"இலக்கிய மலர்' புரசு பாலகிருஷ்ணன்

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதும் எழுத்தாளர்கள் சிலர் உண்டு. லா.ச.ரா. தொடக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதினார். பின்னர் முழுவதுமாகத் தமிழுக்கு மாறினார். ஆர்.சூடாமணி தம் ஆங்கிலப் படைப்புகளை சூடாம
"இலக்கிய மலர்' புரசு பாலகிருஷ்ணன்

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதும் எழுத்தாளர்கள் சிலர் உண்டு. லா.ச.ரா. தொடக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதினார். பின்னர் முழுவதுமாகத் தமிழுக்கு மாறினார். ஆர்.சூடாமணி தம் ஆங்கிலப் படைப்புகளை சூடாமணி ராகவன் என்ற பெயரில் எழுதிவந்தார். இல்லஸ்டிரேடட் வீக்லி போன்ற பிரபல பத்திரிகைகள் அவரது ஆங்கிலச் சிறுகதைகளை நிறைய வெளியிட்டு வந்தன. அவரது சகோதரியும் தமிழின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவருமான காலஞ்சென்ற ருக்மிணி பார்த்தசாரதியும் ஆங்கிலத்தில் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார்.

கடந்த கால எழுத்தாளர்களுள் கம்பராமாயணம் குறித்து ஆங்கில நூல் எழுதிய முன்னோடி எழுத்தாளர் வ.வே.சு. ஐயரிலேயே தொடங்குகிறது ஆங்கிலத்திலும் எழுதும் மரபு. கே.எஸ். வெங்கடரமணி, க.நா.சு., ஆதவன் என இன்னும் சிலர் ஆங்கிலத்திலும் தம் படைப்பாற்றலை வெளிப்படுத்தியவர்கள்.

ஆங்கிலத்திலும் எழுதிப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க இன்னொருவர், குழந்தை நல மருத்துவரான அமரர் புரசு பாலகிருஷ்ணன். 1914-ஆம் ஆண்டு ஆகஸ்டு 5-ஆம் தேதி பிறந்தார்.

குழந்தையின் கர்ப்ப வளர்ச்சிக் காலத்தை நிர்ணயிக்கும் முறைகள் என்ற கருத்தோட்டத்தில் அமைந்த புகழ்பெற்ற ஆங்கில நூலின் ஆசிரியர். நாற்பதுக்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வேடுகளைப் படைத்தவர் என்பது மட்டுமல்ல, ராஜாஜியின் "ஸ்வராஜ்யா' இதழில் மருத்துவக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிய பெருமையும் அவருக்குண்டு.

மருத்துவ நூல்களோடு படைப்பிலக்கிய நூல்களையும் அவர் படைத்தார். வடமொழிப் புலமையும் இருந்ததால், காளிதாசர் குறித்து ஆங்கில நூல் எழுதினார். இவைதவிர, அவர் படைத்த ஆங்கில இலக்கிய நூல் வரிசையில் வள்ளலார், ஆன்டன் செகாவ், மில்டன், கீட்ஸ், ஷேக்ஸ்பியர், பீத்தோவன் போன்றோர் குறித்த படைப்புகளும் உண்டு. பகவத் கீதையையும் நியூக்ளியர் விஞ்ஞானத்தையும் ஒப்பிட்டு ஓர் ஆங்கில நூல் எழுதியுள்ளார். தம் ஆங்கிலப் புலமை காரணமாக பல்வேறு மாநாடுகளுக்கு அழைக்கப்பட்டு அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளுக்குச் சென்று வந்தார். தேவையற்ற ஆங்கில மொழி வெறுப்பும், நியாயமற்ற சம்ஸ்கிருத மொழி வெறுப்பும் இல்லாத காலத்தில் உருவான விளைச்சல் அவர். அளவற்ற தமிழ்ப்பற்றுக் கொண்டிருந்தவர். வள்ளலாரின் தத்துவங்களில் தோய்ந்தவர். "ஞானக்கவி ராமலிங்கர்' என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூல் புகழ்பெற்றது.

காதல் கடிதம், இரு நெருப்புகள், சிவநேசனின் சபதம், பொன்வளையல், கல்யாணம் நடந்தது ஆகிய சிறுகதைத் தொகுதிகள், கிருஷ்ண குமாரி என்ற நாடகம், மல்லிகையும் சம்பங்கியும், காவேரிக் கரையிலே ஆகிய நாவல்கள் என நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியவர். "மனித மனதின் மர்மங்களைப் பதிவு செய்தவர்' என்று வல்லிக்கண்ணனால் பாராட்டப்பட்டவர். உளவியல் விந்தைகளைப் பேசிய வகையில், புரசு பாலகிருஷ்ணனின் படைப்புகள் அவருக்கென்றே உரிய தனித்துவத்தோடு திகழ்பவை.

