வடவேங்கடமும் தென்குமரியும்

மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்! ""வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்'' என்று தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் பாடிய பனம்பாரனார் தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். வடவேங்கடம்
Published on
Updated on
2 min read

மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!

""வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்'' என்று தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் பாடிய பனம்பாரனார் தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். வடவேங்கடம் என்பது இன்றைய திருப்பதிதானா? தென்குமரி என்பது இன்றைய குமரிமுனையா அல்லது கடல்கோளால் அழிந்துபோன குமரிக்கண்டமா?

சரித்திரகாலம் ஆரம்பிப்பதற்கு வெகு காலத்துக்கு முன்னதாகவுள்ள லெமூரியா நாடு தமிழ்நாடாயிருந்தது என்றும், அதில் வசித்தவர்கள் தமிழர்களாய் இருந்தார்கள்'' என்றும் ஹரப்பா நாகரிகத்தை ஆய்வு செய்த ஹெரஸ் பாதிரியார் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியம் படைப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே லெமூரியா கண்டம் அல்லது பண்டைய தமிழகம் பரந்த நிலமாக இருந்தது என்பது தெரிய வருகிறது.

கலித்தொகை பாடல் 104:1-4, சிலப்பதிகாரம் 20:17-22 ""பஃறுளி ஆறும் பல குன்றும் சூழ்ந்த குமரிக்கோடும் சினங்கெழு கடலுள் ஆழ்ந்தன'' என்று குறிப்பிடுகிறது. உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இதனுடன் ""பஃறுளி ஆற்றுக்கும் குமரியாற்றுக்கும் இடையே 700 கவதப் (அளவு) பரப்புடைய நிலம் இருந்ததென்றும்'' குறிப்பிட்டுள்ளார்.

இது கருதியே தமிழக வரலாற்றை ஆய்வு செய்து ஆங்கிலத்தில் தமிழக வரலாறு எழுதிய வி.கனகசபை (ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் - தமிழில்: கா.அப்பாதுரை) ""நாம் குறிப்பிடும் காலத்திய மக்கள் தம் காலத்துக்கு முன் தமிழகத்தின் நிலப்பரப்பு அன்றிருந்த எல்லை கடந்து தெற்கில் நெடுந்தொலைவு பரந்திருந்தது. கடலின் ஒரு திடீரெழுச்சியால் குமரிக்கோடு என்ற மலையும், பஃறுளியாறு ஓடிய பரப்பும் மறைந்துவிட்டன'' என்று குறிப்பிட்டுள்ளார்.

பனம்பாரனாரால் சுட்டப்படும் வடவேங்கடம் இன்றைய திருப்பதிதானா என்பதற்கு, ""நெடியோன் குன்றமும் தொடியோள் பெüவமும்'' என்பது சங்கப்பாடல் தரும் குறிப்பு. இங்கு நெடியோன் என்று குறிப்பிடப்பட்டிருப்பதும், குன்றம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் முருகக்கடவுள் கோயில்கொண்ட இடமாகவே அமைந்துள்ளது என அறியலாம். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது முதுமொழி.

இன்று அழகர்மலை என்று அழைக்கப்படும் மலை சோலைமலை என்று திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது. இதுபோல் பண்டைக் காலத்தில் தமிழகத்தின் வட எல்லையாக இருந்த வேங்கடத்தில் முருகனுக்குக் கோயில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

இதை உ.வே.சா., ""பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டின் வடவெல்லை கிருஷ்ணா நதியென்று சிற்பசாஸ்திரம் கூறுகிறதென்று கேட்டிருக்கிறேன். தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாடு வேங்கடத்தை வடக்கெல்லையாகவும், குமரியைத் தெற்கெல்லையாகவும் கொண்டிருந்தது'' என்கிறார். (சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும், பக்.14)

மேலும், அவர் ""அழகர் மலையைச் சோலைமலை என்று திருமுருகாற்றுப்படையில் சொல்லியிருப்பதுடன், அது முருகக் கடவுளுடைய திருப்பதி என்றும், நக்கீரர் பாடியிருக்கிறார். அப்படியே திருவேங்கடமும் முருகக்கடவுள் ஸ்தலமென்று சில பழைய நூல்களால் தெரிகிறது'' என்று கூறுவதால், வடவேங்கடம் என்று பனம்பாரனார் குறிப்பிடுவது தற்போதுள்ள திருப்பதிதான் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

இரண்டாவது வினா தென்குமரி பற்றியது. ""வடவேங்கடந் தென் குமரியாயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து'' என்ற தொல்காப்பிய பாயிரத்தில் குறிப்பிடப்படும் "குமரி' என்ற சொல், தமிழகத்தின் தற்கால எல்லையாக உள்ள குமரிமுனை அல்ல. சங்க காலத்தில் கடல்கோளால் அழிந்துபோன குமரிக்கண்டத்தையே குறிக்கிறது என்பது பல ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாகும்.

தொல்காப்பியப் பாயிரத்தில் குறிக்கப்படும் "குமரி' என்பது, பண்டைக் காலத்தில் பாண்டி நாட்டின் தென் பகுதியில் ஓடிய ஆற்றின் பெயராகும். சங்க காலத்தில் ஏற்பட்ட பேராழியால் (சுனாமி)- கடல் கோளால் அதில் இருந்த சில நாடுகளும் குமரி ஆறும் பஃறுளியாறும் அழிந்துபோயின என்பது ஆய்வாளர்களின் கருத்து.

""செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி''

""செந்தமிழியற்கை சிவணிய நிலம்''

எனத் தொல்காப்பியரும் பனம்பாரனாரும் கூறிய செந்தமிழ் நிலம் என்பது முதலிடைச் சங்கங்கள் இருந்த நிலப்பகுதியாதலே தகுதி'' என்பது மு.இராகவையங்காரின் கருத்தாகும்.

மேலும், ""பஃறுளி ஆற்றுக்கும் குமரியாற்றுக்கும் இடையிலிருந்த 700 காத அளவுள்ள 49 நாடுகள் அழிவுற்றனவென்று சிலப்பதிகார ஆசிரியர் தெரிவிக்கிறார்.

வடக்கெல்லை வடவேங்கடமென்றும், மற்ற மூன்று எல்லைகள் கடலென்றும் சிகண்டி ஆசிரியரும், சிறுகாக்கைப் பாடினியாரும் தத்தம் சூத்திரங்கள் முகமாக அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் காலத்துக்கு முன்பு குமரியாற்றை கடல்கொண்டது போலும்'' என்று உ.வே.சாமிநாதையர் கூறியுள்ளதால், கடல்கோளால் அழிந்துபோன சங்ககால குமரிக்கண்டமே தமிழகத்தின் தென் எல்லையாகும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com