"ஐம்பால்' என்பது...

"ஐம்பால்' என்பது மகளிர் கூந்தலையும் "ஐம்பாலார்' என்பது மகளிரையும் குறிப்பதை சங்க நூல்களில் காணலாம். ""இவன் இவள் ஐம்பால் பற்றவும்'' (குறுந்.229:1) ""தேங்கமழ் ஐம்பால் பற்றி'' (நற்.100:4) ""வதுவை நாறும்
"ஐம்பால்' என்பது...
Updated on
2 min read

"ஐம்பால்' என்பது மகளிர் கூந்தலையும் "ஐம்பாலார்' என்பது மகளிரையும் குறிப்பதை சங்க நூல்களில் காணலாம்.

""இவன் இவள் ஐம்பால் பற்றவும்'' (குறுந்.229:1)

""தேங்கமழ் ஐம்பால் பற்றி'' (நற்.100:4)

""வதுவை நாறும் வண்டுகமழ் ஐம்பால்'' (மலைபடு.30)

""மணங்கமழ் ஐம்பாலார்'' (கலி.131:39)

""வணர்ந்து ஒலி ஐம்பாலாள்'' (கலி.140:27)

என வருவன இதற்குச் சான்றுகள். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள "ஐம்பால்' என்பதற்கு வெவ்வேறு வகையில் பொருள் கூறப்படுகிறது. குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை எனக் கூந்தலை ஐவகைப்படுத்தி முடித்தலால் "ஐம்பால்' என்னும் பெயர் வந்ததாக நச்சினார்க்கினியர் (சீவக.2436 உரை) கூறுகிறார். குழலையும் அளகத்தையும் வகுத்தும், கொண்டையைத் தொகுத்தும், பனிச்சையையும், துஞ்சையையும் விரித்தும் முடிப்பர் என்று அவர் மேலும் விளக்குகிறார்.

""கொண்டை, சுருள், குழல், பனிச்சை, வார்மயிர்'' எனத் திவாகர நிகண்டு (12:71) ஐம்பாலை வகைப்படுத்துகிறது. பிங்கல நிகண்டு என்னும் நூலோ, ""முடி, குழல், தொங்கல், பனிச்சை, சுருள்'' (5:345) எனச் சுட்டுகிறது. நச்சினார்க்கினியர் கூறிய அளகம், துஞ்சை முதலிய வகைப்பாடுகள் நிகண்டில் இல்லை. நிகண்டுகள் கூறும் சுருள், வார்மயிர், முடி, தொங்கல் என்பன நச்சினார்க்கினியர் உரையில் காணப்படவில்லை.

மேற்கண்டவாறு கூறப்படும் ஐவகையான முடியலங்காரத்துக்கு (கூந்தலை முடிக்கும் வகை) பதிலாகக் கூந்தலுக்குரிய ஐந்து வகையான இயல்புகளையே ஐம்பால் என்னும் சொல் குறிப்பதாகச் சிலர் பொருள் கொண்டுள்ளனர்.

""முன்னர் காட்டிய குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என்பன கூந்தலுக்குரிய இயற்கைப் பண்புகள் அல்ல என்றும், அவை செயற்கையாகச் செய்துகொள்ளப்படுவனவே என்றும், பெண் ஒருவரே ஒரே காலத்தில் தம் கூந்தலை ஐந்து வகையாக முடித்துக்கொள்ளும் வழக்கில்லை'' என்றும் குறிப்பிடும் வே.மு.ஸ்ரீநிவாச முதலியார் "ஐம்பால்' என்பதற்குத் தாம் பன்னாள் ஆய்ந்துகொண்ட - தெளிந்த பொருளாகப் பின்வரும் ஐந்து இயல்புகளை வரிசைப்படுத்துகிறார். அவை: கருமை, நெடுமை, மொய்ம்மை (அடர்த்தி), மென்மை, அறன்மை (வெள்ளம் வற்றிய ஆற்றில் மணலின் செறிவு படிப்படியாய்ப் படிந்திருத்தல்போல, மகளிர் கூந்தல் படிப்படியாய்ப் படிந்து இருக்கும் ஒருவகைப் பண்பு) இவையாவும் பெண்களின் கூந்தலுக்குரிய இயற்கைப் பண்புகள் என்பதும், இவைகளை மாதர் ஒருவரின் கூந்தலின்கண் ஒரே காலத்தில் காணலாம்'' என்பதும் அவர் முடிவு (நூல்: திவ்யப் பிரபந்தமும் திவ்யார்த்த தீபிகை உரையும், பக்.141-142).

அவரின் இம்முடிவை ஏற்றுக்கொண்ட உவமைக் கவிஞர் சுரதா, "ஐம்பால்' என்னும் தலைப்பில் அப்படியே அழகிய கவிதை ஒன்றைப் படைத்துள்ளார்.

""கண்கவர் கூந்தல் கறுத்தி ருத்தல்

நெளிவொடு கருங்குழல் நீண்டி ருத்தல்

அழகொடு கூந்தல் அடர்ந்தி ருத்தல்

மென்மை கொண்டு மெத்தென் றிருத்தல்

வழிந்தோடும் வெள்ளம் வற்றிவிட்டதோர்

ஆற்றின் இளமணல் படிந்திருத்த லாகிய

ஐவகைப் பண்புகள் அமைந்த காரணத்தால்

அழகிய கூந்தலை ஐம்பால் என்றனர்''

(தேன்மழை, பக்.17)

இவ்வாறு பாடும் கவிஞர் சுரதா, கூந்தலைக் கொண்டை, பனிச்சை என ஐவகையாக முடித்தலால் ஐம்பால் என்றே பெயர் பெற்றதாகக் கூறுவோரை, "இருண்ட கூந்தலின் இயல்பறியாதோரே' என்றும் சாடுகிறார். தமிழ் ஆய்வுலகம் இதுபற்றி மேலும் சிந்திக்குமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com