வரலாறு படைத்த சாண்டில்யன்- Dinamani

சுடச்சுட

  

  சரித்திர நாவலில் வரலாறு படைத்த சாண்டில்யன்

  By கலைமாமணி விக்கிரமன்  |   Published on : 20th September 2012 05:07 PM  |   அ+அ அ-   |    |  

  30tm2

  சாண்டில்யன் - வரலாற்றுப் புதினங்களை விரும்பிப் படிக்கும் வாசகர்களால் இந்தப் பெயரை மறக்கவே முடியாது.

   சாண்டில்யனின் நூற்றாண்டுவிழா, 6.11.2010 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

   தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூர் அவரது சொந்த ஊர். 1910-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி, டி.ஆர்.சடகோபன் ஐயங்காருக்கும், பூங்கோதைவல்லி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பிறந்த ஊர் திருக்கோவிலூர். அவரது இயற்பெயர் எஸ்.பாஷ்யம்.

   கல்லூரிப் படிப்பில் 'இன்டர்மீடியட்' படித்தார். அப்போதே அவருக்குத் தேசிய இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கிய பிறகு, சென்னை வந்த அவருக்கு, அறிஞர் வெ.சாமிநாத சர்மா, கல்கி போன்றோர் நண்பர்களாயினர். இருவருடனும் பழகியதால் சிறுகதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. அந்நாளில், 'திராவிடன்' இதழாசிரியர் தோழர் சுப்பிரமணியம் நண்பரானார். அவருடைய 'திராவிடன்' இதழில் 'சாந்தசீலன்' என்ற சிறுகதையை எழுதினார். அந்தக் கதையைப் படித்த கல்கி, அவர் ஆசிரியராக இருந்த 'ஆனந்த விகடனில்' எழுத வற்புறுத்தினார். சாமிநாத சர்மா ஆசிரியராக இருந்த 'நவசக்தி'யிலும் சாண்டில்யனின் கட்டுரைகள் வெளிவந்தன.

   சாண்டில்யன் எழுதிய 'பலாத்காரம்' என்ற முதல் நாவலுக்கு அந்நாளைய காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி சிறப்பாக முன்னுரை எழுதியிருக்கிறார். பிற்காலத்தில், 'புரட்சிப்பெண்' என்ற தலைப்பில் அந்த நாவல் வெளிவந்தது.

   சாண்டில்யனுக்குத் தன்னம்பிக்கை அதிகம். ''ஒரு படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மவுசு இருக்கும். ஆனால், நான் எழுதும் புத்தகங்களுக்கு 500 ஆண்டுகள் மவுசு இருக்கும். அதனால்தான் நான் எழுத்துத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்'' என்று, சாண்டில்யனே ஒருமுறை கூறியிருக்கிறார்.

   சாண்டில்யனின் எழுத்துத் திறமையை அறிந்த சுதேசமித்திரன் ஆசிரியர் ஸி.ஆர்.சீனிவாசன், அவரை நிருபர் பணியில் அமர்த்தினார். சாண்டில்யன், உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் பற்றிய செய்திகளை எழுதும் நிருபராகப் பணியாற்றினார். சாண்டில்யன் நிருபர்களுக்கு வழக்கு மன்றத்திலிருந்த 'மரியாதை'யை சுவைபட விவரித்து, 'ஆங்கில ஏடுகளின் நிருபர்களுக்கு மட்டும் நீதிமன்றத்தில் வசதியாகவும் மற்ற தமிழ்ப் பத்திரிகை நிருபர்கள் நின்றுகொண்டுதான் எழுதவேண்டிய நிலை' உள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசியும் எழுதியும் வந்தார்.

   நீதிமன்ற நடவடிக்கைகளை சுதேசமித்திரனில் வெளிவரச் செய்தார். சுதேசமித்திரன் செய்தி வழக்கறிஞர்களிடையே பரவியது. சாண்டில்யனுக்கு உட்கார நாற்காலி வசதி செய்யப்பட்டது. நீதிமன்ற வழக்குகளை நல்ல தமிழில் சுதேசமித்திரனில் எழுதியதால், சாண்டில்யன் திறமை எங்கும் பேசப்பட்டது.

