Enable Javscript for better performance
இலக்கிய வேந்தர் எஸ்.ஆர்.கே.- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  இலக்கிய வேந்தர் எஸ்.ஆர்.கே.

  By கிருங்கை சேதுபதி  |   Published On : 20th March 2011 12:07 AM  |   Last Updated : 20th September 2012 03:12 AM  |  அ+அ அ-  |  

  tmsrk

  பொதுவுடைமை நெறிநின்று கம்பனைப் புதுவிதமாக அணுகிய இருபெரும் இலக்கிய மேதைகள் தோழர் ஜீவாவும் எஸ்.ஆர்.கே.யும். காந்தியத்தையும் மார்க்சியத்தையும் இரு கண்களாய்க்கொண்டு எண்ணம், எழுத்து, பேச்சு என எல்லா நிலைகளிலும் தன்னை நிறுத்திக்கொண்டு சமுதாயப் பிணிகளுக்கு மாற்றுத்தேடிப் போராடிய இலக்கிய வேந்தர் எஸ்.ஆர்.கே. என்னும் எஸ்.இராமகிருஷ்ணன்.

   தமிழும் ஆங்கிலமும் தாய்மொழிகள் எனப் பிரவகிக்கும் இவரது உரையால், நாட்டரசன்கோட்டையில் பள்ளிப்படைகொண்ட பாட்டரசன் கம்பன் எழுந்துவந்து மில்டனோடு கைகுலுக்கிக் கொண்டது வரலாறு. கால காலத்திற்கும் இந்த உறவு நிலைகொள்ள இவர் முனைந்து எழுதி வழங்கிய ஒப்பீட்டு ஆய்வுக்கு மதுரைப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது. பி.எச்.டி. பட்டத்தை, "செம்புலமை மெய்க்கீர்த்தி' எனத் தமிழில் சுட்டி, கம்பனடிப்பொடி, எஸ்.ஆர்.கே.யை வாழ்த்தி ஒரு வெண்பா பாடினார்.

   பாரதி மரபில் கம்பனோடு வள்ளுவனையும் இளங்கோவடிகளையும் தமது ஆய்வுத்தமிழால் அழகாகப் பதிவுசெய்தார் எஸ்.ஆர்.கே. கூடவே, பல படைப்புகளை மூல நூல்கள் எனக் கொள்ளும் வகையில் தமிழில் திறம்பட மொழிபெயர்ப்புச் செய்தவர்.÷ விடுதலைப்போரில் ஈடுபட்டு மும்முறை சிறைவாசம் ஏற்றவர்: பொதுவுடைமை நெறிதாங்கிப் போராடிய காலத்தில் நான்காண்டுகளுக்கு மேல் தலைமறைவு வாழ்க்கை நடத்தியவர். வீரம் செறிந்த இவரின் வரலாறு, இந்தியத் தமிழ் இலக்கியப் பொதுமை வரலாறு.

   நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகே உள்ள கி(ள்)ளிமங்கலம் என்ற சிற்றூரில் வி.கே.சுந்தரம் - மங்களம் தம்பதியருக்கு 1921-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி மகவாகத் தோன்றியவர் எஸ்.ஆர்.கே. ஆரம்பக் கல்வியை மாயவரத்தில் பெற்ற இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். இந்திய விடுதலை முழக்கம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்த அக்காலத்தில் தமது தோழர் கே.பாலதண்டாயுதத்துடன் விடுதலைப் போராட்டத்தில் களம் இறங்கினார் எஸ்.ஆர்.கே.÷1936-களில் காங்கிரஸ் பிரசாரக் கூட்டங்களில் விடுதலை முழக்கிய இவர், மார்க்சியத் தத்துவத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 1940-41-இல் காசி பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மாணவராகச் சேர்ந்தார். அங்கும் மாணவர் இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டு இயங்கினார். கனல் கக்கும் மொழியில் இந்திய விடுதலை உணர்வை எடுத்துமொழிந்த அவரை உத்தரப்பிரதேச அரசு கைது செய்து காசிச்சிறையில் தள்ளியது. பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றம் பெற்றார். விடுதலைபெற்றும் சில காலம் வீட்டுக்காவலில் வைக்கப் பெற்றார்.

