பயண இலக்கியவாதி சோமலெ

20-ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டியது பயண இலக்கியமாகும். ""சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'' என்ற பாரதிய
பயண இலக்கியவாதி சோமலெ

20-ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டியது பயண இலக்கியமாகும். ""சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'' என்ற பாரதியின் வாக்குக்கு ஏற்ப நம்நாட்டவர் வணிகம், கல்வி என பலவகைக் காரணங்களுக்காகப் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் சென்றபோதிலும், அங்கு கண்டவற்றை எழுத்தாக்கி இலக்கியமாக்கியவர்கள் வெகு சிலரே.

படிப்போரை ஈர்க்கும் வகையில் பயணக் கட்டுரைகள் மாத, வார இதழ்களில் எழுதப்பட்டாலும், அவற்றை நூல் வடிவமாக்கி காலங்காலமாக தமிழர் தம் பயண அனுபவ அறிவை வெளிப்படுத்தும் வகையில் இலக்கியப் பங்காற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சோமலெ.

அவர் எழுதிய மொத்த நூல்கள் 85. இதில் பயண இலக்கிய நூல்கள் மட்டும் 42. அவற்றில் வெளிநாடுகள் குறித்த 32 நூல்களும், தமிழ்நாட்டின் மாவட்டங்கள் குறித்த 10 நூல்களும் அடங்கும்.

தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெற்குப்பையில் பெரி.சோமசுந்தரம் செட்டியார்-நாச்சம்மை ஆச்சி தம்பதிக்கு 11.2.1921-இல் ஆறாவது குழந்தையாகப் பிறந்தார் சோமலெ. அவருக்கு பெற்றோர் இட்டபெயர் சோம.லெட்சுமணன்.

நகரத்தார் சமூகத்தில் தந்தையாரின் முதல் இரண்டு எழுத்துகளை மகனின் தலைப்பு எழுத்தாக எழுதுவது வழக்கம். அவ்வழக்கப்படி சோமசுந்தரம் என்ற தந்தையார் பெயரில் இரண்டு எழுத்து சேர்த்து சோமலெ என்று அழைக்கப்பட்டார். அப்பெயரெ இலக்கிய உலகில் நிலைத்துவிட்டது.

சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பொருளியல் பட்டம் பெற்று, மும்பையில் உள்ள ஓர் இதழியல் கல்லூரியில் பத்திரிகைத்துறை சான்றிதழ் படிப்பை முடித்தார். குடும்பத்தினர் நடத்திவந்த ஏற்றுமதி - இறக்குமதி தொழிலில் ஈடுபட்டபோதுதான் ஜெர்மனி, பிரிட்டன், சுவீடன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற உலகநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது.

உலகம் சுற்றிய தமிழரான ஏ.கே.செட்டியாரின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்ட சோமலெ, தமது இயற்பெயரிலேயே பயணக் கட்டுரைகளை அவ்வப்போது பத்திரிகைகளில் எழுதிவந்தார்.

வெளிநாடுகளுக்கான பயணத்தின் போது ஏற்படும் அனுபவம், காணும் காட்சிகள், அந்தந்த நாட்டு மக்களின் பழக்கவழக்கம் என அவரது பயண நூல்கள் பரந்த பார்வையுடைய வரலாற்றுப் பெட்டகம்போலவே காணப்படு

கின்றன.

ஆப்பிரிக்க நாடுகளைப் பற்றிய அவரது 12 நூல்கள் பல அரிய தகவல் களஞ்சியமாகவே திகழ்கின்றன. தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம் தொடங்கி, பத்து மாவட்டங்களது அமைப்பு தொடங்கி பல அரிய வரலாற்றுத் தகவல்களுடன் தொகுத்தளித்திருப்பது அவரது எழுத்தின் வன்மைக்குச் சான்றாகின்றன.

பொதுவாக பயண நூலாசிரியர்கள் தங்களது சொந்த ஊர், நாடு ஆகியவற்றைப் பற்றி அதிகம் எழுதுவதில்லை. ஆனால், சோமலெ தமது ஊரைப் பற்றி விவரமாக எழுதியதுடன், அந்த ஊருக்கு அஞ்சல் துறை, வங்கித் துறை, தொலைத்தொடர்பு அலுவலகம் வரவும் அரும்பாடுபட்டவர்.

