

சென்ற வாரம், ப.குருநாதன் எழுதியிருந்த "கள் மயக்கம் தெளியுமா?' என்ற கட்டுரை, ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை. அவர்தம் "கள்' மயக்கத்தை இக்கட்டுரை தெளிவிக்கும் என நம்புகிறேன்.
மகாவித்துவான் மே.வீ.வேணுகோபால் பிள்ளை காலத்திற்கு முன்புவரை "கள்' விகுதி சிக்கலுக்கு உரியதாகத் தெரியவில்லை. ஆனால், வேணுகோபால் பிள்ளைதான் இது குறித்து ஓர் ஐயத்தை எழுப்பி, தக்க விடையும் தந்தார்.
வருமொழி இடைச்சொல்லாகவோ, உரிச்சொல்லாகவோ, வடமொழி போன்ற பிறமொழிச் சொல்லாகவோ இருந்தால், அங்கே வலி மிகுவதில்லை என்பது அறிந்த ஒன்று. இந்நிலையில், பன்மை குறித்த "கள்' என்பது இடைச்சொல். ஆதலால் எழுத்துகள், கருத்துகள், வாழ்த்துகள் என்று எழுதுவதே ஏற்புடையதாகும்.
""வன்தொடர் அல்லன முன்மிகா அல்வழி'' என்னும் விதியால், வன்தொடர் குற்றியலுகரத்தின் பின் வருமொழி முதலில் வரும் வல்லினம், அல்வழி வேற்றுமையாகிய இரண்டு இடங்களிலும் மிகும்.
""சுக்குக் கடிது, பதக்குப் பெரிது (எழுவாய்த் தொடர்கள்) என வன்தொடரால் வலி மிக்கதைக் காண்க'' என்பார் மயிலைநாதர்.
""கொக்குப் பறக்கும் புறாப்பறக்கும்
குருவி பறக்கும் குயில்பறக்கும்
நக்குப் பொறுக்கி களும்பறப்பர்
நானே பறப்பன் நராதிபனே!''
(இராம கவிராயர்)
கொக்குப் பறக்கும் என அல்வழியிலும், நக்குப் பொறுக்கிகள் என வேற்றுமையிலும் வலி மிகுவது ஏனெனில், பொருள் புணர்ச்சிக் கருதி அங்கே வலி மிகுந்தனவாம். விகுதிப் புணர்ச்சிக்கு அவ்விதியைப் பயன்படுத்துதல் கூடாது.
"வாழ்த்துக்கள்' என்று தவறாக எழுதுகின்ற பலர், தம்மை அறியாமலேயே "வாழ்த்துகிறோம்' என்று சரியாக எழுதுகின்றனர். காரணம் என்ன? "வாழ்த்துகின்றோம்' என்னும் சொல்லைப் பகுபதங்களாகப் பிரிக்கும்போது, வாழ்த்து+கின்று+ஓம் எனப் பிரிக்கிறோம்.
வாழ்த்து என்பது வன்தொடர் குற்றியலுகரமாயினும், பொருள் புணர்ச்சி விதியின்படி "வாழ்த்துக்கின்றோம்' என எழுதுவதில்லை. காரணம், "கின்று' என்பது இடைச்சொல். எனவே, இப்புணர்ச்சியில் வலி மிகவில்லை.
""இடைஉரி வடசொல்லின் இயல்பிய கொளாதவும்
போலியும் மரூஉம் பொருந்திய வாற்றிற்கு
இயையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறியே''
(நன்னூல்-239)
விதி விலக்கான விதிகள்
8 ஓரெழுத்து ஒருமொழியின் பின் வலி மிகும். ஆ-ஆக் கள்; ஈ-ஈக்கள்; ஊ-ஊக்கள்; ஏ-ஏக்கள்; கா-காக்கள்.
8 ஓரெழுத்து ஒருமொழி அடையெடுத்து அமைந்தாலும் அங்கு வலி மிகும். தேனி-தேனீக்கள்; பூங்கா-பூங்காக்கள். கை-கைகள்; தை-தைகள் என வலி மிகாது இருக்கின்றன. ஏனெனில், கை, தை, பை - "ஐ' கூட்டுயிர். ஆதலால் அங்கே வலி மிகவில்லை.
8 அகர ஈறு: அகர ஈற்றுச் சொற்களின் பின் வலி மிகும். கள-களக்கள்; விள-விளக்கள்.