   1937-இல் மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேட்டி கண்டு எழுதினார். சாண்டில்யனின் மதிப்புணர்ந்த நிர்வாகம், அவரை உதவி ஆசிரியராகப் பதவி உயர்வு அளித்தது. பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக, மீண்டும் நிருபர் பதவி தரப்பட்டது. இதனால் கோபமடைந்த சாண்டில்யன், அந்தப் பதவியிலிருந்து விலகி 'ஹிந்துஸ்தான்' வார இதழில் சேர்ந்தார்.

   சாண்டில்யனுக்கு, சினிமா, நாடகம் பார்ப்பதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. 'ஹிந்துஸ்தானி'ல் பணியாற்றியபோதுதான் திரைப்படத்துறையின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. திரைப்படக் கலையில் முன்னணியில் நிற்க வேண்டுமென்று இயற்கையாகவே அவரிடம் இருந்த லட்சியம் அப்போது நிறைவேறியது. சினிமாவைத் தாக்கி எழுதுபவர்களுக்கு அவர், தன் பேனாவின் வலிமையால் பதில் சொல்லியிருக்கிறார். சினிமா பற்றி ராஜாஜி கூறிய கருத்துகளை எதிர்த்து 'சினிமா பார்ப்பது கெடுதலா?' என்ற கட்டுரையை 1952-இல் எழுதினார்.

   எனக்கு சினிமாவைப் பற்றி ஏதாவது தெரிகிறது என்றால், அதற்குக் காரணமானவர்கள் பி.நாகிரெட்டி, வி.நாகையா, கே.ராம்நாத் ஆகியோர்தான். பதினான்கு ஆண்டுகள் சினிமா உலகில் இருந்தேன். அப்போதெல்லாம் கதையை எழுதக் குறைந்தது ஆறுமாதங்களாகும். கதையை எழுதினால் மட்டுமே போதாது. 'ஷூட்டிங் ஸ்கிரிப்ட்' தயாரிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

   வி.நாகையாவின் 'தியாகையா' வெற்றிக்கு சாண்டில்யன் பெரிதும் காரணமானவர். அந்தப் படம் வெளிவந்த பிறகு, புகழின் உச்சியில் இருக்கும்போதே திரைப்படத் துறையிலிருந்து விலகிவிட்டார்.

   இளம் வயதிலிருந்தே அவரின் லட்சியம் எழுத்தாளராக வேண்டுமென்பது. பிரபலமாக விற்பனையாகும் பத்திரிகைக்கு ஆசிரியராக வேண்டுமென்பது. முதல் எண்ணம் வெற்றிகரமாக நிறைவேறியது. இரண்டாவது எண்ணம் சொந்தமாகப் பத்திரிகை நடத்தி, வெற்றி பெறவில்லை.

   சில காரணங்களால் மீண்டும் சுதேசமித்திரனில் சேர்ந்தார். 'ஞாயிறு மலர்' என்ற சிறப்புப் பகுதியின் பொறுப்பாளரானார். சுதேசமித்திரன் வாரப் பத்திரிகையிலும் எழுதினார். 'அமுதசுரபி'யில் சரித்திர நிகழ்ச்சிகளை நிலைக்களனாகக் கொண்ட சிறுகதைகளை அவ்வப்போது எழுதினார்.

   'சரித்திர நாவல் எழுதும் தாங்கள், வரலாற்றுப் புதினங்கள் எழுதவேண்டும்' என்று 'அமுதசுரபி' நிறுவனத்தார் கேட்டுக்கொண்டதால், 'ஜீவபூமி' என்ற சரித்திரத் தொடரை எழுதினார். 'ஜீவபூமி' தொடர், பின்னர் பிரபல அமெச்சூர் நாடக மன்றத்தாரால் நாடகமாக அரங்கேற்றப்பட்டது.

