

கம்பர் 12-ஆம் நூற்றாண்டினர் என அபிதான சிந்தாமணி (பக்.349), தமிழ்ப் புலவர் அகராதி (பக். 98), தமிழ் இலக்கிய அகராதி (பக்.27), தமிழ் இலக்கிய வரலாறு (டாக்டர் ச.சாமிமுத்து (பக்.220), கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம் (தவத்திரு குன்றக்குடி அடிகளார், பக்.13), சோழர் வரலாறு (டாக்டர் மா.இராசமாணிக்கனார், பக்.324, 330, 331, 332) முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன.
÷கம்பர் 9-ஆம் நூற்றாண்டு மற்றும் 12-ஆம் நூற்றாண்டினர் எனத் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் (மது.ச.விமலானந்தம், பக்.197, தமிழண்ணல், பக்.209, டாக்டர் பூவண்ணன், பக்.202) கூறுகின்றன. இவ்வாறே இலக்கிய வரலாற்று நூல்கள் பலவும் எந்த நூற்றாண்டு என அறுதியிட்டு உறுதியாகக் கூறவில்லை.
÷கம்பர் 9-ஆம் நூற்றாண்டினர் எனக் கம்பன் அறநிலை பதிப்பித்த கம்பராமாயணம் பாலகாண்ட உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டாக்டர் துரை.இராசாராம் என்பவர் எழுதியுள்ள கம்பனின் சிற்றிலக்கியங்கள் (பக்.3,4) என்னும் நூலில் கம்பர் என்ற பெயரில் மூவர் இருந்ததாகவும், அவர்கள் முறையே 9-ஆம் நூற்றாண்டு, 12-ஆம் நூற்றாண்டு, 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தனர் எனவும், 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரே கம்பராமாயணம் எழுதிய கம்பர் எனவும் குறிப்பிடுகிறார்.
÷தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள (மறுபதிப்பு-2004) 10-ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் (பக்.48) 12-ஆம் நூற்றாண்டுக்கு இலக்கிய, கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன எனவும், 9-ஆம் நூற்றாண்டெனக் கருதுவாரும் உண்டெனக் கூறுகிறது. ஆனால், 12-ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் (திருத்திய பதிப்பு-2007) 12-ஆம் நூற்றாண்டெனத் தெளிவாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது.
÷ஆங்கில இணையதளங்கள் அனைத்தும் கம்பர் 12-ஆம் நூற்றாண்டினர் எனக் கூறுகின்றன. இச்சான்றுகளில், 9-ஆம் நூற்றாண்டிற்கான சான்றுகள் மிகமிகக் குறைவாகவே கூறப்பட்டுள்ளன. ஆனால், கம்பர் 12-ஆம் நூற்றாண்டினர் என்பதற்கு இலக்கியங்களும் வரலாற்றுச் சான்றுகளும் மூன்றாம் குலோத்துங்கன் வாழ்ந்த காலத்தில் (கி.பி. 1178-1218) வாழ்ந்தவர் கம்பர் எனவும், கம்பரின் காலம் கி.பி. 1180-1250 எனவும் குறிப்பிடுகின்றன. மூன்றாம் குலோத்துங்கனின் மகள் அமராவதியையே கம்பனின் மகன் அம்பிகாபதி காதலித்தான் எனவும், இதனால் குலோத்துங்கனுக்கும் கம்பருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கம்பர் காகதீய மன்னனான முதல் பிராதபருத்திரனிடம் (கி.பி. 1162-1197) சென்று தங்கியிருந்தார் எனவும் கூறப்பட்டுள்ளன.
÷மேற்கூறிய அனைத்துக் கருத்துகளையும் ஒப்புநோக்கும்போது, ""இராமாயணம் உள்ளளவும் - கம்பர் பெயர் உள்ளளவும் குலோத்துங்கன் பெயர் நின்று நிலவும் அன்றோ'' என டாக்டர் மா.இராசமாணிக்கனார், தம் "சோழர் வரலாறு' என்ற நூலில் குறிப்பிட்டுள்ள வரிகளும், கம்பரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வான அம்பிகாபதி-அமராவதி காதலும், கம்பர் 12-ஆம் நூற்றாண்டினர் எனத் தெள்ளத் தெளிவாகவும் அங்கை நெல்லியென ஐயந்திரிபற அறிவிக்கின்றன.
÷கம்பர் 12-ஆம் நூற்றாண்டினர் என ஐயந்திரிபின்றித் தெளிவாகவும் உறுதியாகவும் தற்போதைய பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று அறிஞர்கள் ஐயத்திற்கிடமின்றி உறுதியாகக் கூறும்வரை, இருவேறு கருத்திற்கு இடமின்றிக் கம்பர் காலம் 12-ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.