   பின்னர், சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாணவர் சம்மேளனத்தின் தென்மண்டல மாநாட்டில், பங்கேற்ற எஸ்.ஆர்.கே., சம்மேளனத்தின் செயலாளரானார். 1942-இல் திருச்சி தேசியக் கல்லூரியில் பயின்ற எஸ்.ஆர்.கே., ஆகஸ்ட் போராட்டத்தில் தீவிரமாக இயங்கினார். பிறகு, படிப்பை உதறிவிட்டு, மாணவர் இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் 1943 ஜனவரியில் சென்னை சென்றார். ஜனசக்தியில் "தேசபக்தன்', "டைரி', "ஈட்டிமுனை' ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதினார்.

   தந்தையார் மறைந்த பின்னர் தம் பங்காக வந்த சொத்தை விற்று, முழுவதையும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கே அளித்த எஸ்.ஆர்.கே., அக்கட்சியின் சாதாரண முழுநேர ஊழியனாக, ஒரு சிறு தொகையைப் பெற்றார். அவருடன் இணைந்து களப்பணி ஆற்றிய டாக்டர் கமலா என்பவரைக் காதலித்து, 1944-இல் கரம் பற்றினார். மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானார்.

   கட்சியில் முழுநேரப் பணியாற்ற முடியாத நிலையில், 1953-இல் மதுரைக்குக் குடிபெயர்ந்த எஸ்.ஆர்.கே., 1953-இல் பேராசிரியர் சங்கரநாராயணனுடன் இணைந்து தனிப்பயிற்சிக் கல்லூரியில் பணியைத் தொடர்ந்தார். முற்றுப்பெறாது நின்ற தம் பட்டப்படிப்பை முடிக்கும் நோக்கோடு, வடநாட்டில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், நேபாளப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றார். பின்னர், தமது "கம்பனும் மில்டனும்' ஒப்பீட்டு ஆய்வுக்காக மதுரைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

   தாம் பெற்ற அறிவைத் தம்மைச் சார்ந்தவர்களும் பெறுதற்குரிய வழியாகத் தனிப்பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியப்பணி மேற்கொண்டார். சிறந்த பொழிவாளராகவும், சீரிய பத்திரிகையாளராகவும், இனிய மொழிபெயர்ப்பாளராகவும் திகழ்ந்த எஸ்.ஆர்.கே.யைப் பெருமைமிக்க பேராசிரியராக உயர்த்தி மதுரை பேறு பெற்றது.

   தந்தை நிகர்த்த தோழராகவும் தாயினும் மிக்க அன்புடையவராகவும் மனிதநேய மேருவாகவும் இவர் விளங்கிய பெற்றியை அவர் காலத்து அறிஞர் உலகம் அனுபவித்து உணர்ந்தது; உயர்ந்தது. வடமொழியோடு, தமிழில் சங்க இலக்கியம் தொடங்கி, சமகால இலக்கியம் வரை ஆழ அறிந்திருந்த எஸ்.ஆர்.கே., ஜீவாவின் தோழர்; ஜெயகாந்தனின் ஆசான்; எத்தனையோ இலக்கியவாதிகளுக்கு இனிய வழிகாட்டி.

   உலக சமாதான இயக்கத்துக்குத் தம்மை முழுமையாய் ஒப்புக்கொடுத்த எஸ்.ஆர்.கே., ஐப்சோவின் தமிழ் மாநிலத் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். உலக சமாதான இயக்கத்தின் சார்பில், 1982-இல் பாரதி நூற்றாண்டுவிழாவை உலகமெங்கும் கொண்டாடப் பெருமுயற்சி மேற்கொண்டார். புதுதில்லியில், 64 நாடுகள் பங்குகொண்ட சர்வதேச பாரதி நூற்றாண்டுவிழாவை சிறப்புற நடத்தினார். அதனை ஒட்டி அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல்தான், Bharati: Patriot poet Prophet அதுசமயம், சோவியத் யூனியன், பின்லாந்து, பிரான்ஸ், செக்கோஸ்லாவாகியா, ஹங்கேரி நாடுகளுக்கெல்லாம் சென்று பாரதியின் புகழைப் பரப்பினார். பிராக், கோபன்ஹேகன் நகரங்களில் நடந்த சர்வதேச சமாதான மாநாடுகளில் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.

