
ஸ்ரீ சன கவிதை தந்த பாரதிக்குப் பின்னர் புதுக்கவிதையின் தந்தையாய்த் திகழ்ந்த ந.பிச்சமூர்த்திக்குப் பிறகு, கவிதையின் காலம் முடிந்தேவிட்டது என்று ஆரூடம் கணித்தவர்களின் வாக்குப்பொய்க்க, நவகவிகளுக்கு நிலைபேறுமிக்க வாழ்வு கொடுத்த கவிஞர்களின் கவிஞர் மீரா, திராவிடச் சிந்தனையில் அரும்பிப் பொதுவுடைமைத் தத்துவத்தில் பூத்துக்குலுங்கிய கவிதை நந்தவனம். 10.10.1938-இல் தோன்றி, 01.09.2002-இல் மறைந்த சிவகங்கைச் சீமையின் கவிதைக் குயில்.
÷""பிறந்ததுதான் பிறந்தேன் நான் பெண்ணாய்ப் பிறந்தேனா'' என்று கவிதை பாடிய கவிஞர் மீ.ராசேந்திரனின் முதல் இரு எழுத்துகளின் இணைப்பிலிருந்துதான் கவிஞர் மீரா என்னும் பெயர்ப் பிறப்பு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள்.
÷""இலக்குமி அம்மாவும், எஸ்.மீனாட்சிசுந்தரமும் என் மாதா பிதாக்கள். புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என் குரு. மகாகவி பாரதி என் தெய்வம். என் குருவின் மூலமே என் தெய்வத்தைத் தரிசித்தேன். பாரதிதாசனின் தாசன் ஆன நான், மற்றும் ஒரு பாரதிதாசன் ஆனேன்'' என்று குறிப்பிடும் மீரா எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையில் எந்தத் தடையுமின்றி குறிக்கோளுடன் வாழ்ந்து சிறந்தவர். அண்ணா, பாரதிதாசன், கண்ணதாசன், மு.வ. ஆகியோர் எழுத்துகளில் ஏற்பட்ட ஈர்ப்பால் எழுத வந்த மீரா, தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதியவர்.
சாகாத வானம் நாம்; வாழ்வைப் பாடும்
சங்கீதப் பறவைநாம்; பெருமை வற்றிப்
போகாத நெடுங்கடல் நாம்; நிமிர்ந்து நிற்கும்
பொதியம்நாம்; இமயம்நாம்; காலத் தீயில்
வேகாத பொசுங்காத தத்துவம் நாம்;
வெங்கதிர்நாம்; திங்கள்நாம்; அறிவை மாய்க்கும்
ஆகாத பழமையினை அகற்றிப் பாயும்
அழியாத காவிரிநாம்; கங்கை யும்நாம்;
என்ற மீராவின் இப்பாடல், அக்காலத்தில் திராவிட இயக்க மேடைகளில் பாரதிதாசன் பாடல்களுக்கு அடுத்ததாக ஒலித்த பாடல் இது என்பார் அப்துல்ரகுமான்.
தெய்வங்கள் திருநாட்கள் எங்கட்கில்லை
தெருவோரச் சாக்கடைக்கு வருமா தெப்பம்?
என்ற மீராவின் கவிதை அண்ணாவை ஈர்த்த கவிதை. அவர் அரங்குகளில் எடுத்து முழங்கிய கவிதை. மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ் பயின்ற கவிஞர் மீரா, சிவகங்கை மன்னர் கல்லூரியில் பேராசிரியப் பணி ஏற்றார். அக்காலத்தில் மதுரைப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆசிரியர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத் தொடங்கப்பட்ட மூட்டா (ஙமபஅ) இயக்கத்தில் தீவிரப் பங்காற்றினார். அவ்வமைப்பின் ஜர்னல் ஆசிரியரானார். போராட்டத் தீவிரத்தால், கல்லூரியினரால் இருமுறை பணிநீக்கம் செய்யப்பட்டார். அதுசமயம் உருவானதே அன்னம் பதிப்பகம். அகரம் அச்சகத்தின்வழி, நவீன படைப்பிலக்கியங்களை உருவாக்கித் தமிழுலகுக்குத் தந்தார். "அபியின் மெüனத்தின் நாவுகள்' என்ற தொகுப்பை அடுத்து, நீலமணி, கல்யாண்ஜி, இரா.மீனாட்சி உள்ளிட்டோர் கவிதைகளை, நவகவி என வரிசைகளாக்கி வழங்கினார். கி.ரா.வின் படைப்புகளை வெளியிட்டுப் பெருங் கவனிப்பை ஏற்படுத்தியது அன்னம். பின்னர், "அன்னம் விடு தூது கவி' என்ற கவிதைக்கான சிற்றேடு ஆகியவற்றையும் அன்னம் வாயிலாக வெளியிட்டார் மீரா.
÷மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம், படைப்பிலக்கியம் எனத் தமிழின் துறைதோறும் பதிப்பாக்கங்களை வலுப்படுத்தித் தேர்ந்த பதிப்பகராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். தரமான இலக்கியக் கூட்டங்களை ஏற்பாடு செய்து இனிது நடத்தினார். அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கது, சிவகங்கையில் அவர் மூன்று நாள்கள் நடத்திய "பாரதி நூற்றாண்டு' விழா.
