ஓவியம் புகையுண்டது; காவியம் எழில் கொண்டது!

சீதையோ பேரழகுப் பெட்டகம். அழகெல்லாம் ஒருங்கு திரண்டு அவளிடம் சங்கமமாகிப் பேரழகியாகத் திகழ்கிறாள். இப்பேரழகியைக் கண்ட மன்மதன் அவளைச் சித்திரத்தில் தீட்டிக்கொள்ள விரும்பினான். அவனோ அழகுக் கலைக்குத் தலைவ
ஓவியம் புகையுண்டது; காவியம் எழில் கொண்டது!
Updated on
2 min read

சீதையோ பேரழகுப் பெட்டகம். அழகெல்லாம் ஒருங்கு திரண்டு அவளிடம் சங்கமமாகிப் பேரழகியாகத் திகழ்கிறாள். இப்பேரழகியைக் கண்ட மன்மதன் அவளைச் சித்திரத்தில் தீட்டிக்கொள்ள விரும்பினான். அவனோ அழகுக் கலைக்குத் தலைவன். ஓவியம் தீட்டுவதில் வல்லவன்.

 ÷சீதையைச் சித்திரத்தில் தீட்ட வேண்டும் என்ற ஆவல் கொண்ட மன்மதன் திரைச்சீலையைத் தொங்கவிட்டான். தன் எண்ணத்தை நிறைவேற்ற பல வண்ண மூலிகைகளை அமுதத்தில் கரைத்து, பல்வேறு வண்ணங்களை உருவாக்கி அதைப் பல கிண்ணங்களில் தேக்கி வைத்துக்கொண்டான்.

 ÷முதலில் திருவடிகளில் தொடங்குவோமே என நினைத்து, சீதையின் சிவந்த திருவடிகளை திரைச்சீலையில் தீட்டினான். பாதங்கள் நன்றாக அமைந்துவிட்டன என்றே எண்ணினான். ஆனால், சீதையின் திருவடிகளோடு தான் வரைந்த பாதங்களை ஒப்பிட்டுப் பார்த்தான். தான் வரைந்த பாதங்களைவிட அப்பேரணங்கின் பாதங்கள் அழகாக இருந்தன. சினம் கொண்டு திரைச்சீலையை எடுத்து வீசினான்.

 ÷மீண்டும் புதியதொரு திரைச்சீலையை மாட்டி வரையத் தொடங்கினான். இம்முறை திருமுக மண்டலத்தில் இருந்து வரையத் தொடங்கினான். இம்முறையும் அவன் தோல்வியைத் தழுவினான். திரைச்சீலையைக் கிழித்தெறிந்தான். முயற்சி தொடர்ந்தது. ஆனால், அவனால் சீதையின் அழகை சித்திரத்தில் முழுமையாகத் தீட்டமுடியவில்லை. ஓவியக்கலையில் துறைபோகிய வித்தகனாகிய மன்மதனோ, சீதையை சித்திரத்தில் தீட்ட முடியாமல் திகைத்தான்.

 ÷தன் காவிய நாயகியின் எழிலார்ந்த தோற்றத்தை மன்மதனாலும் தீட்ட முடியாது என்பதை ""மன்மதற்கும் எழுத ஒண்ணாச் சீதை'' என்று பெருமைபட்டுக் கொள்கிறார் கம்பர். பாடல் வருமாறு:

 ""ஆதரித்து அமுதில்கோல் தோய்த்து அவயவம் அமைக்கும் தன்மை

 யாது எனத் திகைக்கும் அல்லால் மதனற்கும் எழுத ஒண்ணாச்

 சீதையைத் தருதலாலே திருமகள் இருந்த செய்ய

 போதுஎனப் பொலிந்து தோன்றும் பொன்மதில் மிதிலைப்புக்கார்''

 (கம்ப.489-மி.கா.ப)

 ÷திருமகள் உறையும் செந்தாமரையின் நிறத்தை ஒத்த பொன் மதில் சூழ்ந்த மிதிலை மாநகரினுள் மாமுனி விசுவாமித்திரனும், ராமனும், இலக்குவனும் நுழைந்தார்கள் எனப் பாடல் முடிகிறது.

 ÷சித்திரம் கை பழக்கம் அல்லவா? வரைந்து வரைந்து தோற்ற மன்மதன், ஒருநாள் சீதையின் உருவத்தைச் சித்திரத்தில் தீட்டிவிட்டான். மன்மதன் வரைந்த ஓவியம் எப்படியோ மிதிலை அரண்மனை மடைப்பள்ளிச் சுவரில் மாட்டிக்கொண்டது. விறகு எரிய எரிய, புகை படியப் படிய அந்த ஓவியம் மங்கத் தொடங்கியது. ஓவியம் புகை உண்டுவிட்டது; புகை கொண்டுவிட்டது.

 ÷மிதிலைப் பொன்னாகிய மைதிலியை ராவணன் சிறை எடுத்து அசோகவனத்தில் வைத்துவிட்டான். தினம் தினம் கோதாவரி நதியில் தன் நாயகன் ராமனுடன் புனலாடி மகிழ்ந்த சீதை, மாற்றான் சிறையில் நீரோட்டம் துறந்து வாடினாள். தான் உடுத்திவந்த ஓர் ஆடையை அன்றி வேறு மாற்றுத் துகில் புனையாமல் தவம் செய்தாள். அவள் உடம்போ தூசி படர்ந்து நிறம் மங்கியது. மிதிலை அரண்மனை மடைப்பள்ளிச் சுவரில், மன்மதன் வரைந்த சீதையின் ஓவியம் புகையுண்டதுபோல் அசோக வனத்தில் சீதை காட்சியளித்தாள் என்கிறார் கம்பர்.

 ""ஆவிஅம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்;

 தூவி அன்னம் மென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்;

 தேவு தெள்கடல் அமிழ்து கொண்டு அனங்கவேள் செய்த

 ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள்''

 ÷ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தினளாக அவள் இருந்தபோது அவளுடைய உடலழகு, குணவழகை வென்று ஒளிவிட்டு மிளிர்ந்தது. புகையுண்ட ஓவியமாக அவள் காட்சியளிக்கும்போது குணவழகு விஞ்சி உடலழகை வென்று காட்சியளிக்கிறது. ஓவியத்து எழுத ஒண்ணாச் சீதையாக மிளிர்ந்தபோதும் புகையுண்ட ஓவியமாக அவள் திகமும்போதும் சீதை ஒளிர்கிறாள் என்கிறார் கம்பர்.

 ÷புகையுண்ட ஓவிய எழிலைக் கண்டுணர்ந்த அனுமன்,

 ""மாசுண்ட மணி அனாள், வயங்கு வெங்கதிர்த்

 தேசுண்ட திங்களும் என்னத் தேய்ந்துளாள்;

 காசுண்ட கூந்தலாள் கற்பும், காதலும்

 ஏசுண்டது இல்லையால்; அறத்துக்கு ஈறு உண்டோ?''

 என்று வியந்தோதுகிறான். சொல்லின் செல்வனின் சொற்களுக்கு மேலான சொல் உண்டோ? சீதையின் ஓவியம் புகையுண்டாலும் கம்பனின் காவியம் எழில் கொண்டுவிட்டதே...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com