   இவர்தம் நூல்கள், வள்ளுவன் கண்ட வாழ்வியல், திருக்குறள் - ஒரு சமுதாயப் பார்வை, திருக்குறள் ஆய்வுரை, இளங்கோவடிகளின் பாத்திரப்படைப்பு, கம்பனும் மில்டனும், கம்பனும் ஷேக்ஸ்பியரும் என்று அற்புத நூல்களை ஆக்கித்தந்தார். The Epic Muse: The Ramayana And Paradise Lost  என்ற ஆங்கில நூலையும் படைத்தளித்தார். சீதை குறித்து, "கற்பின் கனலி' என்றும், வாலி குறித்து, "சிறியன சிந்தியாதான்' என்றும், கம்பன் கண்ட அரசியல், கம்பசூத்திரம் ஆகிய நூல்களையும் ஆய்வுலகுக்கு வழங்கினார். ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றையும், மார்க்சியப் பொருளாதாரப் பார்வையும் இவர் அளித்த தமிழ்க் கொடைகள். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் தலைவர் ரஜினி பாமி தத் எழுதிய India Today  என்னும் ஆங்கில நூலைத் தமிழில் "இன்றைய இந்தியா' என்று வழங்கினார். ரஷ்ய எழுத்தாளர் ஆஸ்திரோவ்ஸ்கி இருபாகங்களாக எழுதிய How the Steel was Tempered   என்ற நாவலைத் தமிழில் "வீரம் விளைந்தது' என்ற தலைப்பில் தந்தார். "பள்ளித்தோழன்' என்பது இவர்தம் இன்னொரு மொழிபெயர்ப்பு நூல்.

   வடக்கும் தெற்கும் அரசியல் நோக்கில் பகைமை வளர்க்கும் எதிர்முனைகளாகக் கருதப்பட்ட காலத்தில், சமயவாழ்வில் வடக்கும் தெற்கும், இந்தியப் பண்பாடும் தமிழரும் என்று இருபெரும் நூல்களை எஸ்.ஆர்.கே. எழுதினார்.

   1983-இல் பார்க்கின்சன் என்னும் நோய் அவரைத் தாக்கியபோதிலும், கணினியின் துணைகொண்டு ஆள்காட்டி விரலால் தட்டித் தட்டித் தம்படைப்புகளைத் தமிழுலகுக்குத் தந்தார். தனக்கு வந்த நோயின் கூறு பற்றியும் அதற்கான சிகிச்சை குறித்தும், அமெரிக்கப் பயணத்தின்போது அங்குள்ள நூல்களைப் படித்துப் புரிந்துகொண்ட அவர், மருத்துவரான தம் துணைவியாரோடு இணைந்து "உங்கள் உடம்பு', "நமது உடல்' ஆகிய உடலியல் தொடர்பான அறிவியல் நூல்களையும் படைத்தளித்திருக்கிறார். பாரதிதாசனைப் பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாமலேயே, 1995-ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

   பயணப்படி பெறாமல் சொல்மாலை சூட்ட, நாட்டரசன்கோட்டைக்கு வரும்போதெல்லாம், கம்பநாடனுக்குக் காணிக்கையாக மதுரையிலிருந்து மணமிக்க ரோஜா மலர்மாலை கொண்டுவந்து அணிவிக்கும் எஸ்.ஆர்.கே.யின் நினைவு கம்பநேயர்களுக்குள் எப்படி எழாமல்

   இருக்கும்? இன்று நாட்டரசன்கோட்டையில் கம்பன் விழா.


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp