நண்பர்களின் அறிவுரைக்கேற்பவே பாரதி புதுச்சேரிக்கு வந்தார். ஆனால், எந்த நண்பரிடமும் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டுவிட்டாரே! புதுச்சேரியில் அவருக்கு அத்தனை துன்பங்கள் விளைந்தனவோ?÷தன்னிச்சையாகப் புதுச்சேரியை விட்டுப் புறப்பட்டது அவரின் உறுதிகொண்ட நெஞ்சினை அல்லவா உணர்த்துகிறது!
தம் வாழ்நாளில், வறுமை அவ்வப்போது குறுக்கிட்டாலும், வற்றாச் சுவை ததும்பும் காப்பியங்களையும், நாட்டுப்பற்றைக் காட்டுத் தீயாகப் பரப்பும் கவிதைகளையும் எழுதிக் குவித்தாரே பாரதி, அவை இந்தப் புதுச்சேரியில்தானே! ஏன், யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊரைவிட்டு நீங்கினார்? வறுமைதான் காரணம் என்று சிலர் கண்ணீர் சிந்துகிறார்கள். ஏன், இப்படிச் சிந்தித்துப் பார்க்கலாமே...?
÷உலகப்போர் இறுதியாகிவிட்டது. அடைக்கலம் என்று வந்த இடத்திலிருந்து நீங்கிப் பரந்த - பிறந்த மண்ணில் தனது விடுதலைப் பிரகடனத்தை வெளியிட முடியுமே என்கிற மன உறுதியுடன் வெளிப்பட்டிருக்கலாமே! அப்படிப்பட்ட எஃகு உள்ளம் பாரதிக்கு உண்டல்லவா!
÷புதுச்சேரியிலிருந்து பாரதியைக் கடத்திச் சென்றுவிட ஆங்கில அரசின் உளவுத்துறையும் பல்வேறு தந்திரங்களைக் கையாண்டு தோற்றது. இறுதி முயற்சியாக ஒரு "சூதாட்டம்' நடத்திற்று. புதுச்சேரியில் தங்கியிருந்த "சுதேசிகள்' எனப்படும் பாரதி உள்ளிட்ட நாட்டுப்பற்றாளர்களை அடக்கி ஒடுக்கிவிடலாம் என்கிற தந்திரம் அது.
இச்செய்தி அறிந்த பாரதியும் அவரின் நண்பர்களும், அணுக்கத் தொண்டர்களும் புதுச்சேரி கவர்னரின் ஆலோசனை அவை உறுப்பினர்களான கலவை சங்கரர், ஆரோக்கியசாமி முதலியார், ஜீயர் நாயுடு போன்றவர்களை அணுகி முறையிட்டனர்.
இதன் விளைவாக பிரிட்டிஷாரின் நரித்தனம் முறியடிக்கப்பட்டது. இப்படிப்பட்டவர்களிடம் பாரதி, தாம் புதுச்சேரியினின்று வெளியேறப் போவதாகச் சொல்லி இருந்தால், பாதுகாப்பு அரண் அமைத்திருப்பார்களே!
÷ஆங்கில அரசின் வைசிராய், சென்னை ஆளுநர் போன்றவர்கள் புதுச்சேரி ஆளுநர்க்கு எழுதிய கடிதங்களையும் ஏற்காமல், பாரதி குழுவினர் புதுச்சேரியில் தங்கியிருக்க ஒப்புதல் அளித்தனரே! இதுவும் பாரதியின் நெஞ்சில் இன்பம் பாய்ச்சிடவில்லையோ!
÷உலகப்போருக்குப் புதுச்சேரி இளைஞர்கள் சிலர் படையில் சேர்ந்து வெளிநாடுகளுக்குப் புறப்பட்டபோது, அவர்களைத் தம் இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டிவிட்டு விருந்து படைத்து ரயில் நிலையம் சென்று வழியனுப்புகிறார். அவ்வாறாயின், அயல் நாட்டவருக்கு உதவியாக இவ்விளைஞர்கள் செல்வதாகக் கருதவில்லை என்று கூறமுடிகிறது. ஆகவே, உலகப்போர் முடிவுற்ற உடனே ஆங்கிலேயர் இந்திய மண்ணிலிருந்து வெளியேறிவிடுவர் என்கிற எண்ணம் பாரதியின் நெஞ்சில் அழுத்தமாகவே ஊன்றியிருப்பதாகத் தோன்றுகிறது.
÷எனவே, தம்முடைய பத்தாண்டுகாலப் புதுச்சேரி வாழ்க்கை கசந்து போனதாகவோ, வறுமைப்பிணி இவரை வாட்டியது என்பதாலோ புதுச்சேரியினின்று வெளியேறினார் என்பதற்குத் தக்க சான்றுகள் அதிகம் கூறிட இயலவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக தம்முடைய முத்திரைப் படைப்புகள் எல்லாம் ஊற்றெடுத்து நூல் வடிவம் பெற உறுதுணையாக நின்ற புதுவையை மறந்திடப்போமோ?
÷"புவியனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்த கவியரசர்' என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள வழிவகை செய்த புதுச்சேரியைப் பற்றிக் குரல் மாறிக் கூவிடுமோ அந்தக் குயில்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.