÷பதிப்பகத் துறையில் எழுத்துப் பரம்பரையை உருவாக்கி வளர்த்த அவர், தம் கல்லூரிப் பணியிலும் சிறப்பான மாணவர்களை உருவாக்கினார். எந்தக் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடினாரோ, அந்தக் கல்லூரியிலேயே பின்னர் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பையும், பொறுப்பு முதல்வர் பணியையும் அவர் ஆற்ற நேர்ந்தது. அதுசமயம் கல்லூரி நிர்வாகத்தைச் சீர்செய்து, மாணவர்களிடையே ஒழுக்கக் கட்டுப்பாடுகளை வலியுறுத்திய அவர், அவ்வூரின் பெரிய மனிதர் ஒருவரது பிள்ளையின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, கும்பகோணம் அரசுக் கல்லூரிக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார். ÷""கல்லூரிப்பணி, தமிழ்த்துறைத் தலைமைப்பணி, முதல்வர் பொறுப்புப்பணி, கல்லூரிப் போராட்டப்பணி, கல்லூரி ஆசிரியர்கள் தொழிற்சங்கப்பணி, கவி இதழ்ப்பணி, அன்னம் விடு தூது இதழ்ப்பணி, அன்னம் பதிப்பகச் சிறப்பாசிரியர் பணி, அகரம் அச்சக மேற்பார்வைப்பணி, கொஞ்சம் குடும்பப் பணி இவை எல்லாம் சேர்ந்து என் எழுத்துப் பணியை வளைத்துப் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டன'' என்று தாம் பணிகளால் பிணிக்கப்பட்டு கவிப் பறவையானதைக் குறிப்பிடும் மீரா, அவற்றையும் மீறித் தமிழுக்குச் சிறப்பான ஆக்கங்களை அளித்துள்ளார்.
"கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்' அக்காலத்தில் கல்லூரிக் காதலர்களின் வேதப்புத்தகமாகத் திகழ்ந்தது. இவர்தம் இலக்கிய, லட்சியக் கவிதைகளின் ஆவணமாகத் திகழ்ந்த, மூன்றும் ஆறும் கவியரங்கக் கவிதைகளின் தொகுப்பு. ஊழல் அரசியலையும், நாணயமற்ற வாழ்வின் போக்குகளையும் அங்கதமாகக் குத்திக் காட்டும் கவிதைக் கூர் முனைகள், ஊசிகள், ஹைகூவும் சென்ரியூவும் தமிழுலகில் இறக்குமதியான காலத்தில் தமிழ்மரபில் இவரிடமிருந்து ஒலித்தது குக்கூ,
அழுக்கைத்தின்னும்
மீனைத்தின்னும்
கொக்கைத் தின்னும்
மனிதனைத்தின்னும்
பசி!
என்பது அவர்தம் குக்கூக் கவிதைகளுள் ஒன்று. இராசேந்திரன் கவிதைகள், மீராவின் கவிதைகள், கோடையும் வசந்தமும் ஆகியன இவர்தம் பிற கவிதைத் தொகுப்புகள்; "எதிர்காலத் தமிழ்க்கவிதை' கவிதை விமர்சன நூல். "வா இந்தப்பக்கம்' நிகழ்காலச் சமுதாய நிகழ்வுகளை அங்கதமாக விமர்சிக்கும் கட்டுரைத் தொகுப்பு.
÷எனிமையும் அன்பும் தோழமையும் நிறைந்த புன்சிரிப்பு கவிஞர் மீரா, எழுத்திலும் பேச்சிலும் பொங்கிப் பெருகும் அங்கதம் இவர்தம் உயிர்த் துடிப்பு. நிறைவு காலத்தில் "ஓம்சக்தி' இதழின் ஆசிரியராகவும், சிறிதுகாலம் கோவையில் தங்கிப் பணியாற்றிய மீரா, எஸ்.ஆர்.கே.யைப்போல் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டார்.
÷""பாரியின் பறம்பை மூவேந்தர்கள் முற்றுகையிட்டதுபோல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு, இதய நோய், வாதநோய் ஆகிய முந்நோய்களால் தாக்கப்பட்டுப் படுக்கையில் கிடக்கிறேன். இப்போதாவது கடவுளைக் கும்பிடுங்கள், கோயிலுக்குப் போங்கள்.... என்று நெய்வேலியிலிருந்து வரும்போதெல்லாம் என் அருமை மகள் செல்மா சொல்லிப்பார்த்தும் எதுவும் நடக்கவில்லை,. என்னால் முடியவில்லை. கடவுள் இருந்து காப்பாற்றினால் நல்லதுதான். (நான் பிழைத்துப்போகிறேன்). ஆனால், இயல்பாய் எனக்கு அந்த நம்பிக்கை வரவில்லை. இனி சாகப்போகும்போதா வரப்போகிறது திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி கொடுத்த பெரியார் விருது என் படுக்கை அருகே இருக்கிறது'' என்று அக்காலக்கட்டத்திலும் அங்கதத்தோடு தன் நிலையை எழுதினார் மீரா.
÷அப்துல் ரகுமான் வழங்கிய கவிக்கோ விருதும், கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்குப் பெருமை சேர்த்தன. இவர்தம் பதிப்பாக்கங்களால் மிகச்சிறந்த விருதுகள் பெற்ற படைப்பாளிகளை உருவாக்கிய படைப்பாளி கவிஞர் மீரா.
தனியாய்.. தனித்தனியாய்.. தன்னந் தனியனாய்.. இது மீரா எழுத நினைத்திருந்த நாவலின் தலைப்பு. நிறைவேறாது விடப்பட்ட இந்நாவலைப் போலவே இவர்தம் கனவாகிய, மாமல்லபுரச் சாலையில் கவிஞர்களுக்காக, பாரதி கவிதா மண்டலம் அமைக்கவேண்டும் என்ற ஆவலும்... கவிக்கனவு பலிக்கக் காலம் துணை செய்யட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.