இந்த வாரம் கலாரசிகன்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது, நியூசினிமா அருகிலிருந்த ஒரு நடைபாதைப் பழைய புத்தகக் கடையில், அட்டை இல்லாமல் பழுப்பு ஏறிய ஒரு புத்தகத்தைக் காண நேர்ந்தது. நியூசினிமாவில் இரண்டு நண்பர்களுடன்
இந்த வாரம் கலாரசிகன்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது, நியூசினிமா அருகிலிருந்த ஒரு நடைபாதைப் பழைய புத்தகக் கடையில், அட்டை இல்லாமல் பழுப்பு ஏறிய ஒரு புத்தகத்தைக் காண நேர்ந்தது. நியூசினிமாவில் இரண்டு நண்பர்களுடன் "இதயக்கமலம்' திரைப்படத்தைப் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நான், டிக்கெட் வாங்க வைத்திருந்த ஒரு ரூபாயில் அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு, மீனாட்சி அம்மன் கோயிலின் பொற்றாமரைக் குளப் படிக்கட்டில் அமர்ந்து ஒரே மூச்சில் படித்துவிட்டு அதே பழைய புத்தகக் கடையில் 75 பைசாவுக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டு, சினிமாவும் பார்த்த சாகசம் இப்போதும் நினைவில் பசுமையாக இருக்கிறது.

 ÷நான் அப்படி ஆர்வத்துடன் படித்த புத்தகத்தைச் சமீபத்தில் சென்னை புத்தகக் கண்காட்சியில் புதிய பதிப்பாகப் பார்த்தபோது, எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தையில் வடிக்க இயலாது. அந்தப் புத்தகத்தின் பெயர் "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை'. எழுதியவர் "சிலம்புச் செல்வர்' ம.பொ.சிவஞானம். நான் பிறப்பதற்கு முன்பு வெளிவந்த அந்தப் புத்தகத்தின் புதிய பதிப்பை வ.உ.சி. நூலகத்தார் இப்போது வெளிக் கொணர்ந்திருக்கின்றனர்.

 ÷செக்கிழுத்த செம்மலின் பெயரைத் தூத்துக்குடி துறைமுகத்துக்கு மத்திய கப்பல்துறை அமைச்சர் சூட்டியிருக்கும் வேளையில், அந்தப் புத்தகத்தை மீண்டும் ஒரு முறையல்ல, நான்கு தடவைகள் படித்து மகிழ்ந்தேன். படித்தேன் என்று சொன்னால் தவறு. கண்களில் நீர் மல்கப் படித்தேன் என்பதுதான் நிஜம்.

 ÷""சிதம்பரம் பிள்ளையவர்களுடைய அந்திய நாட்கள் வறுமையால் வாடிப்போனதாக நேர்ந்தது தமிழ்நாட்டின் தப்பிதமேயாகும். அடிமைத்தனம் மிகுந்து விலங்கினங்கள் வசிக்கும் காடாந்தகாரமாக இருந்த தமிழ் நாட்டில் கல்லையும் முள்ளையும் களைந்து படாத துன்பங்களைப் பட்டுப் பண்படுத்தி தேசாபிமானம் என்ற விதையை நட்டுப் பயிர்செய்து பாதுகாத்த ஆதி வேளாளனாகிய சிதம்பரம் பிள்ளை துன்பம் நிறைந்த சிறைவாசத்தையும் கழித்து வெளியே வந்தபோது தமிழ்நாடு அவரைத் தக்கபடி வரவேற்று ஆதரிக்கத் தவறிவிட்டது.

 ÷சுப்ரமண்ய பாரதியார் சோறின்றி வாடிக்கொண்டே பாடிக்கொண்டு மறைந்தார். சுப்ரமண்ய சிவா ஊரூராகச் சென்று பிச்சைக்காரனைப்போல் பிழைத்து மாண்டார். தமிழ்நாட்டுத் தியாகிகளுள் தலைவரான சிதம்பரம் பிள்ளை வறுமையில் வாடியும் ஓசையில்லாமல் தமது கடைசி நாட்களைக் கஷ்டங்களிலேயே கழித்து ஒழித்தார்'' என்று அந்தப் புத்தகத்தின் இரண்டாவது பதிப்பு 1946-இல் வெளிவந்தபோது நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தமது அணிந்துரையில் குறிப்பிடுகிறார்.

