கம்பர் காலம் - 1

கம்பர் காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி இன்னும் முடிவுறவில்லை. எனினும், சில அகச் சான்றுகளைக் கொண்டு கம்பர் மூன்றாம் குலோத்துங்கன் (1178-1216) காலத்தவர் என்றும், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகியவர்களுடைய முதுமை
கம்பர் காலம் - 1
Published on
Updated on
2 min read

கம்பர் காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி இன்னும் முடிவுறவில்லை. எனினும், சில அகச் சான்றுகளைக் கொண்டு கம்பர் மூன்றாம் குலோத்துங்கன் (1178-1216) காலத்தவர் என்றும், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகியவர்களுடைய முதுமைக் காலத்தில் உடன் வாழ்ந்தவர் என்றும் சில ஆய்வாளர்கள் முடிவு கட்டியுள்ளனர்'' என்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை, "தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்' என்ற தமது நூலில் (பக்.368) ஆய்வின் முடிவாகக் கூறியுள்ளார்.

 ÷கம்பர் காலம் குறித்துப் பெரும்பாலான ஆய்வாளர்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டு என்பதையே ஒப்புக்கொண்டுள்ளனர். கம்பர் காலம்பற்றி அறிஞர் அ.ச.ஞானசம்பந்தன், திருச்சிற்றம்பலம், மு.அருணாசலம் முதலியோர் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், மு.இராகவையங்கார், ரா.இராகவையங்கார், எஸ்.வையாபுரிப்பிள்ளை, சி.கே.சுப்பிரமணிய முதலியார், டாக்டர் மா.இராசமாணிக்கனார் போன்றோர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டுக் கொள்கைகளை உடையவராயுள்ளனர்.

 ÷கம்பர் காலம் 9-ஆம் நூற்றாண்டே என்பது "கம்பன் அடிப்பொடி' சா.கணேசனின் கொள்கை. இது காரைக்குடி கம்பன் கழகத்தின் கொள்கை. ""இந்திய அரசு வெளியிட்ட கம்பர் தபால் தலையிலும் 9-ஆம் நூற்றாண்டு 9ற்ட் இஉசபமதவ அ.ஈ என்று அச்சிடப் பெற்றுள்ளது (கம்பன் அடிப்பொடி கைவண்ணம்)''

 என்று தவத்திரு ஊரனடிகள் தமது "கம்பரும் வள்ளலாரும்' என்ற நூலில் (பக்.11) குறிப்பிட்டுள்ளார்.

 ÷கம்பர் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு என்று கூறுவதற்கு சான்றுகள் ஏதும் இல்லை. திருக்கோடிக்கா கல்வெட்டு ஒன்று சடையப்ப வள்ளலைப் பற்றிய செய்தி ஒன்றைக் கூறுகிறது. இதை வைத்தே கம்பன் அடிப்பொடி கி.பி. 9-ஆம் நூற்றாண்டு என்று முடிவு செய்திருக்கலாம்.

 ÷முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் வேறு; மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த - கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல் வேறு என்பதை ஆய்வாளர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், சேக்கிழார் வாழ்ந்த காலம் 12-ஆம் நூற்றாண்டு என்பது பெரும்பாலான ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

 ÷அதன்படி, கம்பராமாயணத்தில் திருத்தொண்டர் புராணத்தின் தாக்கம் அதிகம் உள்ளதால் கம்பர் சேக்கிழார் காலத்துக்குப் பிற்பட்டவர்தான் என்பதை முடிவு செய்யலாம். இது பற்றி பெரியபுராணப் பேருரையாளர் சி.கே.சுப்பிரமணிய முதலியார், ""கம்பர் சேக்கிழாருக்குப் பின் 40 அல்லது 50 ஆண்டுகளில் வாழ்ந்திருத்தல் கூடும்'' என்று எழுதியுள்ளார்.

 ÷கம்பர் காலம் 9-ஆம் நூற்றாண்டாக இருந்தால், சேக்கிழாரையும் திருத்தொண்டர் புராணத்தையும் அவர் அறிந்திருக்க இயலாது. கம்பராமாயணத்தில் பெரிய புராணத்தின் தாக்கம் இருந்திருக்காது. கம்பர் காலம் 12-ஆம் நூற்றாண்டாக இருந்தால், அதிலும் சேக்கிழாருக்கு முற்பட்டவராக இருந்தால் சேக்கிழாரைப் பற்றியும் பெரியபுராணத்தைப் பற்றியும் கம்பர் அறிந்திருக்க இயலாது.

 ÷கம்பர் பெரியபுராணத்தின் சாயலில்தான் கம்பராமாயணத்தை எழுதியுள்ளார் என்பதற்கு "கம்பரில் சேக்கிழார்' என்னும் தலைப்பில் பாலூர் கண்ணப்ப முதலியாரின் சொற்பொழிவுக் கட்டுரைகள் மிகச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது. அதற்கு அவர், ""சிந்தாமணியில் ஒரு தூண்டுதல் பெற்றதும், கம்பராமாயணத்துக்கு ஒரு தூண்டுதலாய் அமைந்திருந்ததுமாகிய பெரியபுராணம்'' என்று டாக்டர் ந.சஞ்சீவி எழுதிய குறிப்பைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ÷கம்பரைப் பற்றி ஆய்வு செய்தவர் ஆய்வாளர் டாக்டர் சு.குலசேகரன். அவர் "தமிழின் பொற்காலத்தில் ராமானுஜரும், கம்பனும் காலம்- காலநிலை ஆராய்ச்சி' என்ற நூலை 1998-இல் எழுதி வெளியிட்டுள்ளார்.

 ÷அவரது ஆய்வு முடிவுப்படி, சேக்கிழார் முந்தையவர் என்பதும், கம்பர் காலத்தால் பிந்தையவர் என்பதும் தெரிய வருகிறது. ஆகவே, கம்பர் காலம் 12-ஆம் நூற்றாண்டு என்பதும்; சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகியோர் கம்பர் காலத்தவர் என்பதும் ஏற்புடையதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com