

பெரிய நாவலாசிரியர்கள் உண்மையிலேயே தத்துவ வல்லுநர்கள்தாம். தத்துவ ஞானத்தை ஒரு தொழிலாகக் கொண்டுள்ள தத்துவ பண்டிதரைக் காட்டிலும் நாவலாசிரியர்கள் மேலானவர். வாழ்வின் முழு வடிவத்தைத் தங்களுடைய கதாபாத்திரங்களின் மூலம் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். தத்துவம் சாதிக்கத் தவறியதை நாவலாசிரியர்கள் நிறைவேற்றுகின்றனர்'' என நாவலாசிரியர்களின் மேன்மையைக் கூறியவர் கே.ஆர்.வி. எனப்படும் கே.ஆர்.வாசுதேவன்.
1922-ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் தேதி எம்.ஏ.ராஜகோபால ஐயங்கார்-பட்டம்மாள் இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்திலுள்ள பாபநாசம்; பிறந்தது மாயவரம். கே.ஆர்.வி.க்கு ஒரு சகோதரரும், இரண்டு சகோதரிகளும் உண்டு.
1957}62 வரை கொளத்துôரில் வசித்ததால் கே.(கொளத்தூர்) ஆர்.வி. என்றே அழைக்கப்பட்டார். பாபநாசத்தில் பள்ளிக்கல்வி பயின்று, திருச்சி தேசியக் கல்லூரியில் உயர்கல்வி படித்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
1943-இல் எம்.ஏ., பட்டம் பெற்ற பிறகு மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு பதவி உயர்வுபெற்று தில்லிக்கு மாற்றலானார். ஆனால், தஞ்சை மாவட்ட காங்கிரஸில் கே.ஆர்.வி.யின் தந்தை முக்கிய பொறுப்பேற்று செயல்பட்டதால், கே.ஆர்.வி. மனதில் சுதந்திரப் போராட்ட இயக்கம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதன் காரணமாக, பத்தாண்டுகள் பணிபுரிந்த அரசுப் பணியைவிட்டு, சுதந்திரப் போராட்ட வீரர் கோபாலகிருஷ்ண கோகலேயால் தோற்றுவிக்கப்பட்ட "இந்திய ஊழியர் சங்கத்தில்' முழுநேர ஊழியராக, ஆயுட்கால உறுப்பினராகத் தன்னை இணைத்துக்கொண்டு, 12 ஆண்டுகள் பணியாற்றி, பின் அதிலிருந்து விலகினார்.இந்திய ஊழியர் சங்கத்தில் பணியாற்றியபோது, கே.ஆர்.வி.யின் பெயரும், புகழும் உயர்ந்துகொண்டே போனது. இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து பயணம் செய்து மக்களுக்காகப் பொதுப்பணியாற்றினார். தில்லி, கேரளம், ஒரிசா வரை அரசியலிலும், பொது வாழ்விலும் முக்கிய அங்கம் வகித்த பெரிய மனிதர்களோடு கே.ஆர்.வி.க்குத் தொடர்பு ஏற்பட்டது.
12 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் இருந்துவிட்டு, தான் பணியாற்றிய தொண்டு நிறுவனத்திலேயே முக்கிய பொறுப்பிலிருந்த ஒரு சிலரின் சுயநலப் போக்கையும், இயக்கத்தையே சுரண்டும் மனப்பான்மையையும் கண்டு மனம் வெதும்பி, இந்திய ஊழியர் சங்கத்திலிருந்து விலகினார். அதன்பிறகுதான் பத்திரிகைத்துறையில் தடம்பதித்தார். நாகபுரியிலுள்ள நாக்பூர் டைம்ஸ், ஹிதவாதா ஆகிய ஆங்கில நாளிதழ்களிலும், பின்னர் சண்டீகரில் "தி டிரிப்யூன்' என்ற நாளிதழிலும் பணியாற்றினார். நெருக்கடி காலகட்டத்தில் சென்னை வந்து, "தினமணி'யில் (ஏ.என்.எஸ். ஆசிரியராக இருந்தபோது) உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். தினமணி கதிரிலிருந்து எழுத்தாளர் "சாவி' விலகிய பிறகு, கே.ஆர்.வி. அதன்
ஆசிரியராக ஆனார்.
