இரு பிழைகள்; சில விடுபடல்கள்...

கடந்த வார (24.7.11) தமிழ்மணியில் திரைப்பட முன்னோடி வசனகர்த்தா அமரர் இளங்கோவன் பற்றிய கட்டுரை கண்டேன். மிக நல்ல பதிவு. ஆயினும் அதில் தகவல் ரீதியான இரு பிழைகளும் சில விடுபடல்களும் உள்ளன. முதலில் பிழைகள்
Published on
Updated on
1 min read

கடந்த வார (24.7.11) தமிழ்மணியில் திரைப்பட முன்னோடி வசனகர்த்தா அமரர் இளங்கோவன் பற்றிய கட்டுரை கண்டேன். மிக நல்ல பதிவு. ஆயினும் அதில் தகவல் ரீதியான இரு பிழைகளும் சில விடுபடல்களும் உள்ளன.

முதலில் பிழைகள்:

8 "ஏழை படும் பாடு படத்துக்கு இளங்கோவனோடு இணைந்து இன்னும் இருவர் எழுதியிருந்தார்கள்' என்று கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார். அது தவறு. விக்டர் ஹியுகோவின் புகழ்பெற்ற பிரெஞ்ச் நாவலான "லா மிசரபெல்லா' என்கிற கதையைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்ட அப்படத்துக்குத் திரைக்கதை எழுதியவர் சுத்தானந்த பாரதியார். இளங்கோவன் வசனம் மட்டுமே.

8 "1952-இல் வெளிவந்த காஞ்சானாவிலும் இளங்கோவனுக்கு சரிவுதான்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எழுத்தாளர் லக்ஷ்மி எழுதிய "காஞ்சனையின் கனவு' நாவல் திரைப்படமாக "காஞ்சனா' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது உண்மை. ஆனால் அந்தப் படத்துக்குத் திரைக்கதையோ, வசனமோ இளங்கோவன் எழுதவில்லை.

இனி விடுபடல்கள்:

8 "இன்பவல்லி' படத்துக்கு இளங்கோவன் வசனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சரி. ஆனால் அவர் மட்டும் தனித்து எழுதவில்லை. அவருடன் இணைந்து மா.லட்சுமணனும் எழுதியுள்ளார்.

8 கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எழுதிய கதைக்கு இளங்கோவன் வசனம் எழுதியுள்ளார். (நவீன விக்கிரமாதித்தன் -1940).

8 ஒரே படத்தில் இடைவேளைக்கு முன்பு ஒரு கதையும் (என்னை அடியாதே பெத்தப்பா), இடைவேளைக்குப் பின்பு ஒரு கதையும் (இரு நண்பர்கள்) காட்டப்பட்டது. இரு கதைகளுக்கும் வசனம் இளங்கோவன்தான். இரு படங்களுக்கும் பொதுத் தலைப்பு "கதம்பம்' (1941).

8 கே.சுப்பிரமணியம் திரைக்கதை அமைத்து இயக்கிய "கோகுலதாசி' (1948) படத்துக்கு இளங்கோவன் கதை வசனம் எழுதியிருக்கிறார்.

8 இளங்கோவன் வசனம் எழுதிய பி.யு.சின்னப்பாவின் "மகாமாயா'வும், எம்.கே.தியாகராஜ பாகவதரின் "ஹரிதாஸý'ம் ஒரே நாளில் (16.10.1941) வெளியாயிற்று. (ஹரிதாஸின் வெற்றி சரித்திர சாதனை).

8 பி.யு.சின்னப்பா நடித்த கடைசிப் படமான "சுதர்ஸன்' படத்துக்கு இளங்கோவனும் ஏ.எஸ்.ஏ.சாமியும் இணைந்து வசனம் எழுதியிருக்கிறார்கள்.

8 எம்.ஜி.ஆர்., டி.எஸ்.சரோஜா இணைந்து நடித்த "ஜெனோவா' (1953) படத்தின் வசனங்களை இளங்கோவன், சுரதா, நெடுமாறன் ஆகிய மூவரும் எழுதியிருந்தார்கள்.

8 எம்.கே.தியாகராஜ பாகவதரின் கடைசிப் படமான "புதுவாழ்வு' படத்துக்கு (1957) இளங்கோவன், ஏ.கே.வேலன், இறைமுடிமணி, சுரதா ஆகிய நால்வரும் இணைந்து கதை வசனம் எழுதியிருந்தனர்.

8 சிவாஜிகணேசனும் வைஜயந்திமாலாவும் இணைந்து நடித்த "சித்தூர் ராணி பத்மினி' (1963) படத்துக்கு இளங்கோவனும் ஸ்ரீதரும் இணைந்து வசனம் எழுதினர்.

அக்கட்டுரையில் இளங்கோவன் வசனம் எழுதிய படங்கள் என்று ஏழு குறிப்பிடப்பட்டுள்ளன. (அதில் ஒன்று அவர் எழுதாதது). இளங்கோவன் தனித்து 21 படங்களுக்கும், பிறரோடு இணைந்து 5 படங்களுக்கும் ஆக 26 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அவரது முதல் படம் "அம்பிகாபதி' (1937), இறுதிப்படம் "சித்தூர் ராணி பத்மினி' (1963).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.