தமிழில் மட்டுமல்ல, தமது பயண இலக்கிய நூல்களை ஆங்கிலத்திலும் படைத்துள்ளார். ஆங்கிலத்தில் 6 நூல்களை அவர் எழுதி

யுள்ளார்.

பயண இலக்கிய நூல்கள் மட்டுமன்றி இதழியல், நாட்டுப்புறவியல், மொழி ஆராய்ச்சி, அரசியல், தொழில், கட்டுரைகள், சிறுவர் இலக்கியம், சமயம், கோயில் கும்பாபிஷேக மலர்கள் எனப் பலதுறை நூல்களையும் அவர் படைத்திருப்பதே அவரை மிகச் சிறந்த இலக்கியவாதிகள் வரிசையில் வைத்துப் போற்றவைக்கிறது.

தினமணி கதிரில் சாவி ஆசிரியராக இருந்தபோது, அதில் நம் நாட்டின் மாநிலங்களைப் பற்றி சோமலெ எழுதியிருந்த கட்டுரைத் தொகுப்பான "இமயம் முதல் குமரி வரை' எனும் நூலில் அந்தந்த மாநில அமைப்பு, மக்கள் தொகை மட்டுமன்றி அவற்றுக்குரிய தனிச்சிறப்பையும் எடுத்துரைத்திருப்பது அவரது வரலாற்றுப்  பார்வைக்குச் சான்றாகும்.

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் குறித்த "விவசாய முதலமைச்சர்' என்ற நூலும், பண்டிதமணி கதிரேசச் செட்டியார் குறித்த வரலாற்று நூலும் சோமலெயின் சமூகப் பற்றையும், மொழிப்பற்றையும் வெளிக்காட்டுகின்றன. வேதாரண்யத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி குருகுலம் பற்றிய அவரது நூல், தேசப்பற்றை விளக்குவதாக உள்ளது. அந்தக் குருகுல மேம்பாட்டுக்கு அவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை.

அவரது பயண நூல்களும் சரி, வரலாற்று நூல்களும் சரி, ஓரிடத்தில் இருந்து எழுதப்பட்டவை அல்ல. பல ஆண்டுகள் ஓடி உழைத்து, அலைந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கருத்துக் கருவூலங்களாகும்.

அவர், 1955 முதல் 3 ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலராகவும், 1958 முதல் 2 ஆண்டுகள் செட்டிநாடு அண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரித் தாளாளராகவும் இருந்தபோதும் நூல்கள் எழுதத் தவறவில்லை. சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை, மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைகளில் உறுப்பினராகவும் அவர் திகழ்ந்தார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினராக இருந்தபோது, பல்கலைக்கழகத் துணைவேந்தராக தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் இருந்தார். அப்போது  பல்கலைக்கழகம் குறித்த நாளிதழ் விளம்பரத்தில், சர்வகலாசாலை, ரிஜிஸ்ட்ரார் போன்ற வார்த்தைகள் இடம் பெற்றன. இதைக் கண்ட சோமலெ, சர்வகலாசாலை என்பதை பல்கலைக்கழகம் என்றும், ரிஜிஸ்ட்ரார் என்பதை பதிவாளர் என்றும் தமிழில் மாற்றினார்.

தமிழுக்கும், தமிழருக்கும் என் பணி "எழுதிக்கிடப்பதுவே' என வாழ்ந்திருந்த சோமலெ, 1986-ஆம் ஆண்டு காலமானார்.

அவரது நினைவாக அவரது குடும்பத்தார் சார்பில் நெற்குப்பையில் கடந்த ஆண்டு பல லட்சம் செலவில் நூலகம் அமைத்தனர். பின்னர் அதைத் தமிழக அரசுக்குத் தானமாக வழங்கினர். அந்த விழாவில், சோமலெவின் நூல்களை நாட்டுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இப்போது சோமலெவுக்கு 90-வது பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. இந்தத் தருணத்திலாவது அவரது நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கி, அனைவரும் சோமலெவின் பயண இலக்கியத்தைப் படித்துப் பயனுற வழிவகுக்க வேண்டும் என்பதே தமிழ் இலக்கியவாதிகளின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com