 ÷""அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவின் அனுமதியுடன் டாக்டர் பட்டாபி சீதாராமய்யா வெளியிட்டுள்ள காங்கிரஸ் வரலாற்றில் செüரிசெüரா சத்தியாக்கிரகம், நாகபுரிக் கொடிப்போர், பர்தோலி வரிகொடா இயக்கம் ஆகிய சிறுசிறு இயக்கங்களைப் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக வரையப்பட்டுள்ளனவே தவிர, சிதம்பரனாரின் சீரிய புரட்சியைப் பற்றி ஒரு வரிகூட, ஏன் ஒரு வார்த்தைகூட இல்லை'' என்பதை "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. பதிவு செய்யும்போது அன்றும் எனக்கு விழியில் நீர்கோத்தது; இன்றும் கோத்தது.

 ÷அது மட்டுமா? சிதம்பரனார் இறந்த செய்திகேட்டு, தூத்துக்குடி தவிர வேறு எங்கும் மக்கள் துக்கம் கொண்டாடவில்லை என்பது எத்தனை கொடுமையான விஷயம்?

 ÷சிதம்பரனார் சிறையிலிருந்து வெளிவந்து 24 ஆண்டுகள் வாழ்ந்தும் அவர் ஏன் முதல் நிலைத் தலைவராக வளையவர முடியவில்லை என்பதை விளக்கியிருக்கிறது இந்தப் புத்தகம்.

 ÷சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையாகி வெளியில் வந்த வ.உ.சி. தமக்கிருந்த கஷ்டத்தைக் குறித்து தம் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதமொன்றில், தனது நிலையைப் பாடலாக வடித்திருக்கிறார். அதைப் படிக்கும்போது நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறது.

 ""வந்தகவி ஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும்

 தந்த சிதம்பரமன் தாழ்ந்தின்று-சந்தமில்வெண்

 பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்

 நாச்சொல்லும் தோலும் நலிந்து''

 ÷சமீபத்தில் மதுரையில் அந்த மாமனிதரின் வாரிசான வ.உ.சி. வாலேஸ்வரனைச் சந்தித்து ஆசிபெற்றதைப் பிறவிப்பேறாக நினைத்து மகிழ்கிறேன். ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் வள்ளுவப் பேராசானின் படத்துடன், வ.உ.சி.யும், மகாகவி பாரதியும் வரவேற்பறையில் இருத்தல் வேண்டும் என்கிற உணர்வு நமக்கு எப்போதுதான் தோன்றப்போகிறதோ தெரியவில்லை.

 *****

 எழுத்தாளர் சாண்டில்யனை ஒரு சரித்திரக் கதைகளை எழுதும் நாவலாசிரியராகத்தான் பலருக்கும் தெரியும். அவரது ஆரம்ப காலம் பத்திரிகையாளராக, அதிலும் குறிப்பாக சினிமா நிருபராகவும் விமர்சகராகவும் தொடங்கியது என்பது பலருக்கும் தெரியாத கதை. ஆறு சமூக நாவல்கள் உள்பட சுமார் 55 நாவல்களைப் படைத்த எஸ்.பாஷ்யம் என்கிற சாண்டில்யனின் பெயரைக்கேட்டுப் பலருக்கும் "கடல்புறா'வும், "யவனராணி'யும்தான் நினைவுக்கு வரும்.

 ÷""ஒரு திரைப்படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து வருடங்கள் மட்டுமே மவுசு இருக்கும். ஆனால், நான் எழுதிய புத்தகங்களுக்கு 500 வருஷங்கள் மக்கள் மத்தியில் மவுசு இருக்கும். அதனால்தான் எழுத்துத்துறையைத் தேர்ந்தெடுத்தேன்'' என்று துணிந்து பேட்டியளித்த சாண்டில்யன், ஆரம்ப காலம் முதலே சினிமா விமர்சகராகப் பல திரைப்படங்களில் பணியாற்றியவர். சினிமாவின் அத்தனை பரிமாணங்களையும் அனுபவ ரீதியாக அறிந்தவர்.

 ÷"பொம்மை' சினிமா இதழில் சாண்டில்யன் தொடராக எழுதிய "சினிமா வளர்ந்த கதை' இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. விஜயா வாஹினி திரைப்பட நிறுவனத்தின் சார்பு நிறுவனமான விஜயா பப்ளிகேஷன்ஸ்தான் அந்தத் தொடரைப் புத்தகமாக்கி தமிழ் சினிமாவுக்கு ஓர் ஆக்கபூர்வமான பதிவைச் செய்திருக்கிறது.

