

நன்னன் ஒரு போர் வீரன். நல்ல உடல் வலிமையும், உள்ள உறுதியும் உடைய இவனுக்குப் போரிடுவதில் பெரும் விருப்பம். போரில் பகைவரின் வேலாலும் வாளாலும் காயப்பட வேண்டும் என்பது இவனது குறிக்கோள். அப்படிப் புண்பட்ட நாள்கள்தான் இவனுக்குப் பண்பட்ட நாள்களாம்; அந்நாள்களே இவனின் வாழும் நாள்களாம். போர் இல்லை என்றால் புண்கள் இல்லை அல்லவா? அதனால்தான் அந்நாள்கள் அவனைப் பொறுத்த அளவில் "வாழாத நாள்கள்' ஆகின்றன. இக்கருத்தை வள்ளுவர்,
÷
""விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள
வைக்கும்தன் நாளை எடுத்து'' (776)
÷
என்று கூறியுள்ளார். இக் குறளோடு இணைத்துப் பார்க்க வேண்டிய புறநானூற்று நிகழ்ச்சி-காட்சி ஒன்று உள்ளது. ஓர் இளைஞன் தன் நண்பனது இல்லத்துக்குச் சென்று அவன் தாயிடம் ""அம்மா! உங்கள் மகன் எங்கே போயிருக்கிறான்; நான் அவனைப் பார்க்க வேண்டும்'' என்றான். உடனே அத்தாய், ""என் மகன் எங்கே இருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது. புலி இருந்துபோன மலைக்குகை போல் அவனைப் பெற்ற வயிறு இதுதான். அதனால் அவனைப் போர்க்களத்தில்தான் பார்க்கலாம். அவனைப் பார்க்க வேண்டும் என்றால் அங்கே போய்ப்பார்'' என்பதை இவ்வாறு உணர்த்துகிறாள்.
÷
""......... ........ ........ நின்மகன்
யாண்டுள னோஎன வினவுதி என்மகன்
யாண்டுளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போக்களத் தானே''
(புறம்-86)
÷
இனி, குறுந்தொகையில் ஒரு காட்சி: எடுப்பான தோற்றமும் எழில் கொஞ்சும் அழகும் உடைய அவன், பேராற்றல் பெற்றவன். அவன் மனைவியைப் பிரிந்து பொருள்தேட வேறு நாடு செல்கிறான். அதுவரை இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் வாழ்ந்தவர்கள். என்றாலும் பொருள் சம்பாதிக்க வேண்டும் என்றால் பிரிந்துதானே ஆகவேண்டும்?
÷பிரிந்து சென்ற அவன், பொருள் தேடும் முயற்சியில் முழுமையாக ஈடுபடுகிறான். நாள்கள் செல்கின்றன. மழைக்காலத்தின் அறிகுறிகள் தென்படுகின்றன. அதனால் அவன் தன் கடமையை விரைந்து முடித்துவிட்டு, தன் மனைவியை நாடித் தேரேறி விரைகிறான். அவன் உள்ளமோ அவளைப் பார்க்கத் துடிக்கிறது.
÷தேர் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது அவன் தன் தேர்ப்பாகனிடம் இப்படிக் கூறுகிறான்: ""மழை பெய்த கொல்லையில் பூத்த முல்லைக் கொடியின் பசுமையான அரும்பின் மணம்வீசும் நல்ல நெற்றியை உடையவள் என் தலைவி. அவளுடைய இரண்டு தோள்களில் நான் உறங்கிக்கழித்த நாள்களே இந்த உலகத்தில் நான் வாழ்ந்த நாள்களாகும். மற்ற நாள்கள் எல்லாம் எனக்குப் பதர் போன்ற நாள்களாகும்'' (பதர் போன்ற நாள்கள் என்பதற்குப் பயன்படுத்தாது வீணே கழிந்த வாழாத நாள்கள் என்பது பொருள்) என்கிறான். பாடல் இதுதான்:
÷
""எல்லாம் என்னோ பதடி வைகல்
....... .......... ..........
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசுமுகைத் தாது நாறு நறுநுதல்
அரிவை தோளினைத் துஞ்சிக்
கழித்த நாள்இவண் வாழும்நாளே!''
(குறுந்.323)
÷
ஒருவன் போரிடாத நாள்கள் வாழாத நாள்கள் ஆகின்றன; மற்றொருவனோ மனைவியோடு இல்லாத நாள்கள் வாழாத நாள்கள் என்கிறான். ஒருவனிடம் வீரமும், மற்றொருவனிடம் காதலும் ஓங்கி இருப்பதைக் காணும்போது, சங்ககாலத் தமிழரிடையே காதலும், வீரமும் வாழ்க்கை நெறியாக இருந்துள்ளதை நன்கு அறியமுடிகிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.