நனவோடை எழுத்தாளர் "நகுலன்'

நவீன தமிழ் இலக்கிய உலகில் தீவிரத் தேடலுடன் செயல்பட்ட அகவயப் படைப்பாளி டி.கே.துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன். முன்மாதிரி என்று தனக்கு எவருமில்லாத நகுலன், சிலருக்கு முன்மாதிரியாக இருந்தார் என்பது க
நனவோடை எழுத்தாளர் "நகுலன்'
Published on
Updated on
2 min read

நவீன தமிழ் இலக்கிய உலகில் தீவிரத் தேடலுடன் செயல்பட்ட அகவயப் படைப்பாளி டி.கே.துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன். முன்மாதிரி என்று தனக்கு எவருமில்லாத நகுலன், சிலருக்கு முன்மாதிரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொது வாழ்வியல் குறித்த புற உலக மதிப்பீடுகள் பின்பற்றப்படுவதைத் தவிர்த்து, தனக்குத்தானே போட்டுக்கொண்ட தார்மிக வட்டத்துக்குள் வாழ்ந்த மனவெளி கலைஞர் நகுலன். உண்மை உலகைக் காட்டும் குமைவுகளைப் படிமங்களாகக்கொண்டு இலக்கியம் படைத்த நவீன பிரம்மஞானி என்றே நகுலன் கருதப்பட்டார்.

 தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், 1921-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி பிறந்தார். பிறந்தது கும்பகோணம் என்றாலும், தந்தையின் சொந்த ஊர் திருவனந்தபுரம் என்பதால், கடைசிவரை திருவனந்தபுரத்திலேயே வாழ்ந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் "இவானியர் கல்லூரி'யில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். பழந்தமிழ் இலக்கியங்களிலும், ஆங்கில இலக்கியங்களிலும் பரந்த பயிற்சியுடையவராகத் திகழ்ந்தார்.

 நவீன இலக்கியத்துக்குப் பெரிய ஊன்றுகோலாக இருந்த சி.சு.செல்லப்பா நடத்திய "எழுத்து' இதழிலும், க.நா.சு.வின் "இலக்கிய வட்ட'த்திலும் எழுதத் தொடங்கினார். இவர்கள் இருவரும்தான் நகுலனுக்கு நியாயமான அங்கீகாரம் வழங்கியவர்கள் என்றே சொல்லலாம்.

 60-களில் நிழல்கள், நினைவுப்பாதை, நவீனன் டைரி, சில அத்தியாயங்கள், இவர்கள், வாக்குமூலம், மஞ்சள் நிறப் பூனை, ரோகிகள், நாய்கள் ஆகிய நாவல்களும், ஐந்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளும், கட்டுரைகளும் தமிழில் படைத்தார். ஆங்கிலத்திலும் ஆறு கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் பலவற்றைப் படைத்து அவரே வெளியிட்டார்.

 இவருடைய சிறுகதைகள் "இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி' இதழில் பிரசுரமாகியுள்ளன. திருவனந்தபுரம் கவிச் சம்மேளனத்தில் நகுலன் கட்டுரைகள் வாசித்துள்ளார். "நகுலன் நாயர்' என்ற புனைபெயரிலும் இவர் எழுதியதுண்டு. ÷அனைஸ் நின், சிமோன் வெய்ஸ், காஃப்கா, ஜேம்ஸ் ஜாய்ஸ், டி.எஸ்.எலியட் முதலிய ஆங்கிலப் படைப்பாளிகளின் நவீன இலக்கியக் கருத்தாக்கங்களால் கவரப்பட்டு, அவர்களின் பாணியிலான எழுத்தைத் தமிழுக்குக் கொண்டுவர சுயமுனைப்புடன் செயல்பட்டவர் நகுலன்.

 இவர் தொகுத்த "குருúக்ஷத்திரம்' இலக்கியத் தொகுப்பும், "சுப்ரமணிய பாரதியார் கவிதைகள்' ஆங்கில மொழிபெயர்ப்பும் மிகச் சிறப்பானவை. விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர் நகுலன்.

 நனவோடை உத்தியில் எழுதப்பட்ட நாவல்களில் தமிழில் பிரதான வெற்றிபெற்ற "நினைவுப்பாதை' நாவல், விவரிப்பு பாணியில் வித்தியாசமான எழுத்துகளின் மைல்கல்லாக அடையாளம் காணப்பட்ட படைப்பு. அதன் மெய்த்தன்மை நம்மைத் திகைக்க வைக்கும். இன்றைய மனிதனின் உள்முகத்தைப் படம் பிடித்துக் காட்டியிருப்பார் நகுலன்.

