சங்க இலக்கியங்களில் வருணனைகள்

ஓரு படைப்பாளன், தன் சிந்தனையில் தோன்றும் காட்சிகளைப் படிப்பவர்களின் மனக்கண் முன்பே கொண்டுவரும் உத்திதான் வருணனை முறை. கற்பனையும் வருணனையும் இல்லாத எந்தவொரு படைப்பும் சிறந்த இலக்கியமாகாது. அந்த வகையில்
சங்க இலக்கியங்களில் வருணனைகள்

ஓரு படைப்பாளன், தன் சிந்தனையில் தோன்றும் காட்சிகளைப் படிப்பவர்களின் மனக்கண் முன்பே கொண்டுவரும் உத்திதான் வருணனை முறை. கற்பனையும் வருணனையும் இல்லாத எந்தவொரு படைப்பும் சிறந்த இலக்கியமாகாது. அந்த வகையில், சங்க இலக்கியங்களில் இவ்வருணனைகள் பொக்கிஷமாகக் கொட்டிக்கிடக்கின்றன. அவை வைரமாய் நம் கண்முன்னே மின்னிக் கொண்டிருக்கின்றன. இவ்வருணனையை, ஆள் வருணனை, இயற்கை வருணனை என்றும் இடம், காலம், நிகழ்ச்சி, கலை முதலிய பெயர்களிலும் வகைப்படுத்துவர்.

பாலைக்கலியில் உள்ள ஒரு பாடல், தலைவன் கூற்றின் மூலம் பாலை நிலத்தின் வெம்மை அழகாக வருணனை செய்யப்பட்டுள்ளது.

""அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையாற்

கடியவே கனங்குழா அய் காடென்றார் அக்காட்டுள்

துடியடிக் கயந்தலைக் கலக்கிய சின்னீரைப்

பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே''

(கலி.11:6-9)

"காடுகள் நெருப்புப் போன்ற வெம்மையாலே அடியெடுத்து நடக்க முடியாதபடி கடுமையாக இருக்குமென்று தலைவர் கூறினார். அத்தகைய காட்டில் இருக்கும் யானையானது, தன் குட்டிகள் கலக்கிய சிறிய நீரைக் கூட தன் பெண் யானை உண்ட பிறகுதான் தான் உண்ணும் என்று சொன்னாரே' என்று கூறப்படுகிறது. இந்தப் பாலை வருணனையில் வாழ்வியல் நெறியாகிய அன்பின் ஊற்றம் அற்புதமாக வெளிப்படுகிறது.

புறநானூற்றிலும், வாழ்வியல் வருணனைகள் ஆங்காங்கே செறிவாகச் சொல்லப்படுகின்றன. எடுக்காட்டாக, சிறு குழந்தையை வருணிக்கையில், எப்பேர்ப்பட்ட செல்வர்க்கும் குழந்தைச் செல்வம் இல்லையெனில், தம் வாழ்நாளில் புண்ணியப் பயனாக விட்டுச்செல்லக் கூடிய உயிர் நிலையில்லை என்பதை,

""படைப்புப் பலபடைத்துப் பலரோடுண்ணும்

உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்

குறுகுறு நடந்து சிறுகை நீட்டி

இட்டுந் தொட்டுங் கவ்வியும் துழந்தும்

நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்

மயக்குறு மக்களை யில்லோர்க்குப்

பயக்குறை யில்லாத் தாம்வாழும் நாளே'' (188)

குழந்தையின் நடையழகையும், தொட்டும் இட்டும் தவழ்ந்தும் விளையாடும் மகிழ்ச்சியையும் நெய்பிசைந்த சோற்றினை தம் மேலெல்லாம் பூசிக்கொண்டு அது செய்யும் குறும்பினையும் நம் கண்முன்னே ஓவியமாகத் தீட்டுகிறது இப்பாடல்.

பத்துப்பாட்டில் வரும் ஆற்றுப்படைகளில் தமிழ்நாட்டின் இயற்கை அமைப்புகள் நன்கு வருணிக்கப்படுகின்றன. பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை அல்லது மலைபடுகடாம் ஆகியவற்றுள் கூறப்படும் யாழ் வருணனைகள் மிகச்சிறப்பாகப் போற்றப்பட வேண்டிய கலை நுட்பச் செய்திகளாகும்.

பொருநராற்றுப்படையில் வரும் அழகிய பாடினியின் கையில் உள்ள இனிய பாலையாழ் பற்றிய வருணனை இயற்கையோடு இயைந்தது.

""குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல்

விளக்கழ லுருவின் விசியுறு பச்சை

எய்யா இளஞ்சூற் செய்யோ ளவ்வயிற்று

ஐதுமயி ரொழுகிய பொதியுறு போர்வை...''

(பொருந-420)

"பாலையாழ்' ஆனது மானின் குளம்பு அழுத்திய இடம்போல இருபுறங்களும் தாழ்ந்து நடுவுயர்ந்த பந்தலை உடையது. இளஞ்சூல் கொண்ட சிவப்பான பெண்ணின் வயிற்றிலுள்ள மென்மையான மயிரொழுங்குபோல, இருபுறமும் சேர்த்துக் கட்டப்பட்ட தோற்போர்வையை உடையது. வளையில் வாழும் நண்டின் கண் போன்ற துளைகளின் வாயை மறைத்தற்குரிய ஆணிகளை உடையது. எட்டாம் நாள் திங்களின் வடிவுகொண்ட வறிய வாயை உடையது. அந்த யாழின் கரிய தண்டு, தலையெடுத்த (படம் எடுத்த) பாம்பைப் போன்றது. அதில் ஒன்றோடொன்று இறுகக் கட்டப்பட்டு அமைந்த வார்க்கட்டுகள் கருநிறப் பெண்ணின் முன்கையில் அணியப்பட்ட தொடிகளை ஒக்கும். அழகிய குத்தலரிசியையொத்த விரலசைக்கும் குற்றம் நீங்கிய நரம்புகளை உடைய அவ்யாழ், அழகிலே மணமகளை ஒக்கும்' இவ்வாறு பாலையாழ் வருணனையில் பல நுட்பமான உவமைகள் கையாளப்பட்டுள்ளன.

இதேபோன்று சங்கப் பாடல்களில் வருணனை முறையானது நம் நாட்டின் பண்பாடு, கலாசாரம், ஒழுக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறந்த வழிமுறையாகும். வருணனைத் திறம் கொண்ட கணக்கிலடங்கா பாடல்கள் நம் சங்க இலக்கியங்களில் உள்ளன. அவை நம் தமிழர்தம் வாழ்வியல் உண்மைகளை உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com