 ÷""தமிழ்நாடு டாக்கீசின் "லவகுசா' திரைப்படத்தில் மொத்தம் 18 பாட்டுகள். சங்கீத டைரக்ஷன் செய்தவருக்கு சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாது. அவர்தான் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர். அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததற்கு, அவரது சகோதரி மகன் "லவகுசா'வுக்குப் பணம் போட்டதுதான் காரணம்.

 ÷இந்தப் படம் 1932-இல் பம்பாய் ரஞ்சித் ஸ்டூடியோவில் படம் பிடிக்கப்பட்டது. அதற்கு மொத்தம் செலவான ரூபாய் 32,000.

 ÷முதலில், "லவகுசா'க்களுக்குத் தாயாக நடிக்க யாரும் கிடைக்கவில்லை. ஆகவே, லட்சுமி என்கிற ஸ்கூல் டீச்சரை அழைத்து வந்து சீதையாக்கினார்கள் தமிழ்நாடு டாக்கீசார். படம் முழுவதும் அந்த டீச்சர் ராமனுடன் நெருங்கி உட்கார மறுத்து, விலகி தூரவே உட்கார்ந்தார். அப்படியும் அந்தப் படம் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் சங்கீதத்துக்கும் பெயருக்குமே ஓடியது''

 ÷இதுபோல பல தகவல்களை சுவாரஸ்யமாக அளிக்கிறது சாண்டில்யனின் "சினிமா வளர்ந்த கதை'. தமிழ் சினிமா ஏன் சர்வதேச அங்கீகாரம் பெறவில்லை என்பதன் காரணத்தைக் கூறித் தனது கட்டுரைத் தொடரை அதாவது, புத்தகத்தை முடித்திருக்கிறார் சாண்டில்யன். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் சொன்ன காரணம் இப்போதும் பொருத்தமாக இருக்கிறதே!

 ÷""மனித நட்சத்திரங்களை விடக் கதைக்கருத்து சிறந்தது என்ற படிப்பினையைத் தமிழ்ப்பட உலகம் ஏற்றால் அதன் பிற்காலம் பொற்காலமாவதற்கு வசதியிருக்கிறதென்று சொல்லி, அதற்கும் ஆண்டவனைப் பிரார்த்தித்து முடித்துக் கொள்கிறேன்''.

 *****

 கவிஞர் சக்தி ஜோதியின் ஓரிரு கவிதைகளைக் கல்கியிலும், யுகமாயினியிலும் படித்த நினைவு. விமர்சனத்துக்கு அவரது கவிதைத் தொகுப்பு வந்திருப்பதைப் பார்த்ததும், இயல்பான ஆர்வத்துடன் புரட்டினேன்.

 ÷"எனக்கான ஆகாயம்' என்கிற இந்தத் தொகுப்பு அவரது மூன்றாவது தொகுப்பு என்பதை "என்னுரை' தெரிவித்தது. விரசத்தின் மூலம் மட்டுமே வாசகர்களை வசீகரிக்க முடியும் என்கிற வக்கிர சிந்தனையில் மாட்டிக் கொள்ளாமல், மென்மையான மனித உணர்வுகளையும், இதயத்தின் ஆழத்திலிருந்து குதித்தெழுந்து விழும் இயல்பான தமிழ் வார்த்தைகளையும் தனது தனிமுத்திரைகளாக்கிக் கவிதை படைத்திருக்கும் இந்தக் கவிதாயினியின் தொகுப்பில், "முடிந்த கதைகள்' என்கிற தலைப்பிலான கவிதைதான் எனது முதல் தேர்வு-

 என் திருமண அழைப்பிதழ்

 யார் வீட்டிலோ

 எதன் ஊடோ ஒளிந்து கிடக்கும்

 நினைவுகளைச் சுமந்தபடி

 அந்த நாட்களின்

 இரவுகளில்

 கண்விழித்து மஞ்சளிட்ட

 அம்மாவை

 அவள் விரல்களில் கசிந்த

 அன்பு படிந்திருந்த அழைப்பிதழை

 பத்திரப்படுத்தத் தவறிவிட்டேன்

 அதை

 ஒவ்வொரு அழைப்பிதழிலும்

 தேடியபடி இருக்கின்றேன்

 அந்தக் காலம்

 மஞ்சளாய் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com