 கவிதைகளில் நகுலன் தனிப் பாணியை முன்வைத்தார். பேச்சு மொழியைப் புதுக்கவிதையின் நுட்பமான வெளியீட்டுச் சக்தியாக நிறுவிய முதல் நவீன கவிஞர் இவர் என்றே சொல்லலாம். இவருடைய கவிதையின் சிறப்பு, அதன் எளிமைத் தன்மைதான். நேரடி மொழியில் கவிதையைச் சாத்தியப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல. இந்தப் பாணியிலான கவிதைகளில் நிறையச் சாதித்தவர் நகுலன்.

 ""எனக்கு இரவில் தூக்கம் வருவது குறைவு. மாத்திரை சாப்பிடுவேன். அப்போது எனக்கு வித்தியாசமான கதைகளும், எதார்த்தம் கலந்த உணர்ச்சி நிலைப்பாடுகளும் வெளிப்படும். அதிலிருந்து நான் அறிவை உணரக்கூடிய உண்மைகளை மட்டுமே எடுத்துக்கொள்வேன். மிகை உணர்ச்சிகளும், செண்டிமெண்டுகளும் நிறைந்த தமிழ் நாவல்கள் எனக்குத் தேவையில்லை. நான் படித்த ஆங்கில நாவல்கள் எனக்கு அதைச் சொல்லவில்லை'' - என்று ஒரு பேட்டியில் கூறியுள்ள நகுலன், ஆங்கில பாணி எழுத்துப்போக்கை தமிழில் உருவாக்கக் கடுமையாக இயங்கியவர்.

 நகுலனுக்கு இலக்கியப் படைப்பாக்கம் என்பது ஒரு தவம். மனம்போன போக்கில் செல்லும் தனது இலக்கியப் படைப்பில் அவர் வாழ்ந்த உண்மை உலகுக்கும் படைப்புலகுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது.

 இலக்கியமே வாழ்க்கை; வாழ்க்கையே இலக்கியம் என வாழ்ந்த நகுலன், தன்னைத் தேடி இலக்கியம் பேச வருபவர்களை ரத்த உறவாகப் பாவிக்கும் பண்புள்ளவர். பிறப்பிலிருந்தே தனிமையை ஒரு குணாம்சமாகக் கொண்டிருந்த நகுலன், ""தனியாக இருக்கத் தெரியாத - இயலாத ஒருவ(ன்)னும் ஓர் எழுத்தாளனாக இருக்க முடியாது'' என்று கூறியுள்ளார்.

 தமிழ்ப் புத்தகங்களைத் தருவிப்பது, படிப்பது, நண்பர்கள் வட்டத்தை உருவாக்கிக் காலநேரம் பார்க்காமல் விவாதிப்பது என்ற ஒரு தமிழ் இலக்கிய உலகைப் படைத்து 86 வயது வரை இலக்கியத்துக்கு விசுவாசமாக இருந்தார்.

 அனுபவத்திலிருந்து தொடங்கப்படுவதே தரமான எழுத்தின் அடையாளம் என்பதிலும், அகமும் புறமும் ஒத்திசைந்தும், முரண்பட்டும் இயங்கும் வாழ்வின் போக்கில் எதிர்கொள்ளும் பிரமிப்புகள், கேள்விகள், விசாரங்களே உன்னத இலக்கியத்தின் உள்ளீடுகள் என்பதிலும் நம்பிக்கை உடையவர் நகுலன்.

 இளமையில் திருமணம் தகையாமல் போனதால், இறுதிவரை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார். தாயாருக்குப் பிறகு "புருத்தை' என்ற மலையாள மாதுதான் அவருக்கு உற்ற துணையாக இருந்தார் என்றும் கூறுவர்.

 நகுலன், 2007-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி காலமானார்.

 வெறுமை, மகிழ்ச்சி, தனிமை, ஆசுவாசம், தேடல் என விரியும் வாழ்வின் ரூபத்தை இலக்கிய ரூபமாக்கிய எழுத்து ரசவாதி நகுலன். தான் வாழ்ந்த காலத்தில் பெரும்பான்மை அங்கீகாரம் கிடைக்கப்பெறாத நகுலன் என்ற இலக்கிய ஆளுமையை, வருங்காலத் தமிழ்ப் படைப்பிலக்கிய (நவீன) உலகம் மனதிலேற்றிக் கொண்டாடும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com