
ஊடுதல் காமத்திற்கின்பம்'' என்றார் வள்ளுவர். ஆனால் அந்த ஊடலே உயிரைப் பறிக்கும் ஆயுதமாக மாறியது விந்தையாக இருக்கிறது அல்லவா?
சிலப்பதிகாரம் என்ற காப்பியம் உருவானதற்கு எவ்வளவோ காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஊடல்தான் முதன்மையாக இருந்திருக்கிறது என்று ஆழ்ந்து நோக்குங்கால் தெளிவாகும்!
முதலில் மாதவி ஊடல் கொண்டாள். விளைவு என்னவாயிற்று? கோவலனும், கண்ணகியும் வாழ்வாதாரம் வேண்டி மதுரை வீதிகளில் அலைய வேண்டியதாயிற்று!
கோவலன் திருடனாக்கப்பட்டான்! அதேவேளையில் மதுரை அரண்மனையில் அரசி கோப்பெருந்தேவி அரசனிடம் ஊடல் கொண்டாள்! அதன் விளைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேறின.
கோவலன் வெட்டுப்பட்டான்; கண்ணகி சூரியனை சாட்சிக்கு அழைத்தாள்; இராஜசபையில் பாண்டியன் ஒரு கேள்வி கேட்டான்; சிலிர்த்த கண்ணகி ஒரு தேர்ந்த வழக்கறிஞர் ஆனாள்; பாண்டியன் குற்ற உணர்ச்சியால் இறந்தான்; பாண்டியனின் மனைவி கோப்பெருந்தேவியும் இறந்தாள்; மதுரை தீக்கிரையானது; வடக்கு தேசத்து ராஜாக்களான கனக, விசயரைக் கல் சுமக்க வைத்தது; தமிழக, கேரள எல்லையில் கண்ணகிக்குச் சிலை எழுப்பியது; சிலப்பதிகாரம் என்ற காப்பியம் எழுந்தது.
ஆக, சாதாரணமாக ஒரு பெண்ணின் ஊடலால் ஏற்பட்ட எதிர்வினைகள் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருந்துவிட்டது! ஊடல் வீட்டில் ஏற்பட்டாலும், அது நாட்டிலும் எதிர் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது! இதிலிருந்து, ஒரு பெண்ணின் கண்ணீர் மட்டும் ஆயுதம் அல்ல, அவள் ஊடலும் ஆயுதம்தான் என்பதை ஆண்களே புரிந்துகொள்ளுங்கள்! ஊடல் சிறிது நாள்களாக மட்டும் இருக்கட்டும். மாதக்கணக்கில் ஊடல் கொண்டால் அது மிக நீண்ட பிரிவை ஏற்படுத்திவிடும். இனிமேலாவது அளவோடு ஊடல் கொள்ளப் பழகுங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.