8 ஆகார ஈறு: ஆகார ஈற்றுச் சொற்களின் பின் வலி மிகும். ஆலா-ஆலாக்கள்; கனா-கனாக்கள்; பலா-பலாக்கள்.
8 உகர ஈறு: உகரத்தை இறுதியாகக்கொண்ட குறிலிணைச் சொற்களின் பின் வலி மிகும். அணு-அணுக்கள்; உடு-உடுக்கள்; கரு-கருக்கள்; தெரு-தெருக்கள்.
8 ஊகார ஈறு: ஊகார ஈற்றுச் சொல்லின் பின் வலி மிகும். கொண்மூ-கொண்மூக்கள்.
"புள்' என்னும் ஒருமைச் சொல்லுக்குப் "புட்கள்' என்பது பன்மையானது போன்று, "நாள்' என்பதன் பன்மையை "நாட்கள்' என்றே பலர் தவறாக எழுதக் காண்கிறோம். நாள்கள் என்பது வேறு; நாட்கள் என்பது வேறு. இரண்டிற்கும் உள்ள பொருள் வேறுபாடு தெரியாமல் பலர் பயன்படுத்துகின்றனர். "நாள்கள்' என்பது, "நாள்' என்பதன் பன்மையைக் குறிக்கும். "நாட்கள்' என்பதோ, அன்று இறக்கிய "கள்' (மது) என்னும் பொருளைத் தரும்.
""நாட்கள் உண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேரீ தல்லே''
(புறநானூறு-123)
""அன்று இறக்கிய கள்ளைக் குடித்துவிட்டு அதனால் ஏற்படும் மகிழ்ச்சியில், தேரைப் பரிசாகக் கொடுத்தல் யார்க்கும் எளிது'' என்பது இவ் அடிகளின் பொருளாகும். பல்லோராலும் தவறாகப் பயன்படுத்தப்படுவது "நாட்கள்' எனும் சொல். நம் முன்னோர்கள் "நாள்கள்' என்றே எங்கும் பயன்படுத்தக் காணலாம்.
""நடத்தல்அரிது ஆகும்நெறி நாள்கள் சிலதாயர்க்கும்''
(கம்ப.சுந்தர காண்டம்-547)
""நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே''
""தோள்கள் இருந்த வாகாணீரே சுரிகுழலீர் வந்துகாணீரே''
(திவ்யப் பிரபந்தம்-பெரியாழ்வார்-211)
""உரையா தார்இல்லை ஒன்றுநின் தன்மையைப்
பரவா தார்இல்லை நாள்களும்''
(சம்பந்தர் தேவாரம்-596)
""நாளைப்போ வேன்என்று நாள்கள்செலத் தரியாது''
""நீந்துவார் நெடுநாள்கள் நிறைவெம்போர்த் துறைவிளைத்தார்''
(பெரியபுராணம்-1067,1296)
""கேழில் விழுப் பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?''
(திருவெம்பாவை-8)
""தமையன்எம் ஐயன் தாள்கள்பாடி''
(திருவாசகம்-207)
மேற்கூறிய இவ்வரலாறுகளின் வழி, நம் முன்னோர்கள் எதை எப்படிச் சொன்னார்களோ, அதை அப்படிக்
கூறுவதே சால்புடையதாகும். பவணந்தி முனிவரும்
இந்நோக்கில்,
""என்பொருள் எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே''
(நன்னூல்-388)
என்று கூறியுள்ளார். மரபின் பெருமையை உணர்ந்து, நமக்கு அதனை உணர்த்தவே தொன்னூலாசிரியர் தொல்காப்பியர் தம் நூலில் மரபு என்னும் சொல்லை 75 இடங்களுக்கு மேற்பட்டுக் கையாண்டிருப்பதைக் காணலாம். மரபுவழி கூறவில்லையெனில் பொருள் வேறுபடும் என்றுணர்ந்து அதற்கென விதி செய்தார்.
""மாற்ற அரும்சிறப்பின் மரபு இயல் கிளப்பின்''
""மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்''
(தொல்.-1500,1591)
எனவே, மரபுவழி நிற்றலே நமக்கு உரிய - உயரிய மாண்பு என்பதை உணர வேண்டும். வாழ்த்துக்கள், கருத்துக்கள், எழுத்துக்கள், நாட்கள், பொருட்கள் என எழுதுவது தவறு. வாழ்த்துகள், எழுத்துகள், கருத்துகள், நாள்கள், பொருள்கள் என எழுதுவதே சரி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.