தும்மல் விளைவித்த ஊடல்!

தும்மல்' என்ற செயல் உடற்கூற்றியல் சார்ந்த நிகழ்வு. அளவுக்கு மீறிய நெடியைத் தாங்கமுடியாமல், அதை முகர்வதால் மூச்சு விடுவதில் உருவாகும் தடையழர்ச்சியின் வெளிப்பாடாக, திணறல் ஏற்பட்டு அதை, விடுவிக்க மூக்கும
தும்மல் விளைவித்த ஊடல்!

தும்மல்' என்ற செயல் உடற்கூற்றியல் சார்ந்த நிகழ்வு. அளவுக்கு மீறிய நெடியைத் தாங்கமுடியாமல், அதை முகர்வதால் மூச்சு விடுவதில் உருவாகும் தடையழர்ச்சியின் வெளிப்பாடாக, திணறல் ஏற்பட்டு அதை, விடுவிக்க மூக்கும் வாயும் முழு ஆற்றலுடன் மூச்சை வெளியேற்றுவதால் உண்டாவது. தும்மல், "நீர்க்கோவை'யாலும் (ஜலதோஷம்) ஏற்படும். இஃதன்றி, காற்று மாசு, சுற்றுச்சூழல், உணவு, உடை, அணிகலன் இவற்றின் ஒவ்வாமையாலும் தும்மல் வரும். இவைதவிர மனவியல் காரணங்களாலும் தும்மல் உருவாகும் என்று கூறப்படுகிறது.

÷மங்களகரமான செயல்களைப் பற்றிப் பேசும்போது தும்மல் போடுபவர்கள் கடிந்துகொள்ளப்படுவதும் நடைமுறையில் உள்ளது. தும்முபவர் ஒற்றைத் தும்மலுடன் நிறுத்திவிடாமல், மேலும் ஓர் தும்மலைப் போட்டால் அதை நற்சகுனமாக ஏற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. குழந்தைகள் தும்மினால் அக்குழந்தைகளை ""நூறாண்டு வாழ்க!'' என்று குடும்பத்தினர் வாழ்த்தும் வழக்கம் இன்றும் உள்ளது. ஆனால், தும்மல் குறித்து திருவள்ளுவர் என்ன கூறியுள்ளார் என்பதைக் காண்போம்.

÷தலைவனும் தலைவியும் ஊடல்கொண்டு ஒருவருடன் ஒருவர் பேசுவதைத் தவிர்த்து இருக்கின்றனர். வழக்கம்போல தலைவன்தான் தன் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து, தான் சமாதானத்துக்குத் தயார் என்பதை உணர்த்த ஓர் உபாயம் கண்டுபிடிக்கிறான். தும்மல் போட்டால் அவரை வாழ்த்தும் பொருட்டு ""வாழ்க பல்லாண்டு!'' என்று கூறுதல் வழக்கத்தில் உள்ளதால், தலைவன் செயற்கையாக ஓர் தும்மலை வரவழைத்து தலைவியின் காதுகளில் ஒலிக்கும்படியாகப் பேரிரைச்சலுடன் தும்முகிறான்.

÷தலைவிக்கு, தலைவனின் நோக்கம் புரிந்துவிட்டது. அவரோடு நான் பேசாதிருக்கிறேன் ஆகையால், தம்மை ""நெடுங்காலம் வாழ்க'' என்று நான் வாய்திறந்து சொல்லவாவது அவரோடு நான் பேசுவேன் என நினைத்து அவர் தும்மினார் போலும்' என எண்ணினாள்.

""ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை

நீடுவாழ்க என்பாக்கு அறிந்து'' (1312)

இவ்வாறு அவர்கள் ஊடலுக்கு விடைகொடுத்துவிட்டுக் கூடிக்களித்து வாழும் நிலையில், ஒருநாள் தலைவன் எதேச்சையாக ஓர் தும்மலை வெளிப்படுத்தினான். தலைவியும் அனிச்சைச் செயலாக தலைவனுக்குத் தன் வாழ்த்தைத் தெரிவித்தாள். ஆனால், உடனே அவளுள் ஓர் ஐயம் தோன்றியது. நாம் அருகிலேயே இருக்கிறோம். இந்நிலையில் இவர் தும்முகிறார் என்றால், இவரை வேறு யாரோ ஒரு மையல்கொண்ட தையல் நினைக்கிறாள் என்றுதானே பொருள் என முடிவு செய்கிறாள். உடனே தாம் கொடுத்த வாழ்த்தை அழித்துவிடுகிறாள். தலைவனை நோக்கி, ""உங்கள்பால் காதல்கொண்ட வேறு மங்கை எவளோ ஒருத்தி உங்களை நினைத்த காரணத்தால்தானே தும்மினீர்?'' என்று அழுது புலம்புகிறாள். தும்மலால் நேர்ந்த இந்தத் துன்ப நிகழ்வைக் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார் வள்ளுவர்.

""வழுத்தினாள் தும்மினேனாக அழித்து அழுதாள்

யார்உள்ளித் தும்மினீர் என்று'' (1317)

இதுகேட்டுப் பதறிப்போன தலைவன், தனது தும்மல் இயற்கையாக ஏற்பட்டதுதான் என்றும், தனக்கு வேறு எந்தப் பெண்ணுடனும் தொடர்பு இல்லை என்றும் தெளிவுபடுத்தி, தலைவியை சமாதானப்படுத்தினான். இந்தத் தும்மலை இயற்கைதான் என்பதை தலைவி புரிந்துகொண்டாள் என்று மகிழ்ந்தவனுக்கு அடுத்தும் ஓர் தும்மல் வரப்பார்த்தது. ஐயகோ.. இப்போதுதான் முந்தைய தும்மலால் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்திருக்கிறது; மீண்டும் ஓர் தும்மலா? மீண்டும் சிக்கல் உருவாகுமே என்று எண்ணி, வந்த தும்மலை அடக்க முயன்றான். ÷இதைப் பார்த்துக்கொண்டிருந்த தலைவி, ""உங்களை யாரோ காதலுடன் நினைக்கிறார்கள்; அதனால்தான் தும்மல் வருகிறது. ஆனால் நான் கேட்டுவிடுவேனோ என்பதற்காக அதை மறைக்கப் பார்க்கிறீர்'' என்று கோபத்தை வெளிப்படுத்தும் முகத்தான் அழுது மீண்டும் ஊடல் கொள்கிறாள்.

""தும்மச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

எம்மை மறைத்திரோ என்று'' (1318)

தும்மல் போடுவதில் இத்தனை நுட்பமான செய்திகளா? தும்மல் வந்தால் இனி காலம், நேரம் பார்த்துத்தான் தும்ம வேண்டும் போலிருக்கிறது!

"அடி'களின் பெருமை!

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் - இளங்கோவடிகள்

சிலப்பதிகாரத்தில் வரும் பெண் துறவி - கவுந்தியடிகள்

திருநாவுக்கரசு சுவாமியைப் போற்றி, பக்தி செய்தவர் - அப்பூதியடிகள்

முதன் முதலில் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் - மறைமலையடிகள்

இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர் - காந்தியடிகள்

இசைத் தமிழ் நூலான "யாழ்' நூலை எழுதியவர் - விபுலானந்த அடிகள்.

வடலூரில் சமரச சன்மார்க சத்திய ஞான சபையை நிறுவியவர் - இராமலிங்க அடிகள்.

மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமையத் தூண்டுகோலாக இருந்தவர் - ஞானியாரடிகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com