மணிக்கொடி கால எழுத்தாளர். "சிந்தனைகள்' என்ற தலைப்பில் மணிக்கொடியில் இவர் எழுதிய வசன கவிதைகள் பலரது கவனத்தை ஈர்த்தன. "பெண்ணா? தெய்வமா?' என்ற இவரது ஓரங்க நாடகம் மணிக்கொடியில்தான் தொடராக வந்தது.

ஆனந்த விகடன் இவரது "பொன்வளையல்' என்ற சிறுகதைக்கு, 1937-ஆம் ஆண்டு, பாரதியார் தங்கப் பதக்க விருது கொடுத்து கௌரவித்தது. விருதளிப்பு விழாவுக்கு மூதறிஞர் ராஜாஜி அழைக்கப்பட்டிருந்தார். ராஜாஜி பேசும்போது, ""லட்சத்தில் ஒருவரால்தான் இதுபோன்ற நல்ல கதையை எழுத முடியும்'' என்று பாராட்டினார். அந்தப் பாராட்டுக்குப் பிறகு பலரது கவனம் புரசு பாலகிருஷ்ணனின் எழுத்துகள்பால் திரும்பியது.

சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் இவரது ஆங்கிலப் படைப்புகளுக்கு இருமுறை பரிசு கொடுத்தது. "தீபம்' இலக்கிய இதழ் நடத்திய போட்டியில் பரிசு பெற்றவர். இவர் பெற்ற பரிசுகள் அனைத்துமே இவரது சிறுகதைகளுக்காகப் பெற்றவைதான். "நேஷனல் புக் டிரஸ்ட்' தொகுப்பில் இவரது கதைகள் இடம்பெற்றுள்ளன. இவர் படைப்புகளில் ஆய்வு செய்து பலர் பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார்கள். இவரது படைப்புகள் இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவரும், உலக அளவில் லண்டனில் நடைபெற்ற ஷேக்ஸ்பியர் மாநாட்டுக்கு ஆசியாவிலிருந்து அழைக்கப்பட்ட ஒரே இந்தியருமான எழுத்தாளர் பிரேமா நந்தகுமாரின் தந்தையுமான கே.ஆர். ஸ்ரீனிவாச ஐயங்கார் இவரது நெருங்கிய நண்பர். இவரது பொன்வளையல் சிறுகதைத் தொகுதி, கே.ஆர். ஸ்ரீனிவாச ஐயங்காரால் பெரிதும் பாராட்டப்பட்டது.

இவரது குடும்பமே புகழ்பெற்ற அறிவாளிகளையும் கலைஞர்களையும் கொண்ட குடும்பம். புரசு பாலகிருஷ்ணனின் தாயார் சீதாலட்சுமி, இப்சன் எழுதிய "எ டாய்ஸ் ஹவுஸ்' (பொம்மை வீடு) என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர். தந்தை சந்திரசேகர சுப்பிரமணியம், வயலின் இசைக் கலைஞர். இசைத்துறை தொடர்பாக நூல்கள் எழுதியவரும் கூட. எழுத்தாளரான காலஞ்சென்ற ராவ்பகதூர் துரைசாமி ஐயர், புரசு பாலகிருஷ்ணனின் மாமனார். வீணைக் கலைஞராக விளங்கி, ஓராண்டுக்கு முன் மறைந்த திருமதி வித்யாசங்கர் புரசு பாலகிருஷ்ணனின் சகோதரி. இவரது மாமா சர்.சி.வி.ராமனும், சகோதரர் எஸ். சந்திரசேகரனும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்.

புரசு என்பது இவர் சொந்த ஊர். இன்னும் சரியாகச் சொன்னால், புரசக்குடியின் அருகே உள்ள மாங்குடிதான் இவரது சொந்த கிராமம். (தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம்பேட்டை அருகே உள்ள மாங்குடி கிராமத்தைப் பற்றி தமிழ்த் தாத்தா உ.வே.சா. தம் நினைவு மஞ்சரி நூலில் "மல்லரை வென்ற மாங்குடியார்' என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.) புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குழந்தை மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய புரசு பாலகிருஷ்ணனுக்கு இன்னொரு மருத்துவ எழுத்தாளர் மீது மிகுந்த மதிப்பிருந்தது. அவர் தான் எழுத்தாளர் லட்சுமி.

தம் கடைசிக் காலங்களில் மனைவி சியாமளாவோடும் இரு பெண்களோடும் பெங்களூரில் வாழ்ந்து வந்தவரும் ஒல்லியான உடல்வாகு உடையவரும் அன்பே வடிவானவரும் அதிரப் பேசாத பண்பாளருமான புரசு பாலகிருஷ்ணன், தம் 85-ஆம் வயதில் காலமானார்.

அவரது வாசகர்கள் மனத்திலும் நண்பர்கள் மனத்திலும் அவரது இலக்கிய நினைவுகள் மகிழம்பூவைப்போல் நிரந்தரமாய் "கமகம'வென மணம் வீசிக்கொண்டிருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com