பத்தாண்டுகள் ஆங்கில நாளிதழ்களில் பணிபுரிந்த பிறகு, அதே திறமையுடனும் புலமையுடனும் தமிழ் நாளிதழ்களிலும் பணிபுரிந்து தரம் வாய்ந்த இலக்கிய நயம்மிக்கக் கட்டுரைகள் பலவற்றை
எழுதினார்.
பிறகு, "புஷ்யம்' என்ற (மாதம் இருமுறை) இதழை தானே நடத்தி மிகப்பெரிய அளவில் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்தார். 1979 முதல் மறைவு வரை "ரத்னபாலா' என்ற சிறுவர் மாத இதழின் ஆசிரியராக இருந்து குழந்தை இலக்கியத்திலும் தனி முத்திரை பதித்தார்.
தேசத் தலைவர்கள், தமிழக மந்திரிகள், பெரும் பாடகர்கள், துறவிகள் என்று அவரைத் தேடி வருவோர் பட்டியல் மிக நீண்டது. மரபுக் கவிதைகளை மிகவும் விரும்பினார்; அத்தகைய கவிதைகளை எழுதுபவர்களை எல்லாம் கண்டுபிடித்து ஊக்கமளித்தார்.
இவருக்கு 3 மகன்களும் 6 மகள்களும் உள்ளனர். இவர்களுள் டாக்டர் வா.மைத்ரேயன் நாடாளுமன்ற மாநிலங் களவை உறுப்பினராக (அ.தி.மு.க.) உள்ளார்.
""மரத்திற்கு இலைகள் போன்று, இயற்கையாகக் கவிதை வரவில்லையானால், அது வராமற்போவதே நல்லது என்று ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ் சொல்லியுள்ளார். கவிதையானது, எவ்வாறு பிறக்கிறது என்பதை நாம் அறிவோமானால், இதன் கருத்தைப் புரிந்துகொள்ள முடியும். உணர்ச்சிகள் அல்லது மற்ற கருவிகளின் மூலம் அல்லாமல், தெய்வீக அருளினால் மட்டுமே உண்மையான கவிதை தோன்றுகிறது. தன்னை மறந்த பரவச நிலையில் முற்றிலும் கவிஞன் இருக்கும்போது திடீரென்று எதிர்பாராது உயிர்ப்புடன் கூடிய ஆக்கும் சக்தியைப் படைத்த அலையாகப் பாய்ந்து வரும். இங்ஙனம் கருத்து அலைகள் பாய்ந்து வரும் நிலை, மகத்தான அருள்
நிலையே ஆகும்'' என்ற கே.ஆர்.வி.யின் "கவிதைப் பிறக்கிறது' என்கிற கட்டுரை முத்திரை பதித்தப் பதிவு!
இவருடைய இலக்கியப் படைப்புகள்: இதயமலர், காவியத் தென்றல், காலம் தந்த தலைவன், வேதம் பிறந்தது, பிருந்தாவனமும் நந்த குமாரனும், தொன் பாஸ்கோ, தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள் (நேரு இந்திராவுக்கு எழுதிய கடிதங்களின் மொழிபெயர்ப்பு).
எழுத்தாளர்கள் பலருடைய எழுத்துகளுக்கு ஒளிகொடுத்த கே.ஆர்.வி., என்ற அந்த மாமனிதர், 1987-ஆம் ஆண்டு ஆகஸ்டு 19-ஆம் தேதி காலமானார்.
"தோன்றிப் புகழொடு தோன்றுக' என்ற வள்ளுவரின் வாக்கை மெய்ப்பித்த கே.ஆர்.வி.யை மறக்கத்தான் முடியுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.