"மார்க்சிய ஞானி' ஆர்.கே.கண்ணன்!

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழகத்துக்குப் பல அரசியல் தலைவர்களையும் இலக்கிய மேதைகளையும் அளித்துள்ளது. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆர்.கே.கண்ணன். 1919-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி பிறந்த ரங்கப்பள்ளி கே.கண்ண
"மார்க்சிய ஞானி' ஆர்.கே.கண்ணன்!

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழகத்துக்குப் பல அரசியல் தலைவர்களையும் இலக்கிய மேதைகளையும் அளித்துள்ளது. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆர்.கே.கண்ணன்.

1919-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி பிறந்த ரங்கப்பள்ளி கே.கண்ணனின் தாய்மொழி தெலுங்கு என்றாலும், அவர் ஏழாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் வரை வடமொழிதான் படித்தார். அந்த மொழியில் அவர் பெற்ற தேர்ச்சியின் பயனாய் அம்மொழியில் உள்ள வேதங்கள், உபநிடதங்களைப் படித்ததோடு, வடமொழிக் கவிஞர்களின் நூல்களையும் விரும்பிப் படித்தார்.

பல்கலைக்கழகப் படிப்பை முடித்தவுடன் ஆர்.கே.கே. திருப்பூரில் வங்கி ஒன்றில் பணியில் சேர்ந்தார். அக்காலகட்டத்தில் பி.இராமமூர்த்தியின் சொற்பொழிவும், தோழர் ஜீவாவின் மேடைப் பாடல்களும் ஆர்.கே.கே.யை மிகவும் கவர்ந்தன. அத்துடன் திருப்பூர் வட்டாரத்தில் உள்ள தொழிற்சாலைகளில் நடைபெற்ற வேலை நிறுத்தங்கள், கதவடைப்புகள், அவற்றை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் அவருடைய கவனத்தை ஈர்த்தன. அச்சமயமே வங்கிப் பணியை ராஜிநாமா செய்துவிட்டு தொழிலாளர்கள் போராட்டத்துக்குத் தோள்கொடுக்க முன்வந்தார். ஆர்.கே.கே. காங்கிரஸ் சோஷலிஸ்ட் இயக்கத்தில் இருந்துவிட்டு பின்னர் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார்.

1940-ஆம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சியின் நடவடிக்கையில் ஈடுபட்டு சிறை சென்றார். சிறையில் மார்க்சியத் தத்துவங்களைப் படித்ததோடு, மற்ற தோழர்களுக்கும் அந்தத் தத்துவங்களை விளக்கினார். சிறையில் ஆர்.கே.கே.யுடன் காங்கிரஸ் கட்சித் தோழர்கள் பலர் இருந்தனர். அவர்களுள் தூத்துக்குடி எம்.சி.வீரபாகு பிள்ளை குறிப்பிடத்தக்கவர்.

இளம் வயதில் தந்தையை இழக்க நேர்ந்ததால், ஆந்திரத்திலிருந்து இரு சகோதரிகள், இரு சகோதரர்களுடன் தமிழகத்துக்கு வந்தார். அவருடைய சகோதரர்களுள் ஒருவர்தான் கம்யூனிஸ்டு கட்சியின் பிரமுகர்களுள் ஒருவரான ஆர்.கே.பாண்டுரங்கன்.

ஆர்.கே.கே.வை வளர்த்த பெரியப்பாவும் பெரியம்மாவும் காங்கிரஸ்காரர்கள். ஒருமுறை காந்தியடிகள் திருப்பூருக்கு வந்தபோது, பெரியம்மா, தான் அணிந்திருந்த தங்க நகைகளைக் கழற்றி அரிஜன நிதிக்காக காந்தியடிகளிடம் தந்துவிட்டார். இந்த நிகழ்வுகள் எல்லாம்தான் பொதுவுடைமைக் கட்சியில் இணைவதற்குக் காரணம் என்கிறார் ஆர்.கே.கே.

கம்யூனிஸ்டு கட்சியின் "ஞானக்கடல்' என்று போற்றப்பட்ட ஆர்.கே.கே., "ஜனசக்தி' ஆசிரியர் குழுவில் இணைந்து பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி மார்க்சிய சிந்தனைகளைத் தெளிவாக விளக்கி, கட்சித் தோழர்களை கட்சியின் பால் ஈர்த்தார். அத்துடன் விடுதலைப் போரில் கலந்துகொண்ட ஆர்.கே.கே., ஒன்பது மாதம் சிறையிலும் இரண்டு ஆண்டுகள் தலைமறைவாகவும் வாழ்ந்தார்.

ஆர்.கே.கே.யின் தொழிற்சங்கப் பணிக்கு எடுத்துக்காட்டாக இருப்பது திருப்பூர் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டமும் பெற்ற வெற்றியுமாகும்.

தமிழ் எழுத்தையே அறியாதவர் தமிழை ஆர்வத்துடன் மேன்மேலும் படித்து கம்பர், இளங்கோ, வள்ளுவர், பாரதி, பாரதிதாசன் போன்றோர் நூல்களையும், பிற பழந்தமிழ் நூல்களையும் பழுதறக் கற்றறிந்தார்.

வ.விஜயபாஸ்கரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்தது "சரஸ்வதி' இலக்கியத் திங்களிதழ். சரஸ்வதி செப்டம்பர், அக்டோபர் (1955) இதழ்களில் "பாரதியின் தத்துவம்', "குயிலும் தமிழும்' என்னும் தலைப்புகளில் ஆர்.கே.கே. எழுதிய இலக்கியக் கட்டுரைகள் முதன் முதலில் பிரசுரமாயின.

சரஸ்வதி எட்டாவது இதழிலிருந்து "புதுமைப்பித்தன் கதைகள்' பற்றி மூன்று கட்டுரைகள் தொடர்ச்சியாக எழுதினார். பாரதியார், புதுமைப்பித்தன் ஆகியவர்களைத் தொடர்ந்து பாரதிதாசனைப் பற்றி எழுதினார். கம்யூனிஸ்டு கட்சியில் முதன் முதலாகப் பாரதிதாசனைப் பற்றி சிந்தித்தவர், அவரை அடையாளம் கண்டு அவரின் புகழ் பரப்ப முனைந்தவர் ஆர்.கே.கே.தான்!

1960 டிசம்பர் "தாமரை' இதழில் "திறனாய்வு முனை' என்ற தலைப்பில் பாரதிதாசன் கவிதைகளைத் திறனாய்வு செய்து முதல் கட்டுரையை எழுதினார். அடுத்து 1961, பிப்ரவரி, மார்ச் தாமரை இதழ்களில் திறனாய்வுக் கட்டுரைகள் வெளிவந்தன. அந்த மூன்று கட்டுரைகள் மூலம் பாவேந்தரின் சமூகப் பார்வையை, தமிழுணர்வை, கருத்து வீச்சைக் காணமுடிந்தது. பாவேந்தரின் கவிதைகளை ஆர்.கே.கே. பார்த்த பார்வை, திறனாய்வு நோக்குடன் தொகுத்துச் சொன்ன கருத்துகள், இலக்கிய உலகில் பாரதிதாசன் படைப்புகளின்பால் ஒரு புதிய விமர்சனப் பார்வையை அறிமுகப்படுத்தி வைப்பதற்குப் பெரிதும் உதவின. ஆர்.கே.கே.யின் ஆய்வுக் கட்டுரைகளை பாரதிதாசன் பற்றாளர்கள் படித்துப் பாராட்டியதைவிட பாரதிதாசனே படித்துப் பாராட்டினார் என்பதே சிறப்புக்குரியதாகும்.

சீனப் படையெடுப்பின்போது கம்யூனிஸ்டு கட்சித் தோழர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில், ஆர்.கே.கே. தலைமறைவு வாசம் செய்தார். அப்போது அவர் எழுதியதுதான் "புதுநெறி காட்டிய பாரதி' என்ற நூல். அந்நூல் பலரது பாராட்டையும் பெற்றது.

1960-ஆம் ஆண்டில் கலைத்துறையில் ஆர்வமுள்ள சில கம்யூனிஸ்டு தோழர்கள் "குமரி பிலிம்ஸ்' என்ற நிறுவனத்தை நிறுவி, தொழிலாளர்கள் போராட்டத்தை மையமாக வைத்து "பாதை தெரியுது பார்' என்ற திரைப்படத்தைத் தயாரித்தனர். அதற்கான கதை-வசனத்தை ஆர்.கே.கே. எழுதினார். அதற்காக அவ்வாண்டின் "சிறந்த கதை-வசன கர்த்தா' என்னும் அரசின் விருதையும் பெற்றார்.

"புதிய ஜெர்மனி' ஏட்டில் ஆசிரியராக இருந்த காலத்தில்தான் விஜயலட்சுமி என்ற பெண்ணை மணந்தார். பின்னர் 1973 செப்டம்பரில் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்துக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றச் சென்றார்.

மாஸ்கோவில் பணியாற்றியபோது, அங்கு பனிக்கட்டியில் சறுக்கிவிழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அந்தப் பணியிலிருந்து விலகி, ஊன்றுகோல் உதவியுடன் தாயகம் திரும்பினார். தாயகம் வந்து உடல் நலம் தேறியபின் மீண்டும் "ஜனசக்தி' ஆசிரியர் குழுவில் சேர்ந்து பணியாற்றினார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிய ஞானியுமான ஆர்.கே.கே., 1992-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி காலமானார். அவர் மறைவுக்குப் பின் அவருடைய சில நூல்கள் வெளிவந்துள்ளன.

நூல் வடிவம் பெறாமல் இருக்கும் படைப்புகள் விரைவில் வெளிவரவேண்டும் என்பது சில தமிழ் நெஞ்சங்களின் எதிர்பார்ப்பு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com