   'ஜீவபூமி' தொடருக்குப் பிறகு, 'மலைவாசல்' என்ற தொடரை எழுதினார். 'மலைவாசல்' புதினத்துக்குக் கிடைத்த வாசகர்களின் வரவேற்பால், பல வரலாற்றுப் புதினங்களை எழுத அவருக்கு உற்சாகம் ஏற்பட்டது. கன்னிமாடத்தில் தொடங்கி, கடல்புறா (மூன்று பாகங்கள்), யவனராணி முதலிய பிரம்மாண்டமான நாவல்களை எழுதினார். மொத்தம் 50 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில், 42 சரித்திர நாவல்கள். மற்றவை சமூக நாவல்கள் மற்றும் இலக்கியக் கட்டுரைகள். இவர் எழுதிய மிகப்பெரிய நாவல் கடல்புறா. மூன்று பாகங்கள்; மொத்தம் 2000 பக்கங்கள். கையெழுத்துப் பிரதிகள் 20,000 பக்கங்களுக்கும் மேல். இந்தியாவிலேயே அதிகம் எழுதி சரித்திரம் படைத்த சாதனையாளர் சாண்டில்யன்தான்.

   பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்படக் கதை வசனகர்த்தா, வரலாற்று நாவலாசிரியர்கள் போன்றோரிடையே முன்னணி இடத்தைத் தேடிக்கொண்டவர் எனப் பலமுகத் திறமைகளோடு முன்னேறிக் கொண்டிருந்த சாண்டில்யன், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கான சங்கம் ஒன்றை நிறுவுவதில் பெரும்பாடுபட்டு, 'தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தை'த் தொடங்கினார். அது 'தென்னிந்தியப் பத்திரிகையாளர் சம்மேளனம்' என்ற பெயரில் பிரபலமடைந்தது.

   தனக்கு நியாயம் எனத் தோன்றாததை எதிர்த்து அவர் பேனா சீறிப்பாயும். நாடகமோ, திரைப்படமோ, சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தால் போர்க்கொடி உயர்த்தத் தயங்கமாட்டார். நண்பர் என்றும் வேண்டியவர் என்றும் பார்க்க மாட்டார்.

   சரித்திரக் கதை சக்கரவர்த்தி சாண்டில்யன், 'சீனத்துச் சிங்காரி' என்ற தொடரை 'குமுதம்' வார இதழில் எழுதத் தொடங்கியபோது, திடீரென நோய்வாய்ப்பட்டார். மரணப்படுக்கையிலும் அந்தக் கதையை எழுதினார்.

   மருத்துவமனையில் இருந்தபோதும், மீண்டும் வீட்டுக்கு வந்த பிறகும் சாண்டில்யனைச் சந்தித்துப் பேசும்போது, 'சீனத்துச் சிங்காரி'யின் கதையைப் பற்றி நாங்கள் விவாதிப்பது வழக்கம். இதையறிந்த, 'குமுதம்' பதிப்பாளர் என்னிடம், ''நீங்கள்தான் சீனத்து சிங்காரியைத் தொடர வேண்டும்'' என்று வற்புறுத்தினார்.

   ''சாண்டில்யன் எழுத்து எங்கே? என் எழுத்து எங்கே? அவர் எழுத்து பட்டு நூல்; என்னுடையது பருத்தி நூல். இரண்டையும் சேர்த்துப் பட்டாடை நெய்து முடிப்பது சரியாகாது'' என்று மறுத்துவிட்டேன். முடிவடையா கோபுரமாய் 'சீனத்துச் சிங்காரி' நின்றுவிட்டது.

   சாண்டில்யனுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனளிக்காமல், 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

   அவரது இரு குமாரர்களில் மூத்தவர், சடகோபன் பேராசிரியர். இளையவர் கிருஷ்ணன், வைஷ்ணவ கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். மகள்களுள் ஒருவரான பத்மா சாண்டில்யன், இசையில் மிகவும் சிறந்து விளங்குகிறார்.

   எழுத்துலகில் நிலை நிற்கத்தக்க அழியாத பல படைப்புகளை நல்கி, வாசகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றவர் சாண்டில்யன்.

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp